மேலே.மேகத்தில். உயரத்தில். உச்சியில்.

4 comments

இந்த கட்டுரையில் வரும் நிகழ்வுகள் கட்டுக் கதையும் இல்லை, துளி கற்பனையும் இல்லை. அப்ப வேற என்ன? நிஜமா? இல்லவே இல்லை.

இது ஒரு சொப்பனம்.

எல்லாம் ஆயிற்று. நொடி நேரத்தில், கண பொழுதில். ஏசப்பா வந்துட்டாங்க போல! ஜிவ் - என்று எடுத்துக்கொள்ளப்படுகிறேன். ரொம்ப சந்தோஷம். ஏசப்பா வந்துட்டாங்க, ஏசப்பா வந்துட்டாங்க என்று ஒரே சந்தோஷம். பக்கத்தில் பார்க்கிறேன் கணவர், பிள்ளைகள் உடன் இருக்கிறார்களா என்று. அவர்களை காணவில்லை. ஐயோ, அவர்கள் எங்கே, நான் மட்டும் தனியாக எங்கே என்ற நினைப்பு சின்னதாய் வந்து போகிறது.

மேலே எழும்ப எழும்ப உற்சாகம், சந்தோஷம். மேலே போக போக பூமி உருண்டையின் விளிம்பு தெரிகிறது. இன்னும் பலரும் இப்படி மேலாக வருவதும் தெரிகிறது.

மேலே.மேகத்தில். உயரத்தில். உச்சியில். மேகங்களுக்கு நடுவில். வரிசை வரிசையாக ஆட்கள் நிற்கிறார்கள். நானும் போய் ஒரு வரிசையில் நிற்கிறேன்.

நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நிறைய பேர் துக்கமாக நிற்கிறார்கள். அனேகர் ஒரு ஓரமாக படுத்துக்கிடக்கிறார்கள். பெரும்பாலானோர் வெள்ளை உடைகள் அணிந்திருக்கிறார்கள். வேறு நிறங்களிலும் வந்திருக்கிறார்கள். நான் என்ன அணிந்திருக்கிறேன் என்பது தெரியவில்லை.

படுத்துக்கிடப்பவர்களை ஒரு நோட்டும் கையுமாக சிலர் சென்று கவனிக்கிறார்கள். ஏதோ எழுதிக்கொள்கிறார்கள் புத்தகத்தில். படுத்துக்கிடப்பவர்கள் அநேகமாக கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படுகிறார்கள். வரிசையில் நிற்கும் யாரோ சொல்கிறார்கள், இவர்கள் சுகம் இல்லாதவர்கள், அதனால் தான் அவர்களை படுக்க வைத்திருக்கிறார்கள் என்று.

எதுவும் எனக்கு கவலை இல்லை. மேகமூட்டமா, புகையா என்பது தெரியவில்லை, மொத்தமாய் ஒரு அமைதி நிலவுகிறது.

பல இடங்களில் இருந்தும் பல வரிசைகள் வந்து ஓரிடத்தில் சேர்கிறது. வரிசைகள் வந்து சேரும் இடத்தில் ஒரு நபர் நிற்கிறார். அவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் இருக்கிறது. பெரிய இராணுவ அதிகாரியாக காணப்படுகிறார். எல்லா இராணுவங்களுக்கும் தலைவர் போல இருக்கிறார். அவர் தான் பெரிய அதிகாரி. அவருக்கு மேல் அதிகாரி இல்லை. இராணுவ உடை தரித்திருக்கிறார்.

வரிசையில் வந்து நிற்கும் ஒவ்வொருவரும் அவரிடம் தான் போய் நிற்கிறார்கள். அவர் ஒவ்வொருவரிடமும் என்னதோ கேட்கிறார். ஒவ்வொருவரும் என்னதோ பதில் சொல்கிறார்கள். அவர்கள் சம்பாஷனை மற்றவர்களுக்கு கேட்கவில்லை. பேசுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. சிலர் கொஞ்சம் அழுவதாய் தெரிகிறது.

அவருக்கு பின்னால் என்னன்னவோ வேலைகள் செய்கிறார்கள் பலரும். மேகத்தில் பறக்கிறார்கள், பேசுகிறார்கள், படுத்துக்கிடப்பவர்களை விசாரிக்கிறார்கள்.

முக்கியமாக ஒரு பெரிய விருந்தோ விஷேஷமோ ஆயத்தப்படுத்துகிறார்கள் போல தெரிகிறது. கல்லியாண வீடுகளில் நடக்குமே அப்படி. யாவரும் வேலை செய்து கொண்டு, ஏதோ முக்கியமாய், என்னவோ செய்துகொண்டு. புகை எழும்பிக்கொண்டு, மனம் பரவி கொண்டு, அப்படி.

என் முறை வருகிறது.

பெரிய அதிகாரியின் முன்பு போய் நிற்கிறேன். ரொம்பவே பெரிய அதிகாரி. சிரிக்க ஒன்னும் செய்யவில்லை. கொஞ்சம் கடினமாகத்தான் முகத்தை வைத்திருக்கிறார். தன் கையில் உள்ள நோட்டில் கேள்விக்குறியோடு ஏதோ எழுதிக்கொள்கிறார்.

எனக்கு திடீரென்று தெரிந்து விடுகிறது. இது ஏசப்பா!!

ஏசப்பா! நீங்க ஏசப்பா தானே?! என்று கேட்கிறேன். பதில் ஒன்றும் இல்லை. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஐயோ, நீங்க ஏசப்பா தான். Can I please hug you (உங்களை கொஞ்சம் கட்டி பிடித்துக்கொள்ளட்டுமா)? என்று கேட்கிறேன். ஏசப்பா பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நான் கட்டி பிடித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை. இறுக்கமாய்.

கண்ணீர் தானாய் வருகிறது. ஆனந்த கண்ணீர். "ஏசப்பா! நான் எப்போ உங்களை நேரில் பார்க்கும்போதும் first கட்டி பிடித்துக்கொள்வேன் என்று எப்பமும் நினைப்பேன். அதான் கட்டி பிடித்து கொள்கிறேன்.", என்று விளக்கம் வேறு தருகிறேன். ஏசப்பா! ஏசப்பா! என்று சந்தோஷத்தில் அழுகிறேன். ரொம்ப சந்தோஷம் வந்தால் அது அழுகையில் தான் போய் நிற்கும் போல.

இதில் ஒன்றுக்கும் ஏசப்பா பதில் சொல்லவில்லை. என்னை கட்டி அணைக்கவுமில்லை. சிரிக்கக்கூட இல்லை. மீண்டும் தன் கையில் உள்ள நோட்டில் கேள்விக்குறியுடன் ஏதோ எழுதுவதும், கிறுக்குவதுமாக இருக்காங்க.

திடீரென்று என்னை வரிசையின் ஓரமாக தனியாக கூட்டி சென்று, "Something went wrong somewhere. It is not your time yet" என்று சொன்னாங்க. நான் சொன்னேன், "That's arlight! I am okay. I am happy here" என்று. உடனே என் வலது கையை மணிக்கட்டு பகுதியில் பிடித்துக்கொண்டு வேகமா நடந்தாங்க, "Just follow me" என்றும் சொன்னாங்க.

நீளமா படிகள் இருந்தது கீழே போக. படி ஆரம்பத்தில் என் கையை பிடிச்சிருந்தாங்க. ரெண்டு அடி எடுத்து வைத்ததும் கொஞ்சம் முன்னால் நடந்தாங்க. இன்னும் ஒரு திருப்பத்தில் இன்னும் வேகமா முன்னே நடந்தாங்க. அப்புறம் வேகம் வேகமா கொஞ்சம் ரொம்பவே முன்னால் போயிட்டாங்க. அதுக்கு பிறகு நான் அவங்களை பார்க்கவில்லை.

நிறைய படிகள். அதில் ஒரு சிறகு பறப்பது மாதிரி பறந்து, விரிந்து, ஆடி, அசைந்து, சிரமமே இல்லாமல் இன்னும் புரண்டு, பறந்து பறந்து கீழே கீழே இன்னும் கீழே... கடைசியாக பூமியில் வந்து ஒரு தெரு ஓரத்தில் கண்ணை திறக்கிறேன். பணி பெய்து கொண்டிருக்கிறது...

இத்துடன் தூக்கம் கலைந்து நானும் முழிக்கிறேன்.

கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. நிஜமா? இல்லவே இல்லை. இது ஒரு சொப்பனம்.

ஒரு வேதாகம வசனம் நினைவில் வருகிறது: For we must all appear before the judgment seat of Christ, so that each one may receive what is due for what he has done in the body, whether good or evil. 2 Corinthians 5:10

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். II கொரிந்தியர் 5:10


~NRIGirl

தலைகீழ்

6 comments

நேற்று பிள்ளைகளுக்கு விடுமுறை, ஏதோ Teacher's Conference என்று. சரி அவ்வளவு தான் வீடே தலைகீழ் ஆகிவிடும் என்று நினைத்துக் கொண்டேன். சாயங்காலம் வீடு திரும்பும்போது இதயம் கொஞ்சம் வேகமாகவே அடித்துக்கொண்டது. சரி எப்படி கிடந்தால் நமக்கென்ன என்று தைரியமாய் உள்ளே நுழைந்தேன்.

உண்மையிலேயே தலைகீழாகத்தான் இருந்தது - நான் எண்ணியதற்கு தலைகீழாய். அதது அதினதின் இடத்தில் இருந்தது. சமர்த்தாய். சாமர்த்தியமாய். அழகாய். அம்சமாய்.

கொஞ்சம் அசந்து தான் போய் விட்டேன். அடடா நம் பிள்ளைகளா இப்படி என்று கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு உற்சாகம். கடைசியாய் எப்போது இவ்வளவு சந்தோஷப்பட்டேன் எதற்காவது என்று யோசித்து பார்த்தேன், ஒன்றும் கிட்ட வில்லை.

நிம்மதியாய் ஒரு நீண்ட பெருமூச்சு தானாய் வந்தது. அழத்தான் இல்லை போங்கள். அவ்வளவு சம்தோஷம்.

சரி கீழ் வீட்டைத்தான் ஒதுக்கியிருப்பார்கள் என்று மேலே போனால், அது அதற்கு மேல். ஒவ்வொரு அறையும் ஒதுக்கப்பட்டு, துணிகள் எல்லாம் மடிக்கப்பட்டு. அப்பப்பா.

நன்றி நன்றி. மிக்க நன்றி என்று மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக்கொண்டேன். பிள்ளகளே போதும், போதும், ஏதோ தெரியாமல் செய்து விட்டோம் என்று சொல்லாத குறை தான்.

இனி பிழைத்துக்கொள்வேன், பிள்ளைகள் தலை தூக்கி விட்டார்கள் என்று எனக்கு நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன்.

சரி, சரி அதற்கென்ன? இன்னும் இரண்டே நாளில் மீண்டும் தலைகீழ் ஆகப்போகுது, அதற்குள் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களில் யாரையும் சொல்லவில்லை. மற்றவர்களில் சொல்கிறேன். இதைத் தான் Pessimism என்கிறோம். optimism-ன் எதிர்மறை.

Optimists எல்லா விஷயங்களிலும் உள்ள நல்லதை காண்கிறார்கள். Pessimists அனைத்து விஷயங்களிலும் உள்ள குறைகளை பெரிது படுத்துகிறார்கள்.

கல்லூரி காலங்களில் படித்த ஒரு துணுக்கு நியாபகம் வருகிறது: "The optimist sees the doughnut, the pessimist the hole!", என்று. (தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், doughnut என்பது நம்ம அதிரசம் மாதிரி இருக்கும், வட்டமாய், இனிப்பாய். அதின் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். Optimist அதிரசத்தை காண்கிறான், pessimist ஓட்டையை காண்கிறான் என்பது பழமொழி.)

அது இருக்கட்டும், எனக்கொரு சந்தேகம். தமிழில் தலைகீழ் என்ற வார்த்தைக்கு எதிர்மறை தான் என்ன? ஆங்கிலத்தில், "up side down" என்றும் அதின் எதிர்மறையாக "right side up" என்றும் சொல்கிறோம்.

தமிழில் தலைகீழின் எதிர்மறை தலைமேல் என்று சொல்ல முடியாது, அர்த்தம் முற்றிலும் மாறிவிடுகிறது. கால்மேல் என்றும் சொல்லமுடியாது. யோசித்து பார்த்ததில் கால்கீழ் என்பது தான் சரியாக பொருந்துகிறது. ஆனால் அப்படி ஒரு வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை. நீங்கள்?

சரி இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அதிகம் குழப்பிக்கொள்ளாதீர்கள். தலைகீழின் எதிர்மறை என்று சொன்னால் போச்சு...

அப்புறம், சொல்லுங்கள், வேற என்ன விசேஷம்? உங்க வீட்டில் எல்லோரும் சுகமா? உங்க வீடு சுத்தமா இருக்கா?

Great! Enjoy பண்ணுங்க. நாளைக்கு அழுக்காகும்னு நினைச்சு இன்னைக்கு கவலை படாதீங்க. ஒருவேளை தலைகீழாய் கிடந்தாலும் கவலையை விடுங்க. நாளைக்கு சுத்தம் பண்ணினா ஆச்சு...

அன்புடன்,
~NRIGirl

சும்மா ஒரு கடிதம்

4 comments

மணி இப்போது வியாழன் காலை ஏழு மணி நாற்பதொன்று நிமிடம்.

விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை...

வெளியே இன்னும் இருட்டாகத்தான் இருக்கிறது. இருட்டாக என்று சொல்வதைவிட இருட்டிக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.

கொஞ்சம் இருங்கள், ஒரு photo க்ளிக் செய்துவிட்டு வந்து தொடருகிறேன்...

சரி, விஷயத்திற்கு வருகிறேன்...

ம்.. வந்து. அதாவது... விஷயம் ஒன்றும் இல்லை, மன்னிக்கவும்.

சும்மா ஒரு கடிதம் தான் இது. வேலை ஏதும் இல்லாமல் சும்மா அமர்ந்திருப்பதினால் சரி சும்மா ஒரு கடிதமாவது எழுதுவோம் என்று ஆரம்பித்தத்தின் விளைவு...

வார இறுதியில் நடக்க இருக்கும் system upgrade காரணமாக வேலை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. இதுவே வீட்டில் இருந்திருந்தால் எத்தனையோ வேலை செய்திருக்கலாம்.

துவைத்த துணியை காய போட்டிருக்கலாம், காய்ந்த துணியை மடித்திருக்கலாம், மடித்த துணிகளை எடுத்து வைத்திருக்கலாம். ம்ஹூம்.

ஒரு வேளை துணி வேலை செய்ய இஷ்டம் இல்லை என்றால், நல்லதாய் ஒரு சாப்பாடு சமைத்திருக்கலாம். அதையும் விட்டால், கொஞ்சம் தோசை மாவு அரைத்திருக்கலாம், குறைந்த பட்சம் ஊறவாவது போட்டிருக்கலாம் போங்கள்.

ஒன்றும் இல்லாவிட்டால் கொஞ்சம் முறுக்காவது செய்திருக்கலாம். ம்ஹூம்.

சரி அடுப்படி போக இஷ்டம் இல்லை என்றால், ஒதுக்கி வைத்த பொருட்களை எடுத்து ஒரு படம் வரைய ஆரம்பித்திருக்கலாம்.

சரி விடுங்கள். முடியாததை பற்றி யோசித்து என்ன புண்ணியம்.

சென்ற வாரம் church-ல் இருந்து ஒரு women's conference சென்றிருந்தேன். 'What Not To Wear' என்ற தலைப்பில் அருமையாய் நடத்தியிருந்தார்கள். வேண்டா வெறுப்பாய் தான் சென்றிருந்தேன் - ஆனால் நல்ல வேளை miss பண்ணவில்லை என்று எண்ணும்படி இருந்தது.

வேதாகம விளக்கத்தோடு பெண்கள் எப்படி கோபம், பொறாமை, பெருமை, வைராக்கியம், பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற எண்ணங்களை உடுக்கக் கூடாது என்று பேசினார்கள். மிகவும் சிறப்பாக அமைந்தது.

அதில் Group Discussion-க்காக கொடுக்கப்பட்ட ஒரு கேள்வி, "What complicates your life?" (உங்கள் வாழ்க்கையை கடினமாக்குவது எது?) என்பது.

கணவர் என்றும், பிள்ளைகள் என்றும், பணம் என்றும், பதவி என்றும் பல்வேறு கருத்துக்களை பலரும் பரிந்து கொண்டார்கள். பரவாயில்லை அமெரிக்க பெண்களும் நம்மைப் போலவே தான் இருக்கிறார்கள் என்று வியந்து கொண்டேன்.

என் முறை வந்த போது நான் சொன்னேன், "வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது", என்று.

ஐயோ பாவம் என்பது போல் பலரும் பார்த்தார்கள். அது ஒரு சுகவீனம் என்பதாய் ஒருவர் கருத்து கூறினார். அதை நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை. ஒரு வீடு என்றால் அது கட்டாயம் சுத்தமாகத்தானே இருக்க வேண்டும் என்று கேட்டேன். இல்லை என்று மறுக்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆம் என்று சொல்லவும் யாராலும் முடியவில்லை.

ஒரு பாட்டிம்மா சொன்னார்கள், 'ஐயோ நானும் அப்படித்தான் இருந்தேன் ஒரு காலத்தில்", என்று. கடந்த கால வினையில் (past tense-ல்) சொன்னதால், மிகவும் ஆவலுடன், "அப்படியா? பிறகு எப்படி சரியானது?" என்று கேட்டேன். "வேற என்ன, வயதாகி விட்டது, செய்ய முடியவில்லை, அவ்வளவு தான்", என்றார்கள்.

இன்னொரு பாட்டிம்மா, "Life is hard, I tell you" என்று தொடர்ந்தார்கள். "Thank you for your encouraging words", என்று நான் சொல்ல சிரிப்பலை விரிந்து ஓய்ந்தது.

ஆக, என் பிரச்சனைக்கு முடிவில்லை என்பது மட்டும் உறுதி, வயதாவதை தவிர... ம்ஹும்.

வீடும், வீட்டை சுற்றியுமே உலவும் என் சிந்தனைகளை ஒருமைப்படுத்தி, ஓரிடத்தில் அமர வைத்து இன்று வேலை ஒன்றும் இல்லை, சும்மா இரு நாள் முழுதும் என்று சொன்னால் எப்படி இருக்கும், நீங்களே சொல்லுங்கள்.

மணி இப்போது வியாழன் காலை எட்டு மணி இருபத்தாறு நிமிடம்.

வீட்டிற்கு செல்ல மாலை நான்கு மணி ஆகும். வீட்டில் போய் சேர மாலை ஆறு மணி ஆகும். அதுவரை காத்திருக்கும் துணிகளும், தோசை மாவும். பாவம்.

அது வரை சும்மா இருக்கும்,
~NRIGirl

(நண்பர்கள் கவனத்திற்கு: நான் பாவம் என்று சொன்னது என்னைத்தான்; துணிகளை இல்லை...)

P.S: Sorry, மறந்தே போனது... க்ளிக் செய்த photo இதோ... எனக்கொரு சந்தேகம், மழையைத்தான் காட்டுகிறேனா, இல்லை மழையை காட்டுவதாகச் சொல்லி என் குடையை காட்டுகிறேனா என்று. எதுவாயிருந்தாலும் ரசிப்பீர்கள் தானே?



ரயில் பயணம்

5 comments

இன்று அலுவல் விஷயமாக Washington DC-க்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். New York Penn Station-ல் இருந்து Accela Express என்றொரு துரித ரயிலில். 2 மணி train-ஐ பிடித்தால் 4:55-க்கு Union Station-ல் சுகமாக வந்து இறங்கிவிடலாம்.

ரயில் பயணம் எனக்கு எப்பொழுதுமே மிகவும் பிடித்த ஒன்று. மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ரயில் பயணங்கள் தந்திருக்கின்றன. எத்தனை வருடங்களுக்கு முன்னர் கண்களில் விரிந்த காட்சிகள் இன்றும் மனத்திரைகளில் எத்தனை முறையோ வந்து போகின்றன.

என் அபிப்பிராயப்படி ரயில் ஒரு ஊரின் பின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. பேருந்திலோ, ஊர்திகளிலோ பயணம் செய்யும் போது ஊரின் முன் பக்கத்தை பார்க்கிறோம். அலங்கார விளக்குகளையும், அழகாக்கப்பட்ட கட்டிடங்களையும், திருத்தி அமைக்கப்பட்ட சாலைகளையும், செதுக்கப்பட்ட சிலைகளையும், நல்ல உடை உடுத்தின மனிதர்களையும் அதிகம் பார்க்கிறோம்.

ரயில் ஊரின் பின் வாசல் வழியாக நம்மை கூட்டிச்செல்கிறது. ஊரின் நாடி நரம்புகள், சாக்கடைகள், குப்பை மேடுகள், அசுத்தங்கள், புறம்பாக்கின கட்டிடங்கள், வெறுமையான வெளிகள், கூலி வேலை தொழிலாளர்கள் என்று ஒரு ஊரின் அடுத்த பக்கத்தை நமக்கு காட்டுகிறது.

நகர எல்லையை விட்டு தாண்டும்போது இதமான இயற்கை வளத்தை விவரிக்கிறது. அற்புதமான ஆறுகளும், சோலைகளும், விரிந்து கிடக்கும் வயல்களுமாய் ஒரு புதிய கதையை சொல்கிறது.

ரயிலின் நிரந்தரமான ஆட்டமும், அதனால் கொஞ்சம் அசைந்துகொண்டே வரும் பயணிகளையும் மணிக்கணக்கில் ரசிக்கலாம். மனிதர்களில் தான் எத்தனை விதம். ஒவ்வொருவரும் தான் எத்தனை வித்தியாசம். ஒரே இனம். பல விதம். அதிசயம் தான்.

நான் அவசரத்தில் ஒரு புத்தகமோ, பத்திரிக்கையோ கொண்டு வராமல் ஏறி விட்டேன். கொஞ்ச நேரத்தில் இனி  என்ன செய்யலாம் என்ற எண்ணம் வரவே, சரி Cafe Car-க்கு ஒரு நடை சென்று வருவோம் என்று கிளம்பினேன். ஒரு கருப்பு காப்பியும், ஒரு pocket m&m-ம் வாங்கி வந்தேன்.

ஒரு car முழுவதும் முக்கியமான ஆட்கள் போல பளிச்சென்று வெள்ளை சட்டையும், navy (ஊதா) கோட்டும் சூட்டுமாக ஒரு கூட்டம் பயணிகள். இங்குள்ள அரசியல்வாதிகளாயிருக்கும் என்று நினைத்து கொண்டேன். ஏனோ பெருமையாக இருந்தது - ஒரே ரயிலில் பயணிப்பதாலோ என்னவோ.

முடிந்த வரை கண்களை அலசி ஆராய்ந்தும் பெயருக்கு கூட ஒரு இந்திய நாட்டவரை பார்க்கவில்லை. அதனால் தானோ என்னவோ திடீரென்று தனியாக பயணம் செய்வது போல் ஒரு எண்ணம் வரவே, சரி கொஞ்சம் உங்களோடு பகிரலாமே என்று எழுதத்தொடங்கி விட்டேன். 

எப்படி இருக்கிறீர்கள்? நானும் நல்ல சுகம்.

இங்கு அமெரிக்காவில் இலைஉதிர் காலம் ஆரம்பமாகியிருக்கிறது. குளிரும், மழையுமாக வெகு விரைவில் வரவிருக்கும் குளிர்காலத்திற்கு நம்மை தயாராக்கிக்கொண்டிருக்கிறது. இன்று அதிசயமாய் இதமான வெப்பநிலை காணப்பட்டது. நேற்று நல்ல மழை. அதற்கு முந்தின நாள் நல்ல குளிர். இனி நாளை மழை. என்று அப்படியும் இப்படியுமாக நம்மை குழப்பி கடைசியில் கடுங்குளிரில் கொண்டு வந்து விடும். 

ஒவ்வொரு காலத்திலும் குடும்பமாய் செயல்பட பல வேடிக்கைகள் உண்டு. இலைஉதிர் காலத்தில் பொதுவாக மக்கள் Apple Picking என்று போய் வருவார்கள் குடும்பம் குடும்பமாய். மரங்களில் இலைகள் நிறம் மாறுவதை கண்டு வருவார்கள் பலரும். Pumpkin picking என்றும் அதை carving என்றும் ஒரு பொழுதுபோக்கு.  

விரைவில் Trick-or-treat என்று ஒரு பண்டிகை. சிறு பிள்ளைகள் மாறு வேடங்கள் அணிந்து வீடு வீடாய் சென்று, "Trick or Treat!" என்று சவால் விடுவார்கள். அனைத்து வீடுகளிலும் இப்படி வரும் பிள்ளைகளுக்காக மிட்டாய்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.

November மாதம் தொடங்கவும் Thanksgiving பண்டிகைக்காய் தயாராவார்கள். வீடுகளை அலங்கரிப்பதும், வான் கோழி ஆர்டர் செய்வதும், விருந்து பற்றி ஆலோசிப்பதும், பயண டிக்கெட்டுகளை வாங்குவதுமாக busy-யாகி விடுவார்கள்.

Thanksgiving முடிந்த வாரமே Christmas-க்கு தயாராவார்கள். இப்படி அமெரிக்காவில் மக்கள் நன்றாகவே வாழ்க்கையை அநுபவிக்கிறார்கள். 
ஆரம்பத்தில் அதை விமர்சித்த நாங்களே இன்று அவர்களில் ஒன்றாகவே ஆகிவிட்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஒருவர் தீபாவளி எப்போது என்று கேட்டார். அதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

இன்னொருவர், தீபாவளி எதற்காக கொண்டாடுகிறார்கள் என்று கேட்டார். சிறு பிள்ளைகளில் பள்ளிகளில் படித்த நரகாசுரன் கதையை எடுத்துரைத்தேன். அப்படித்தானே என்று ஒரு வட இந்திய நண்பரை கேட்க, அவர் அந்த கதையை தான் கேட்டதேயில்லை என்றும் ராமர் அயோத்திக்கு வந்தபோது மக்கள் தீபங்களை ஏற்றி வரவேற்றதாகவும் சொல்லி பெரிதும் குழப்பிவிட்டார்.

தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு வைத்தேன். கொஞ்சம் விளக்கினால் பிரயோஜனமாயிருக்கும் - கேட்பவர்களுக்கு பதில் சொல்ல. தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சரி, ரயில் இப்போது Baltimore தாண்டி சென்று கொண்டிருக்கிறது. விரையில் DC வந்து விடும். நீங்களும் கொஞ்ச தூரம் கூட வந்தது நன்றாக இருந்தது. நன்றி.

பயணம் தொடரும்,

~NRIGirl

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

6 comments

Dallas-ல் மணி இப்போது 12:09 நடு இரவு. வீட்டில் New Jersey-யில் 1:11 AM. அலுவல் விஷயமாக ஒரு வாரம் Texas-ல் உள்ள Dallas என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன். இன்றோடு மூன்று நாள் ஆகிறது. இன்னும் மூன்று நாள் செல்லும் வீட்டில் போய் சேர...

பொதுவாக அமெரிக்காவில் Texas மக்களை குறித்து நல்ல பெயர் உண்டு - விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்று. அது உண்மை தான். Airport-ல் இருந்து வெளியில் வந்தவுடனே taxi-க்காக line-ல் நிற்கும்போது குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று கேட்டு குளிர்ந்த ஒரு பாட்டில் தண்ணீர் கையில் கொண்டு தருவார்கள். வேறு எந்த இடத்திலும் இப்படி ஒரு உபசரிப்பை நான் பார்த்தது கிடையாது.

மக்களும் கூட New York போல ஆடம்பரம் இல்லை. முடி, நகம், முகம், பல், உதடு எல்லாம் உள்ளது உள்ளது போல் தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை முடி என்றால் வெள்ளை முடி. உடைந்த பல் என்றால் உடைந்த பல். ஒடிந்த நகம் என்றால் ஒடிந்த நகம். இப்படி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் காணப்படுகிறார்கள். அதனால் தானோ என்னவோ New York மக்களை விட கொஞ்சம் வயதில் கூடினவர்களாக தெரிகிறார்கள். 

நான் ஒரு Conference-க்காக வந்திருக்கிறேன். Germany, France, Canada, மற்றும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் வந்திருக்கிறார்கள்.

நன்றாகத்தான் இருக்கிறது மாநாடு. இருந்தாலும் பிள்ளைகளை விட்டுவிட்டு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அடிக்கடி தோன்றத்தான் செய்கிறது.

நான் மட்டும் இல்லை. வந்திருக்கிற எல்லா அம்மாக்களும் இதைத்தான் பேசிக்கொள்கிறோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம்.

அப்பாக்கள் ஏனோ வீட்டைப் பற்றி ஒரு கவலையையும் காட்டிக்கொள்வது இல்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் எல்லாம் தானாய் நடக்கும் என்பது போலத்தான் இருக்கிறார்கள். வேலை ஒன்றே அவர்கள் வாழ்க்கை போலும்.

பாவம் தான் அம்மாக்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று. வீடும் வேண்டும் வேலையும் வேண்டும் என்று. குடும்பமும் வேண்டும் பதவியும் வேண்டும் என்று. அங்கேயும் இங்கேயுமாக...

ஆனாலும் கூட எவ்வளவு சந்தோஷமாய் சிரித்த முகத்துடன் conference-ன் ஒவ்வொரு காரியங்களிலும் பெண்கள் முன் நிற்பதையும், புதிய பாடங்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதையும், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையையுமாய் உலாவுவதையும் பார்க்கும்போது ஒரு புதிய உற்சாகம் தானாய் தோன்றத்தான் செய்கிறது.

எதையும் சாதித்துவிடலாம் என்ற துணிச்சல் எழும்பத்தான் செய்கிறது. ஒரு முறையேனும் ஏணியின் உச்சி வரை சென்றே தீர்வதென்று மனம் ஏங்கத்தான் செய்கிறது. எல்லைகளை விரிவாக்கியே ஆவது என்ற ஆசை நிறையத்தான் செய்கிறது.

எல்லாம் பொறுங்கள் இந்த இரண்டு மூன்று நாட்களுக்குத்தான். விரிந்த சிறகுகளை சுருட்டத்தான் வேண்டி வரும் வெகு விரைவில். ஏணியில் எடுத்து வைத்த அடிகளை மீட்கத்தான் வேண்டும் சிறு பொழுதில். ஆற்றின் கால் கொஞ்சம் இழுக்கத்தான் போகிறது நொடியில்.

போகட்டும் விடுங்கள். கனவுகள் எல்லாம் கலையத்தானே?!

வீடு ஒன்றே எங்கள் வாழ்க்கை. நான் என்றில்லை, எல்லா அம்மாக்களும் இதைத்தான் சொல்லுவார்கள், கேட்டுப்பாருங்கள்...

Dallas-ல் நேரம் அதிகாலை ஒரு மணி பன்னிரெண்டு நிமிடம். வீட்டில் New Jersey-ல் இரண்டு மணி பதின்மூன்று நிமிடம். 

கொஞ்சம் உங்களோடு பகிர்ந்ததில் சந்தோஷம்...

விரைவில் மீண்டும் உங்களோடு,

~NRIGirl

Algebra படுத்தும் பாடு...

1 comments

இரண்டு நாட்களுக்கு முன் என் இரண்டாவது மகள் தன் வீட்டுப்பாடத்தை (home work) நான் சரி பார்க்க என்னிடம் கொண்டு வந்தாள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அல்ஜீப்ரா. புது பாடம்.

பரவாயில்லை நன்றாக புரிந்திருக்கிறாளே என்று யோசித்து முடிக்கவே ஒரு தவறு கண்ணில் பட்டது.

y=mx+b then what is b? என்பது தான் கேள்வி.

அவளது பதில்: b=mx+y / mx என்று இருந்தது.

அந்த கணக்கை மீண்டும் செய்யச் சொன்னேன். மீண்டும் அதே பதில் தான் எழுதினாள். ஏதோ தன் steps-ஐ explain-ம் செய்தாள்.

சரி பிள்ளைக்கு புரியவில்லை என்று கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.

இல்லை. நீங்கள் சொல்வது தவறு. இது தான் சரி. இப்படித்தான் எங்கள் டீச்சர் சொல்லித் தந்தார்கள், என்று அடம் பிடித்தாள்.

நானும் விடுவதாய் இல்லை. என் விளக்கத்தை மீண்டும் எடுத்துரைத்தேன். b=y-mx என்று.

எங்கள் டீச்சர் சொல்லியிருக்கிறாங்க, multiplied numbers-ஐ equavation-க்கு அடுத்த side கொண்டு போணும்னா divide பண்ணனும், என்று நிறைய பேசினாள்.

இதில் வேறு, 'உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்கள் இந்தியாவில் படித்திருக்கிறீர்கள். இது அமெரிக்கா. இங்கு வேறு மாதிரி', என்று விளக்கம்.

எதுவும் பலிக்காத பட்சத்தில் நோட்டை தூக்கிக்கொண்டு பத்தாம் வகுப்பில் படிக்கும் தன் அக்காவிடம் கொண்டு சென்றாள்.

அக்கா என்ன படித்திருந்தாளோ என்னவோ, "ஆமாம் நீ சொல்வது தான் சரி" என்று சொல்லி விட்டாள்.

எனக்கு தலையே சுற்றி விட்டது, 'நீயுமா?' என்று.

அவளை விட்டு விட்டு இனி இவளுக்கு விளக்க ஆரம்பித்தேன். இவள் புரிந்து கொண்டால் அவளை விளக்கி விடுவாளே என்ற யோசனையில்.

சரி, 100 = 25+b என்று இருந்தால், what is b? என்றேன்.

அது 75 என்றார்கள் டான் என்று.

சரி, அப்படியானால், y=mx+b என்பதும் அதே ரீதியில் செய்ய வேண்டியது தானே என்றேன்.

Mommy, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? mx means m is multipled by x. It is not a single whole number என்றார்கள்.

சரி, அப்படியானால், 100= 5X5 +b என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போ பதில் என்ன? என்றேன். பதில் இல்லை.

இது அக்கா காரியை கொஞ்சம் யோசிக்க வைத்தது. "ம்ம்ம்... நீங்கள் சொல்வதும் சரி போல் தான் இருக்கிறது. Sharon சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது", என்றாள்.

Sorry Mommy, எனக்கு தலை ஓடமாட்டேங்கிறது. தூக்கம் வருகிறது" என்று தப்பிக்க பார்த்தாள்.

"இதை புரிந்து கொண்டு தூங்கினால் போதும்", என்று ஒரு பேப்பரும் pen-னுமாய் அவளை தொடர்ந்தேன்.

ம்ஹூம் கொஞ்சமும் பயன் இல்லை. குழம்பித்தான் போயிருந்தார்கள்.

திடீரென்று flash back-ல் கணக்கு பாடம் படிக்க அம்மாவை நான் படுத்திய பாடு வந்து போகவே சத்தமாய் சிரித்தே விட்டேன்.

அவளைத்தான் சிரிப்பதாக எண்ணிக்கொண்டு, கோபமாய் "உங்களை விட Daddy-க்கு கணக்கு நல்லா தெரியும்", என்று Daddy-யிடம் கொண்டு சென்றாள்.

மற்றவள் இது தான் சாக்கு என்று தப்பித்தாள்.

டாம் டூம் என்று கீழிருந்து பலவித சத்தங்கள் கேட்டன. Daddy-யாச்சு மகளாச்சு என்று விட்டு விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தாள் முகத்தை நீளமாக வைத்துக்கொண்டு.

'என்ன மக்களே ஆச்சு. புரிஞ்சிச்சா பிள்ளைக்கு' என்றேன்.

அவ்வளவு தான். அழுதே விட்டாள்.

"Daddy-யும் நீங்கள் சொல்வது தான் சரி என்கிறார்கள். நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன்" என்றாள்.

'I hate Algebra. I hate Math. I don't understand anything' என்று ஆரம்பித்தாள்.

சரி சரி இனியும் ஏதாவது சொல்லி விஷயம் விபரீதமாக மாறி விடக்கூடாதே என்ற பயத்தில், 'That's alright மக்களே. Go to bed now. Ask your teacher to explain it to you tomorrow' என்றேன்.

மறு நாள் மாலையில், 'So, what happened with that problem?' என்று வினவினேன்.

'Yeah. She explained it' என்றாள்.

'Wasn't I right?' என்றேன் ஆர்வமாய்.

'No! Daddy was!' என்றாள் அழுத்தமாய்.

கவலையே வேண்டாம். இவள் பிழைத்துக்கொள்வாள். என்று நிம்மதி பெருமூச்சொன்று தானாய் வந்தது.

மூத்தவள்? அவளும் பிழைத்துக்கொள்வாள். கவலையை விடுங்கள்.

சின்னவன்? அவனும் தான். கட்டாயமாய்.

~ NRIGirl

வட்டத்தின் மையம்

2 comments

வட்டம் வட்டமாய் நம் உலகம்... என்ற பதிவின் தொடர்ச்சி...

வட்டங்களின் விளிம்புகளில்
சுழல்கிறோம் சரி, வட்டத்தின் மையம் தான் என்ன? நானா? நீங்களா?

நல்ல கேள்வி. இரண்டும் இல்லை என்பது தான் சரியான பதில்.

நானும் இல்லை, நீங்களும் இல்லை, வட்டத்தின் மையத்தில்.

ஒவ்வொரு வட்டத்தின் மையமும் வட்ட உறுப்பினர்களின் பொதுவான
கருத்துக்களே. எந்த காரியத்தை அடிப்படையாக கொண்டு அந்த வட்டம் வரையப்பட்டதோ அந்த பொதுவான காரியமே, வட்டத்தின் மையம்.

கல்லூரி வட்டங்களின் மையம் கல்லூரி. சபை வட்டங்களின் மையம் இறைவன்.

கல்லூரி மேல் உள்ள பற்று தானே கல்லூரி நண்பர்களை கூடி வர செய்தது? கல்லூரி தானே அவர்கள் வட்டத்திற்கு காரணமாயிருந்தது? கல்லூரி காலங்கள் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த வட்டத்தின் உறுப்பினர்கள் கூடி வரும்போது அதிகம் பேசப்படுவது அந்த கல்லூரி நாட்களே. அவர்கள் உரையாடல்கள் பெரும்பாலும் கல்லூரியும் அதை சுற்றியுமே. கூட படித்தவர்களின் கதைகள், சேர்ந்து திரிந்த நாட்கள், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பற்றியே.

இப்படியாக தெரு முனைகளில் கூடும் நம் அண்டை வீட்டாரின் வட்டம் - அதின் மையம் அந்த தெரு தானே. குப்பை லாரி வந்ததா? நல்ல தண்ணீர் வருகிறதா? அடுத்த வீட்டில் புதிதாக குடிவந்திருப்பவர் எந்த ஊர் காரர்? என்று தெருவை சுற்றியே அவர்கள் பேச்சு.

ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒவ்வொரு மையம்.

ஒவ்வொரு வட்டத்திற்கும் வெவ்வேறு உறுப்பினர்கள்.

அனைத்து வட்டங்களிலும் ஒற்றை பொது அம்சம் நாம் ஒவ்வொருவரும் தான்.

அதனால் தான் நாம் வட்டங்களின் விளிம்புகளில் சுழல்கிறோம்.

நம்முடைய இந்த வட்டங்களே நம் முகவரி. நம் வட்டங்களே நம் அடையாளம். இந்த வட்டங்கள் தானே நம் சந்தோஷம்.

வட்டத்தில் இருந்து மீண்டு புள்ளியாய் நிற்பது கூடாத காரியம். அப்படியே கூடினாலும் நம் முகவரியை தொலைத்திருப்போம். அடையாளத்தை களைந்திருப்போம். சந்தோஷத்தில் குறைந்திருப்போம்.

அதனால் சுழல்வோம் சந்தோஷமாய். நம் வட்டங்களில் உற்சாகமாய். ஓட்டமும் நடையுமாய்.

அப்படியே நானும்,
~ NRIGirl

வட்டம் வட்டமாய் நம் உலகம்

0 comments

தனி மரங்கள் இல்லை நாம் தோப்புகள். தீவுகள் இல்லை நாம் தீபகற்பங்கள். வெறும் புள்ளிகள் இல்லை நாம் வட்டங்கள்...

நிற்க தோழி! சென்ற பதிவில் என்னவோ தனிமையே இனிமை என்பது போல் எழுதியிருந்தீர்களே; இன்று முரணாயிருக்கிறதே உங்கள் கருத்து?

நன்றி சகோதரா(ரி)!

நீங்கள் என் பதிவுகளை வாசிக்கிறீர்கள், யோசிக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அது அன்றைய என் மன நிலை. இது என்றுமே நம் அசல் நிலை. மனமும் அசலும் அவ்வப்போது கொஞ்சம் முரண்படுவது சகஜம் தானே?!

நீங்கள் ஆட்சேபிக்காமல் ஆமோதிக்கிறதினால் தொடருகிறேன் என் கருத்தை...

பொதுவாய் தன், தனி, தான் என்று நாம் தனித்தியங்கினாலும், வட்டங்களில் சுழலும் கூட்டு வாசிகள் நாம் என்பதை மறுக்க முடியாது.

சிறு வயது தொடங்கி வயதில் முதிரும் வரை வட்டம் வட்டமாய் நம்மை சுற்றி பல வட்டங்களை வரைந்து கொள்கிறோம் நாம்.

சொந்தங்களின் வட்டம். நட்புகளின் வட்டம்.  பள்ளி பருவத்தில் வரைந்த வட்டம். கல்லூரி நண்பர்களின் வட்டம். வேலை ஸ்தலங்களில் வட்டம். தெருமுனைகளில் வட்டம். விரும்பி நேயர்களின் வட்டம், வலை தல உலகில் வட்டம். தூர தேசத்தில் வட்டம். சமீபத்தில் வட்டம். நெருங்கின வட்டம். சுருங்கின வட்டம்...

நம்மை பெற்றோரின் நண்பர்கள் என்றொரு வட்டம், நாம் பெற்றவர்களின் நண்பர்கள் என்றொரு வட்டம். புதிய வட்டங்கள். பழைய வட்டங்கள். சிறிதாய், பெரிதாய் பல்வேறு வட்டங்கள்.

இந்த வட்டங்கள் அனைத்தும் பொதுவாக நம்மை சுற்றி நாமே வரைந்து கொண்டதாலோ என்னவோ, நம்மை சுற்றியே அவை இயங்குவதாய் நமக்கொரு எண்ணம். ஆனால் நிஜம் என்னவோ, நாம் தான் இந்த வட்டங்களின் விளிம்புகளில் இயங்குகிறோம்.

பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது போலத்தான் நாமும் தன், தனி, தான் என்று நம்மை நாமே சுற்றிக்கொண்டு நம்முடைய வட்டங்களையும் சுற்றி வருகிறோம்.

காலப்போக்கில் நெருங்கின வட்டங்கள் விரிவதும், விரிந்த வட்டங்கள் சுருங்குவதும், தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

விளிம்புகளிலேயே சுற்றிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் நெருங்கி வந்த நட்புகளின் வட்டங்கள் சிறிதாய் இருப்பதால் நம்முடைய சுழற்சியும் அதிகமாய் இருக்கிறது அவர்களை சுற்றி.

விளிம்புகளில் இருந்து அகன்று சென்ற நட்புகள் விரிசலாய் விரிந்து அகலமாய், தூரமாய், வெகு தொலைவில் சென்று விடுவதால், நம்முடைய சுழற்சியும் வெகுவாய் குறைந்து காலப்போக்கில் நின்றே விடுகிறது அவர்களை சுற்றி.

இப்படி நாம் வட்டங்களை வரைந்து கொண்டிருக்க, நம்மை வட்டங்களில் வரைந்து கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள். அவர்கள் வட்டங்களில் நாம் நெருங்கி செல்வதும் அகன்று செல்வதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

ஓட்டமும் நடையுமாய், வட்டங்களின் விரிசல்களை தவிர்க்கத்தான் முயற்சிக்கிறோம். முடியாத போது கை விரித்து நிற்கிறோம்.

அதற்காய் வருந்தி புள்ளியாய் மாறி மறைந்து விடுவதில்லை நாம். நெருங்கின வட்டங்களில் இன்னும் நெருங்கிக்கொள்கிறோம். அது கூடாத பட்சத்தில் புத்தம் புதிதாய் ஒரு வட்டம் வரைகிறோம். நான், நீ, நீங்கள், நாம் என்று...

...

இந்த இடத்தில் நிறுத்தி மேற்கொண்டு எழுதியவற்றை வாசிக்க, "அட! பரவாயில்லயே!" என்றொரு எண்ணம் தோன்ற, ஏதோ என்னை சுற்றி ஒரு ஒளி வட்டம் நானே வரைய தொடங்க, "போதும் இந்த போக்கு!!", என்று நிறுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம்...

உங்களில் யாரேனும் இந்த வட்டத்தின் விட்டத்தை விரிவாக்கினால் பெரும் உதவியாயிருக்கும். நான் கொஞ்சம் சிரமம் எடுத்து ஒளி வட்டத்தை கிறுக்க முயற்சிக்கிறேன்...

ஒருவேளை யாரேனும் முன்வராத பட்சத்தில், அடுத்த பதிவில் தெளிந்த சிந்தையுடன் தொடருகிறேன்  மீதமுள்ள என் கருத்தை......

உங்கள் வட்டத்தில் என்றும்,
~ NRIGirl

நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை

0 comments

ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது படகு. எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம்.

தனிமையாய் நிற்கிறது படகு. நல்லவேளையாய் படகினுள் நாங்கள் குடும்பமாய் இருப்பதினால் சந்தோஷத்திற்கு குறைவில்லை. ஆனாலும் ஒரு உறுத்தல், எங்கே போனார்கள் நம் நண்பர்கள் என்று.

என்னவாயிருக்கும்? நாம் என்ன தான் சொல்லிவிட்டோம் அல்லது செய்துவிட்டோம், அவர்கள் கோபித்துக்கொள்ள? என்று சின்னதாய் ஒரு எண்ணம் இல்லாமல் இல்லை.

ஆற அமர யோசித்துப்பார்த்ததில் மாற்றம் என்னிடம் தான், நண்பர்களிடம் இல்லை, என்பதை புரிந்து கொண்டேன்.

அவர்கள் எப்பொழுதும் போல் தான் இருக்கிறார்கள். அதிகம் கண்டுகொள்ளாமல். பட்டும் படாமல். தொட்டும் தொடாமல்.

நான் தான் மாறியிருக்கிறேன் சமீப காலங்களில். எதிர்பார்ப்பற்று நட்பு கொண்டாடிய நான், இன்று கொஞ்சம் எதிர்பார்க்கத்தொடங்கி விட்டேன், அது தான் மாற்றம்.

சேர்ந்து விளையாட சென்றார்கள் எங்களை கூப்பிடவில்லை, எல்லோரும் கடலுக்கு போனார்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை, என்பதாய் எனக்குத்தான் மனவருத்தங்கள் அவர்களிடம்.

என்னிடம் அவர்கள் கோபித்துக்கொள்ளவில்லை, இல்லவே இல்லை; நான் தான் அவர்களிடம் கோபித்துக்கொண்டிருக்கிறேன், ஒரு துளி அன்பில்லை என்று.

என்னை அவர்கள் ஒதுக்கவில்லை, இல்லவே இல்லை; நானாகவே கொஞ்சம் ஒதுங்கி நிற்கிறேன், போதும் இவர்கள் நட்பு என்று.

இந்த வருத்தங்கள் தீர வேண்டுமானால், என் எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறைய வேண்டும்.

'கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்' என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன் நான்.

'கொடுங்கள்' என்பது மட்டுமே எனக்கான கட்டளை. 'உங்களுக்கு கொடுக்கப்படும்' என்பது இறைவனின் பொருத்தனை. அதை மக்களிடம், குறிப்பாக நம் நண்பர்களிடம் எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு.

இப்படி தேவையற்ற எதிபார்ப்புகளை கொண்டிருப்பவர்களை பற்றித்தான் வேதத்தில் வாசிக்கிறோம்: "இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து: உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.", என்று. (மத்தேயு 11:16-17)

இப்படியாகத்தானே இருக்கிறது நண்பர்களிடம் நான் கொண்டுள்ள குறைகளும்?

எங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று என்ன கட்டாயம்? கூப்பிட்டால் சந்தோஷம், கூப்பிடாவிட்டால் அதைவிட சந்தோஷம் என்று தானே இருக்க வேண்டும்? தந்தால் நன்றி, தராவிட்டால் மிக்க நன்றி என்ற மன பக்குவம் தானே வேண்டும்?

தேவையில்லா எதிர்பார்ப்புகள் ஏன்? வீண் வருத்தங்கள் ஏன்? வெறும் குறைகள் தான் ஏன்?

நம்மை சுற்றியா அவர்கள் உலகம்? நண்பர்களை சுற்றியா நம் உலகம்? அவ்வளவு சின்னதா நம் உள்ளம்?

பரந்து விரிந்த உலகில் நம் எல்லைகள் ஏன் குறுக வேண்டும்?

ஓரமாய் ஒதுங்கி வேடிக்கை ஏன்? துள்ளலாய் நீந்தி மகிழத்தானே வேண்டும்?

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க...

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும்...

(இதைத்தான் சொல்ல வந்தேன் சில இடுகைகளுக்கு முன், "ஓரம் கட்டின அனுபவங்கள்" என்ற தலைப்பில்.

சொல்லவந்ததை சொல்லாமல் மழுப்பி விட்டதாய் ஒரு நெருடல், அதனால் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்திருக்கிறேன் இந்த பதிவில்...

சொல்லவந்ததை சொல்லிவிட்ட பட்சத்தில், சொல்லாமல் மழுப்பிய என் பழைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்: ஓரம் கட்டின அனுபவங்கள்)...

கொஞ்சம் உங்களோடு,

~ NRIGirl

பார்க்க என்னவோ ராஜாங்கம் தான்...

6 comments

பட்டத்து இராணி அவள். அமைதியான நாடு. சீமை அமைந்திருப்பதோ அமெரிக்காவில். எதிரிகள் தொல்லை, உற்பூசல் ஒன்றும் இல்லை. நிதி நிலமை சீர்வரிசை எள்ளளவும் குறைவு இல்லை.

பார்க்க என்னவோ ராஜாங்கம் தான். ஆனால் இராஜாவும், இராணி, இளவரசர் மற்றும் இளவரசிகளையுமே கொண்டது அவள் ராஜியம்.

தந்திரி என்றோ மந்திரி என்றோ சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை. தேரடிக்கவோ, போரடிக்கவோ, பணிவிடைக்கு யாரும் இல்லை.

ஒரு நாளின் இறுதியில் இராஜாவுக்கு ஒரு காப்பி வேண்டுமானால், இராணி தான் கலக்க வேண்டும். இராணிக்கு ஒரு தேவை என்றால் இராஜா தான் உதவ வேண்டும்.

சிங்காசனத்தில் இருந்து இருவரும் இறங்கியே ஆக வேண்டும்.

ஒரு பண்டமோ பணியாரமோ இராணி தான் ஆக்க வேண்டும். 'யார் அங்கே? ஒரு காப்பி!' என்றெல்லாம் கை தட்டி கூப்பிட்டு ஒரு வேலை ஏவ முடியாது. முறுக்கா பணியாரமா இராணி தான் செய்ய வேண்டும்.

பாவம், ஆக்கி எடுத்து வளர்ந்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும். செல்லமாக வளர்ந்து விட்டிருந்தாள் இராணி. அதனால் கொஞ்சம் சிரமம் தான்.

அன்று அப்படித்தான் இராணி முறுக்கு சாப்பிட ஆசைப் பட்டாள். சூடான எண்ணையில் நேராகவே பிழிந்து நின்றாள். என்ன பதம் தவறியதோ, மாவு அச்சிலேயே ஒட்டி நின்றது. 'இராஜா! உதவி தேவை' குரல் எழுப்பினாள் இராணி. ஓடி வந்த இராஜா வேகமாக அடுப்பை அனைத்தார்.

'என்ன காரியம் செய்தாய் மகாராணி? முறுக்கு ஏன் பிழிந்தாய்? தேவையா இந்த
பிரச்சனை நமக்கு', என்று பதறினார்.

'பிள்ளைகள் விரும்புவார்களே என்று...' கொஞ்சம் இழுத்தாள் இராணி.

'அது தான் கடைகளில் கிடைக்கிறதே?', இராஜா அலறினார்.

'இல்லை, சுடச்சுட செய்து அப்படியே சாப்பிட்டால்...'.

'சூடாவது ஒன்றாவது. இருக்கிற மாவை ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கள் போதும்', என்றார் கராராய்.

இராணி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாள், அல்லது ஓய்வெடுப்பதாய் காட்டிக்கொண்டாள். இராஜாவும் பிள்ளைகளும் அக்கம் பக்கம் நகரவே மீண்டும் அடுப்பறைக்கு வந்தாள்.

பிசைந்து வைத்த மாவு பாவம் போல் உட்காந்திருக்கிறதை கண்டாள். 'முறுக்கு வரவில்லயென்றால் சீடை, இரண்டும் ஒரே ருசி தானே' என்று உற்சாகாமாய் ஆரம்பித்தாள் வேலையை. (ஆசை யாரை விட்டது?)

முதல் சுற்றிலேயே எள்ளும் கொள்ளும் வெடித்தன. பட் பட் என்று அங்கும் இங்கும் தெறித்தன சீடை உருண்டைகள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தார்கள்.

'பிரச்சனை ஒன்றும் இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். இராஜாவை தொந்திரவு செய்யவேண்டாம்', உத்தரவிட்டாள் இராணி. கேட்டால் தானே?

ஓடிச் சென்றார்கள் இராஜாவினிடத்தில். 'அம்மா உங்கள் சொல் கேட்கவில்லை. மீண்டும் அடுப்படியில் நிற்கிறார்கள், பண்டம் செய்ய', என்று வத்தி வைத்தார்கள். போன வேகத்தில் இராஜாவும் பிள்ளைகளுமாக திரும்பி வந்தார்கள்.

இம்முறை இராஜாவின் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

'போதும் மகாராணி. நீங்கள் பண்டம் செய்து தரவில்லை என்று யாரும்  குற்றம் சொல்ல மாட்டோம். இருக்கிற உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்து அமருங்கள் உங்கள் ஆசனத்தில்', என்றார் சற்று கோபமாய்.

மாவையும் காலி செய்தார் குப்பையில்.

'சரி போகட்டும்' என்று விட்டு விட்டாள் முறுக்கு ஆசையை, இராணி மகாராணி.

மற்றொரு நாள் இப்படித்தான் புட்டு செய்ய மாவு விரசினாள் இராணி. அண்டை நாட்டு இராஜாவும் இராணியும் விருந்துக்கு வந்திருந்த நேரம் அது. ஒரு குழல் அவிக்கவும் செய்தாள். எப்போதும் நன்றாக வரும் புட்டு அன்று ஏனோ அக்கிரமம் செய்தது.

விருந்தினர் முன்பு அதை எதிர்பார்க்காத இராணி, புட்டு இல்லையென்றால் இடியாப்பம் என்று மாவை மாற்றி பிசைந்தாள், ஏதோ இடியாப்பம் தனக்கு கை வந்த கலை மாதிரி.

காத்திருந்தனர் விருந்தினர்.

பொறுக்க மாட்டாத இராஜா, எதற்கும் ஒரு begal சாப்பிட்டு வையுங்கள், இனி இடியாப்பம் வர விடிந்து விடும் என்று நண்பர்களையும், இராணியையும் கவணித்து வைத்தார்.

நல்லதாய் போயிற்று. ஏனென்றால், இடியாப்பமும் பிரச்சனை செய்தது அன்று. (என்றுமே இடியாப்பம் பிரச்சனை தானே!)

சொன்னால் நம்ப மாட்டீர்கள்; கடைசியில் கொழுக்கட்டையாக மாறி நின்றது புட்டு மாவு!!

நண்பர் சிரித்தே விட்டார் - அவரும் தான் எவ்வளவு பொறுப்பார்? இராணிக்கு அதில் ஒரு சங்கடமுமில்லை என்பது போல் காட்டிக்கொண்டாள். சேர்ந்து சிரிக்கவும் செய்தாள் (பாவம் விட்டால் கொஞ்சம் அழுதிருப்பாள்).

விருந்துக்கு வந்திருந்த இராணியும் தான் அப்படித்தான் ஒரு நாள் இட்டிலி என்று ஆரம்பித்து அது உப்புமாவில் போய் நின்ற கதையை சொன்னார்.

அது தான் சாக்கு என்று வடை போண்டா ஆன கதையையும், தொவையல் சட்டினி ஆன கதையையும் பெருமையாய் பறிமாறிக்கொண்டார்கள் நம் இராஜாவும் இராணியும்.  மீண்டும் சிரித்து வைத்தார்கள் அனைவரும்.

ஆக வந்த விருந்தினருக்கு வயிற்றுக்கு உணவிட்டார்களோ இல்லையோ சிரிப்பிற்கு இட்டார்கள் உணவு. மாறி மாறி பரிமாறினார்கள். பாவம் நண்பர்கள். அன்று போனது போனது தான், இது வரை மீண்டும் வரவேயில்லை என்பது கூடுதல் செய்தி.

இப்படியாக நடக்கிறது ராஜாங்கம். ஒரு வாய்க்கு ருசியாக முறுக்கோ, காப்பியோ, தண்ணியோ சாப்பிட்டு வருஷம் எத்தனை ஆகிறது?!

இதற்காகத்தான் இராணிக்கு இந்தியா மீது ஆசை. கையை சொடுக்கினால் முறுக்கு, பண்டம், பணியாரம், சுடச்சுட காலை பலகாரம், அற்புதமாய் ஏற்ற சூட்டில் தேவையான இனிப்பில் அருமையாய் கையில் காப்பி, வேறு என்ன வேண்டும் என்று வினவி நிற்கும் சுற்றம், ...

ஆக்க முடியாத பட்சத்தில், அதை விட சுலபமாய் கடையில் கிடைக்கிறதே, நமக்கேற்ற ருசியில்?!


ம்ஹூம்... கொடுத்துவைத்திருக்க வேண்டும் அதற்கெல்லாம்... என்ன சொல்கிறீர்கள்?!

ஓரம் கட்டின அனுபவங்கள்

2 comments

வெறுமையாய் இருக்கிறது மனது, வெளியில் தெரியும் வானம் போலே. 

எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம். 

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க... 

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும். 

அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருள் பிள்ளைகள் கைபட்டு உடைந்து விட்ட போதும், பிள்ளைகள் மனம் உடைந்து விடக்கூடாதே என்பதில் கவனம் திரும்பும். "பரவாயில்லை, போகட்டும்", என்று மனது ஆறுதல் கொள்ளும். 

அழுக்காய் கிடக்கிறது வீடு. "அதற்கென்ன இப்பொழுது. சுத்தம் செய்தால் ஆயிற்று. நம் வீடு. நாம் தானே செய்ய வேண்டும்", என்று மேலும் சமாதனம் செய்யும். 

மடிக்க வேண்டிய துணிகள் பெருகிக் கிடக்க, மனம் ஏனோ இன்று படம் வரைவதில் மும்முரம் காட்டும். 

விடாப்பிடியாய் ஒலிக்கும் தொலை பேசியின் கைபேசியை வீட்டின் மூலைகளில் நிதானமாய் தேடும். 

காலையில் அலாரம் வைக்க மறந்த கணவரை மலர்ந்த முகத்துடன் வாழ்த்தும். அலுவலகத்தில் தாமதத்தை அருமையாய் விளக்கும் - "கொஞ்சம் தூங்கி விட்டேன்", என்று. 

நீண்டு கொண்டே போகும் பிள்ளைகளின் கதைகளில் உண்மை ஆர்வம் காட்டும். 

மலர்ந்து நிற்கும் மல்லிகைப் பூக்களை ஆசையாய் மணக்கும். உதிர்ந்து கிடக்கும் பூக்களை விரல்கள் கேசத்தில் சொருகும்.  

அமைதி நிலவும் புல்லின் வெளியில் கொஞ்சம் தலை சாய்க்கும். 

வெறுமையாய் விரிந்த வானத்தின் அழகை கண்கள் ருசிக்கும். ஒரு திட்டில்லாமல் ஒரே சீராய் அமைந்த ஊதா நிறத்தை நெஞ்சம் ரசிக்கும்.  

எனக்காகவே, என் ஒருத்திக்காகவே தினமும் மாற்றப்படும் இந்த ஆகாய ஓவியத்திற்காய் மனம் நன்றி சொல்லும். இறைவனின் கலைநயத்தை எண்ணி எண்ணி வியக்கும். 

சிரிப்பும், களிப்பும், கும்மாளமும், உல்லாசமும் வெகு விரைவில் மீண்டும் தொடரும். 

அது வரை நெஞ்சம் இளைப்பாறும், கொஞ்சம் உங்களோடு...

Wish we were camping... :(

2 comments


"ஒரு பெரீய மல, அத தாண்டி போனா ஒரு பெரீய கடல். அதையும் தாண்டி போனா இன்னொரு பெரீய மல. அப்புறம் இன்னொரு பெரீய கடல். இப்படி ஏழு மலயும் ஏழு கடலும் தாண்டி போனா அங்க ஒரு அழகான ஆறு...", இப்படித்தான் ஆரம்பிக்கும் பெரும்பாலும், சங்கரம்மாள் பாட்டியின் கதைகள்.

சிறு பிள்ளைகள் நாங்கள் கண்கள் அகல மனதில் பெரிய, பெரிய கடல்களும், மலைகளும் வந்து போக இந்த கதைகளில் ஆர்வம் கொள்வோம்.

நான் அநேகமாக இந்த வரிகளிலேயே தங்கி விட்டிருப்பேன் போலும், ஏனென்றால் எத்தனை முயன்றாலும், இதற்கு மேல் என்ன கதை சொன்னார்கள் என்பது நினைவில் வர மறுக்கிறது, ஏதோ ஆரம்பித்த வேகத்தில் கதை முடிந்து விட்டது போல...

கனவுகள் நிறைவாகும், நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சங்கரம்மாள் பாட்டியின் கதைகளும் நிறைவாகியிருக்கிறது கடந்த நாட்களில்.

சொல்கிறேன்...

சென்ற வாரம் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட முன்னூறு மைல் தொலைவில் உள்ள Lake Placid சென்று வந்தோம், சில நண்பர்கள் சூழ. வீட்டில் நான் அடுப்பறையில் வைத்திருக்கும் கரும்பலகையில் பெருமிதமாய், "Gone Camping! :)" என்று எழுதி வைத்துவிட்டு ஆரம்பித்தோம் பயணத்தை.

எத்தனை எத்தனை மலைகள் தாண்டி! எத்தனை எத்தனை கடல்கள் தாண்டி! எத்தனை எத்தனை அழகு இந்த உலகம்!! அதிலும் எத்தனை அழகு இந்த இடம்!!! Lake Placid ஒரு கண் கொள்ளா காட்சி தான்.

எத்தனை தான் சிறப்பான camera வைத்திருந்தாலும் அத்தனை அழகையும் புகைப்படமாக்குவது வெகு சிரமமாகப்பட்டது. ஆதலால் camera-வை கை விட்டு கண்களில் நிறைத்தோம் கதை உலகை. மனதுகளில் நுழைத்தோம் மலைகளின் அழகை.

கூடாரமடித்து குதூகலித்தது கூடுதல் கொண்டாட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கூடாரம்.

நாங்கள் சென்றடையும் போது மழை பெய்து கொண்டிருந்தது. அதை சற்றும் பொருட்படுத்தாது கூடாரம் அடிக்க துவங்கினோம். துவங்கினோம் என்று சொல்வதை விட துவங்கினார்கள் என்று சொல்வது தான் சரி, ஏனென்றால் நாங்கள் பெண்கள் குடை பிடித்து நின்று வேடிக்கை பார்த்ததோடு சரி. மழையில் நனைந்து கூடாரம் அடித்தது எங்கள் கணவர்கள் தான்.

ஒரு நரி பதுங்கி பதுங்கி மழையில் ஒதுங்கியது கண்டு கொஞ்சம் கலவரமும், நிறைய சந்தோஷமுமானோம். இரவில் தான் நண்பர் விளக்கினார், "'நரி முகத்தில் முழித்த மாதிரி' என்று ஒரு பழமொழி இருக்கிறது. நரியை பார்த்தது ஒரு அதிர்ஷ்டம் என்று."

அதிர்ஷ்டம் தான் போலும்! கூடாரம் முடிக்கவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. கொண்டு வந்த படுக்கை மற்றும் சாதனங்களை கூடாரத்தில் வைத்து விட்டு, இரவு உணவு பற்றி யோசிக்க ஆரம்பித்தோம். நெருப்பு மூட்ட ஆரம்பித்தார்கள் பிள்ளைகள்.

தோழி மணக்க மணக்க சமைத்திருந்த கோழி குருமாவும், ரசமும், நாங்கள் கொண்டு சென்றிருந்த சப்பாத்தியும், சுட சுட பொங்கிய சோறும், வயிறையும் மனதையும் நிரப்பியது. சாப்பிட்ட திருப்தியில் நெருப்பின் அருகில் கொஞ்ச நேரம் கதைத்தோம். கதைத்த களைப்பில் உறங்கிப்போனோம்.

விடிந்ததும் விடியாததுமாய் (விடிந்தது எங்களுக்கு, விடியாதது இன்னும் உறங்கும் பிள்ளைகளுக்கு) பகல் உணவுக்கு கொண்டு வந்திருந்த ரொட்டி, muffin, வகையறாக்களை ஒரு பிடி பிடித்தோம். காணாத குறைக்கு கொண்டு சென்றிருந்த தோசை மாவை ஊற்றி தோசையாகவும் இல்லாமல், ஊத்தப்பமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் ஒரு பதமாக சமைத்து அதையும் உள்ளே தள்ளினோம்.

பிள்ளைகள் முழித்து வரவே, அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கிறோம் என்ற பெயரில் இன்னும் ஒரு வட்டம் கட்டினோம். இவ்வளவும் சாப்பிட்டு இன்னும் ஏப்பம் விடாத நிலையில் மதிய உணவு குறித்து ஆலோசிக்கலானோம்.

இருக்கவே இருக்கிறது புதிதாய் பொங்கின சோறு. கூடவே இருக்கிறது மீதியுள்ள கோழி குழம்பு. போதா குறைக்கு புளியோதரை mix-ம், கொண்டு சென்ற ஊறுகாயும், chips-ம். முடித்து குளித்து கிளம்பி Lake Placid-க்கு சென்றோம், சுதந்திர தினத்தை கொண்டாட.

வெளிச்சம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் குளிரும் காற்றும் சுற்றி வளைத்து அடித்தது. கிளம்பி விடலாமா என்று யோசிக்கும் போது தான் நான் ஆசையாய் செய்து கொண்டுபோயிருந்த cake நியாபகம் வந்தது.

Cake என்பது பெயரில் தான். சரி ருசியிலும். ஆனால் பார்க்க என்னவோ பரிதாபமாய்தான் இருந்தது. யாரும் அதை குறை சொல்லவில்லை. ஏனென்றால் அவ்வளவு பசி, மன்னிக்கவும் ருசி!

பிள்ளைகள் lake-ல் மீன் பிடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பாவம் போல சின்னதாய் 7 மீன்கள் அவர்களிடம் மாட்டியிருந்தன. கிடைத்த வரையில் கொண்டாட்டம் என்று உற்சாகாமாய் கிளம்பினோம் வான வேடிக்கை பார்க்க.

இந்த குளிரில் எங்களால் இருக்க முடியாது என்றும், திரும்பி போய் விடுவோம் என்றும், வயிறு பசிக்கிறது என்றும் பலவாறாக பிள்ளைகளும் பெரியவர்களும் குரல் எழுப்பவே நண்பர் சமாதானம் செய்தார், "இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது, வான வேடிக்கை துவங்க. அதற்குள் சாப்பிட்டிட்டு வந்திரலாம்" என்று. "கட்டாயமாய்", என்றவாறு கிளம்பினோம் ஏதோ சாப்பிட்டு ஐந்தாறு நாட்கள் ஆன மாதிரி.

வாய்த்தது சைனீஸ் தான். ஏனோ இறங்கவில்லை. எப்படி இறங்கும் - விடாமல் தொடர்ந்து சாப்பிட்ட களைப்பில்? அதை யோசிக்காமல் சாப்பாட்டை குறை சொல்லிவிட்டு மீண்டும் ஏரிக்கரைக்கு வந்து அமரவும், இருட்டி விட்டிருந்தது.

எட்டு வயது சிறுமி ஒருத்தி கணீரென்று ஒலிபெருக்கியில் தேசிய கீதம் (Star spangled banner) பாட, கூடி வந்திருந்த மக்கள் அனைவரும், நாங்களும் கூட கொடியை நோக்கி நின்று, வலது கையை இதயத்தில் வைத்து கொடி வணக்கம் செய்தோம்.

பாடல் அறிந்த எங்கள் பிள்ளைகளும் சேர்ந்து பாட பெருமிதம் கொண்டோம். ... Oh, say does that star-spangled banner yet wave O'er the land of the free and the home of the brave?- என்ற வரிகளை பாடும்போது சற்றே சிலிர்த்து நின்றோம்.

வான வேடிக்கை துவங்கியது. ஏங்கப்பா, என்ன வானம், என்ன வெடி, என்ன வேடிக்கை! நொடிகளில் தோன்றியும் மறைந்தும் வேடிக்கை காட்டியது வெடிகள் வானில்.

என் மனதில் சிறு பிள்ளை கும்மாளங்கள் அடங்கி இறைவன் இயேசு மீண்டும் வரும் நாட்கள் பற்றி நினைவு வந்தது, "இப்படித்தான் இருக்கும் போலும். நடு வானில். மின் வேகத்தில். நொடிப் பொழுதில். தோன்றின பொழுதில் மறைய. கூட நாமும் செல்ல. எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில். அப்பப்பா!"

சிந்தனைகள் சிதற கிளம்பினோம் கூடாரம் நோக்கி. சாப்பிட்ட களைப்பு தான். நல்ல உறக்கம்.

மறு நாள் மீதி பண்டங்களை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பினோம் ஆற்றை நோக்கி. கொக்கியும் கையுமாய் காத்திருந்தது தான் மிச்சம். ஒற்றை மீனையும் காணோம்.

பரவாயில்லை. சமாதானம் ஆனோம். ஆற்றின் நீரில் ஆசை தீர விளையாடி மகிழ்ந்தோம்.

மீண்டும் கூடாரம், சமையல், சாதம், காய்கறிகளும் பிரமாதம்...

"இல்லை இது போதாது, உங்கள் இந்திய சாப்பாடை தொடர்ந்து எங்களால் சாப்பிட முடியாது. எங்களுக்கு வேண்டும் எங்கள் சாப்பாடு. அமெரிக்க சாப்பாடு.", என்று பிள்ளைகள் குரல் எழுப்பவே, உணவு விடுதி தேடி சென்றோம். வசமாய் மாட்டியது Hungry Trout - அருமையான சூழலில் அமர்ந்திருந்த அழகான restaurant.

எப்படி இருக்குமோ என்று தான் சென்றோம். பொரித்தோ அவித்தோ வைத்திருந்தார்கள் முழு மீனை. கூடவே வெண்ணையும், ரொட்டியும், அருமையாய் சமைத்த காய்கறிகளும்.  வெளுத்து கட்டிவிட்டோம் - நண்பர் பணத்தை.

அதனால் தானோ என்னவோ, மறு நாள் காலையிலேயே தப்பித்தோம் பிழைத்தோம் என்று நண்பர் கிளம்பி விட்டார். "ச ச அதெல்லாம் ஒன்னுமில்லை எனக்கு Monday வேலைக்கு போணும் அதான்", என்றார் பரிதாபமாய்.

மீதி குடும்பங்கள் மீண்டும் ஆற்றுக்கு சென்று காத்து கிடந்தோம், இன்னும் இரண்டு மீன் கிடைக்குமா என்று. கிடைக்காத பட்சத்தில் கூடாரம் திரும்பினோம், நாங்கள் மட்டும் தனியாக.

மீனோடு தான் திரும்புவோம் என்று இன்னும் காத்து கிடந்தார்கள் எங்கள் கணவன்மார்களும், சிறு பிள்ளைகளும். வெகு நேரம் பொருத்து வெறுமையாய் வந்து சேர்ந்தார்கள் - ஒரு சின்னஞ்சிறு மீனுடன் - சுண்டு விரல் அளவிருக்கும்!

புது மீன் கிடைத்த உற்சாகத்தில், நேற்று கிடைத்த ஏழு மீன்களையும் சேர்த்து, கழுவி, உப்பு, மஞ்சள், வத்தல் சேர்த்து, பொரித்து, மீதி எண்ணையில் கொஞ்சம் சோறும் விரவி... சுடச்சுட... இதல்லவா வாழ்க்கை...

வெகு நேரம் அமர்ந்து நெருப்பின் ஒளியில் பிள்ளைகளும் பெற்றவர்களுமாய் கூடி அமர்ந்து கதைகள் பேசினோம். சிரித்தோம். கூட வந்த நண்பர் காஷ்மீர் காரரானதால், அவர்கள் கதைகள் கேட்டு கண்கள் கசிந்தோம்.

நிறைந்த மனதுடன், நிம்மதியாய் ஒரு உறக்கம் போட்டு, விடிந்ததும் கூடாரம் பிரித்து, பிரிய மனமில்லாமல் ஊர் விட்டோம்...

வீட்டிற்கு வந்து சேர்ந்த நொடியில், பெருமூச்சோடு மாற்றி எழுதினோம் அடுப்பறை கரும்பலகையில், "Wish we were camping... :(" என்று...

திருநெல்வேலி மேம்பாலம்...

8 comments

அன்புள்ள நண்பர்கள் அறிய:

எல்லோரும் எப்படி இருக்கீங்க? கவிதை என்றும், காவியம் என்றும் கவணம் திரும்பியதால் கடிதங்கள் கொஞ்சம் தடை பட்டு தான் விட்டது. மன்னிக்கவும்.

New York-ல் இருந்து New Jersey-க்கு, Lincoln tunnel வழியாக வரும்போது, tunnel-லுக்குள் நுழைவதற்கு முன் இடது கை பக்கம் பார்த்தால் சரியாக திருநெல்வேலி மேம்பாலம் போல் தோன்றுகிறது - இன்று தான் கவணித்தேன்.

இது தான் சாக்கு என்று எண்ணமெல்லாம் திருநெல்வேலிக்கு சென்று விட்டது. அது தான் சாக்கு என்று நானும் இதோ இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியா என்று நினைப்பது திருநெல்வேலியைத் தான். அதுவே நான் அறிந்த இந்தியா. அழகான இந்தியா.

சொல்லுங்க, திருநெல்வேலி போயிருக்கீங்களா நீங்க? அது தான் எங்க ஊரு. அதற்காக சொல்லவில்லை, நானும் எத்தனையோ ஊருகளில் படித்திருக்கிறேன், வேலை பார்த்திருக்கிறேன், சுற்றுலா சென்றிருக்கிறேன். ஆனால் திருநெல்வேலி மாதிரி ஒரு ஊரையோ திருநெல்வேலி மக்கள் மாதிரி நல்ல மக்களையோ எங்கும் பார்த்ததில்லை.

திருநெல்வேலி மக்கள் பொதுவாக நல்லவர்கள். பிறரை மதிக்க தெரிந்தவர்கள். அண்ணன் என்றும், அண்ணாச்சி என்றும், அக்கா என்றும் தங்கச்சி என்றும் எளிதாய் யாரையும் உறவு கொண்டாடி விடுவார்கள். அன்பானவர்கள். அன்பை வெளிக்காட்ட தயங்காதவர்கள். வாங்க வாங்க வந்திட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்பார்கள்.

கடும் உழைப்பாளிகள். சென்ற காலங்களில் பனை ஏறுவதும், பயினி இறக்குவதும், கருப்பட்டி காய்ச்சுவதும், கடை வியாபாரம் செய்வதுமாக பனையும் பனையை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். (இன்று ஏனோ பனையையும் காணோம், ஏறுபவர்களையும் காணோம், அது வேறு விஷயம்.)

மீன் பிடிப்பதும், கருவாடு உணர்த்துவதும், அவற்றை விற்பதுமாக கடலையும், கடலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். நெல், பயறு, பருத்தி, என்று வயலையும் வயலை சுற்றிலுமாக ஒரு கூட்டம் மக்கள். மா, பலா, வாழை என்று இந்த முக்கனிகளை நம்பி, ஒரு கூட்டம் மக்கள்.

டீச்சர் என்றும், இன்ஜினியர் என்றும், வங்கி அதிகாரிகள் என்றும், அரசாங்க உத்தியோகத்தோர் ஒரு கூட்டம். "கடல் கடந்து வணிகம் செய்", என்ற முன்னோர் சொல்லை காப்பாற்ற வெளி நாடுகளில் வேலை பார்க்கும் ஒரு கூட்டம் மக்கள்.

இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பாய் அனுசரனையாய் ஆதரவாய் வாழும் இடம் திருநெல்வேலி.

இந்து மதத்தவர், கிறிஸ்தவர், முகமதியர் எல்லோரும் கூடி குழையும் குடும்பங்கள் தான் திருநெல்வேலி மக்கள். பெரும்பாலும் எல்லா குடும்பங்களும் அனைத்து விசேஷங்களையும் கொண்டாடுவார்கள். தீபாவாளி ஆகட்டும், முகரம் ஆகட்டும், கிறிஸ்மஸ் ஆகட்டும், எல்லோருக்கும் சந்தோஷம் தான். பொதுவாக யாவரும் வெடி வெடித்தும், மத்தாசு கொளுத்தியும், பலகாரங்கள் பரிந்தும், கொண்டாடுவார்கள்.

குறிப்பாய் கொண்டாடும் குடும்பங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களை சிறப்பு விருந்துக்கு அழைப்பார்கள். அழைத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள் விசேஷ பண்டம் பலகாரங்களை கொண்டு போய் குடுத்து ஒரு எட்டு பார்த்திட்டு வருவார்கள். சிறு பிள்ளைகளில் புத்தாடைகள் சிலு சிலுக்க அங்கும் இங்குமாக சைக்கிளில், மற்றும் ஸ்கூட்டரில் விரைந்த அனுபவங்கள் இனிமையானவை.

சமீபத்தில் சென்னையை சார்ந்த தோழி ஒருவர் கண்கள் அகல கேட்டார், "ஐயோ திருநெல்வேலி-யா? வீதிக்கு வீதி வெட்டு குத்தாமே? நீங்க நிறைய பார்த்திருப்பீங்களே?".

"என்ன சொல்றீங்க நீங்க? ரொம்ப அமைதியான ஊர் திருநெல்வேலி. வெட்டாவது குத்தாவது? எங்க கேட்டீங்க இந்த கட்டு கதையெல்லாம்?" என்றேன் கொஞ்சம் பதறலாய்.

இப்போ கண்களுடன், கைகளையும் உருட்டிய படி தோழி தொடர்ந்தார், "வேற எங்க? எல்லாம் சினிமால காட்டுறாங்களே!".

"தயவு செய்து சினிமால காட்டுறத வச்சு எங்க ஊர எட போடாதீங்க. வந்து பாருங்க", என்று பெருமிதமாய் சொல்லி வைத்தேன், வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று.

எப்படியும் திருநெல்வேலி-க்கு நிகர் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். கோயிலா, குளமா, வயலா, வரப்பா, மலையா, மேடா, கடலா, காடா எதற்கும் குறைவில்லை திருநெல்வேலி-யில். அல்வாவா, பனங்கிழங்கா, நொங்கா, பதநீரா, என்ன வேண்டும் உங்களுக்கு. எல்லாம் ருசிக்கும் திருநெல்வேலியில்.

அதனால் தான் சொல்றேன், திருநெல்வேலி-க்கு இது வரை வராதவங்க, கட்டாயமா வாங்க வாங்க வந்துட்டு போங்க, கொஞ்சம் இருந்து சாப்பிட்டுட்டு போங்க.

என்றும் அன்புடன்,

~NRIGirl

ஓடு மீன் ஓட...

2 comments


வயதில் முதிர்ந்த பெரியவர் அவர். மீன் பிடிப்பது அவர் தொழில். தொழில் என்று சொல்வதை விட பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அது ஒன்றே அவர் அறிந்தது. அதற்காகவே தான் பிறந்திருப்பதாக நினைப்பவர் அவர். 

எத்தனையோ பெரிய பெரிய மீன்களை பிடித்திருக்கிறார் தன் அனுபவத்தில். இப்போது வயதாகி விட்டது என்றாலும் தொழில் மீதுள்ள ஆசை கொஞ்சமும் குறையவில்லை.

தன் சிறு படகில் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதும், கிடைக்கிற மீன்களை அங்குள்ள கடைகளில் விற்பதும் அவர் வாழ்க்கை. வீடும் கடலுக்கு அருகில் தான்.

வீடு மொத்தத்தில் ஒரு அறை தான். ஓரமாக ஒரு அடுப்பு. அதில் ஆக்கி எத்தனையோ நாட்கள் இருக்கும். நேர் எதிர் முக்கில் துணிகள் தொங்க போட ஒரு கயிறு.

மனைவி இப்பொழுது இல்லை. மக்கள் எப்பொழுதும் இல்லை. மனைவியின் நினைவாக ஒரு புகைப்படம் மட்டும் உண்டு. வீட்டில் துணிகள் தொங்கும் கயிற்றில், தன் ஒரே ஒரு நல்ல சட்டை தொங்கும் பக்கம் சுவரில் அந்த புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார், மற்றபடி ஓயாமல் கண்ணில் படும் என்பதால்.

இளம் பிராயத்தில் ஒரு முறை ஆப்பிரிக்கா சென்றிருக்கிறார் கப்பலில். அங்கு சிங்கங்கள் கடற்கரையில் விளையாடுவதை கண்டு மகிழ்ந்திருக்கிறார். எப்போதும் உறக்கத்தில் அந்த கனவுகள் தான். அவ்வளவு ரசித்திருக்கிறார் அந்த சிங்கங்களை.

அதே ஊரில் வசிக்கும் ஒரு சிறுவன் அவருக்கு நண்பன். சிறுவனுக்கு அவருடன் மீன் பிடிக்க செல்வதில் கொள்ளை பிரியம். அவன் வீட்டார் எப்போதும் அவனை சிறுவனாகவே கருதும் போது, பெரியவர் மட்டும் அவனை சமமாய் கருதுவதும் உரையாடுவதும் அவனுக்கு ரொம்ப இஷ்டம்.

அடிக்கடி வந்து போவான். வரும்போது பெரியவருக்கு ஏதும் தின்பண்டங்களோ ஒரு கோப்பை காப்பியோ கொண்டு வருவான். பொதுவாக அங்குள்ள கடைக்காரர்கள் யாரும் இலவசமாகவே இந்த பண்டங்களை அல்லது காப்பியை கொடுத்து விடுவார்கள் அவன் மூலம்.

பழைய செய்தித்தாள் ஒன்றும் அவ்வப்போது கிடைக்கும். அதில் வரும் விளையாட்டு செய்திகளை பெரியவர் படித்து காட்டுவார். இருவருமாக கொஞ்ச நேரம் விளையாட்டுகள் பற்றியும் விளையாடுபவர்கள் பற்றியும் பேசிக்கொள்வார்கள். இரவு மங்கும் போது பையன் வீட்டிற்கு போவான்.

காலையில் அவனை எழுப்பி விடுவது பொதுவாக பெரியவர் தான். அவன் வீட்டார் மாதிரி இல்லாமல், அன்பாய், அமைதியாய் குரல் கொடுப்பார் பெரியவர். துள்ளி எழுந்து கொள்வான் சிறுவன். வீட்டார் மற்றும் நாட்டார் இன்னும் உறங்கி கொண்டிருக்கும் அதிகாலை நேரமே கடலுக்கு சென்று விடுவார்கள் இருவரும்.

ஆனால் இப்போது பெரியவருடன் போக சிறுவனுக்கு தடை. காரணம் கடந்த 84 நாட்களாக பெரியவருக்கு மீன் ஒன்றும் அகப்படவில்லை. "போதும், போதும், நீ அவருடன் சென்றது. அவர் ராசி இல்லை. இனி எங்களுடன் வந்தால் போதும்", கராராய் சொல்லி விட்டார் அப்பா. சிறுவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. மனது வலித்தது. பெரியவர் தான் சமாதானப்படுத்தினார். "அப்பா சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீ அவருடன் செல்வது தான் நல்லது", என்று.

சொல்லிவைத்தார் போல் 3 நாட்களாக தொடர்ந்து அப்பாவுக்கு நல்ல மீன்கள் வாய்த்தது. சிறுவனுக்கு பெரியவர் மீது அனுதாபம். இப்போது அவனை எழுப்பிவிடச் சொன்னதும் அவருக்கு தன்னால் முடிந்த சிறு உதவிகள் செய்யத்தான்.

பெரியவரின் தூண்டில்கள் மற்றும் சாதனங்களை கடற்கரை வரை தூக்கிச் செல்கிறான். எங்கேயோ ஓடி இரைக்கு நல்ல புது மீன் துண்டுகளை கொண்டு வந்து தருகிறான். 85 ஆவது நாள் நல்ல நாளாக அமையும், பெரிய மீன் கிடைக்கும் என்று வாழ்த்தி அனுப்புகிறான். படகு மறையும் வரை கரையில் நிற்கிறான்.

பெரியவர் கொஞ்சம் ஆழத்திற்கே சென்று விட்டார். விளையாடும் டால்ஃபின் மீன்களையும், பறக்கும் மீன்களையும் ரசிக்கிறார். வானம் தான் எத்தனை அழகு! கடல் தான் எத்தனை அதிசயம்! ஒவ்வொன்றாக ரசிக்கிறார். சிறுவன் தந்த இரை மீன்களை மூன்று தூண்டில்களில் மாட்டி, வெவ்வேறான ஆழங்களில் தூண்டில் மிதக்க விடுகிறார்.

ஒன்றோ இரண்டோ பறக்கும் மீன்கள் தானாய் வந்து படகில் விழுகிறது. அதை உணவுக்கு வைத்துக்கொள்கிறார். காலையில் இருந்து இதோ அந்தி மயங்கும் இந்த மாலை வரை தூண்டில்களில் ஒன்றும் படவில்லை. நல்ல ஒரு மீனுக்காக இறைவனிடம் கொஞ்சம் வேண்டிக்கொள்கிறார்.

இன்னும் இருட்டும் போது தூண்டில் ஒன்று அசைகிறது. ஆரம்ப சந்தேகங்கள் அகலும்படி கொஞ்சம் வேகமாகவே அசைகிறது. கட்டாயம் இது மீன் தான். என்ன மீன் என்பது இப்போது தெரிய வாய்ப்பில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தூண்டில் கயிறை இறுக்குகிறார், இழுக்கிறார், வெட்டி சொடுக்குகிறார். படகு திடீரென்று இழுபடுகிறது. போகிற போக்கில் விட்டு பிடிக்கிறார், அல்லது மீன் தூண்டிலில் இருந்து துள்ளிவிட வாய்ப்பிருக்கிறது.

சந்தேகமே இல்லை. இது ஒரு பெரிய மீன் தான். 84 நாட்கள் வெறுமையாய் திரும்பினதற்கு ஏற்ற பரிசு கிடைத்து விட்டது. சிறுவன் மிகவும் சந்தோஷப்படுவான். கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அதை விட்டு விடக்கூடாது. பிடித்த கயிறை இறுக்கமாக வைத்துக்கொள்கிறார். தோளும் கையும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பரவாயில்லை. பெரிய மீன் வேண்டுமானால் கொஞ்சம் சிரமம் எடுக்கத்தான் வேண்டும். எளிதில் அடைந்து விட முடியாது.

பெரியவர் மீனை இழுப்பதை விட வேகமாக மீன் படகை இழுக்கிறது. அவசரம் ஏதும் இல்லை பெரியவருக்கு. சூரியன் அடைகிறது. சந்திரனும், நட்சத்திரங்களும் ஆவலாய் வந்து இரவை அணைத்துக்கொள்கிறார்கள். பெயர் தெரிந்த நட்சத்திரங்களை கண்டு நெடு நாள் பழகிய நண்பர்கள் போல் சந்தோஷிக்கிறார் பெரியவர்.

கைகளும் தோளும் வலியில் கொஞ்சம் மரத்துப் போகிறது. மாற்றி மறு கையிலும் தோளிலுமாக போட்டுக்கொள்கிறார் கயிற்றை. ஒரு கை கொண்டே கிடைத்த சிறு மீன்களை தோலுரித்து பச்சையாக உண்கிறார். கொஞ்சம் உப்பும் ஒரு எலுமிச்சையும் மாத்திரம் இருந்தால் சுவை ஏற்றியிருக்கலாம்.

கொஞ்சமாவது அதைப் பற்றி யோசித்திருந்தால் கொஞ்சம் கடல் தண்ணீரை படகின் விளிம்பில் ஒரு முக்கில் காய வைத்திருந்திருக்கலாம். சூரியன் அதை உப்பாக மாற்றியிருக்கும். இனி ஒவ்வொரு முறையும் இதை மறக்காமல் செய்ய வேண்டும். ஒரு எலுமிச்சையும் கூட ஒரு குப்பி தண்ணீரும் கை வசம் கொண்டு வர வேண்டும். சிறுவன் இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். என்று பலவாறாக தனக்குத் தானே பேசிக்கொள்கிறார்.

அடுத்த நாளும் வந்து போகிறது. மீனின் பிடியை விட்ட பாடில்லை. நீயா, நானா, இரண்டில் ஒன்று பார்க்காமல் நான் இங்கிருந்து போவதாக இல்லை என்று மீனுடன் சவால் விடுகிறார். தூண்டில் கயிற்றில் பெரும் பங்கை சுருட்டிக்கொண்டுள்ளார். அப்படியானால் வெகு ஆழத்திலிருந்து மீன் மேலே வந்து விட்டது என்று தான் அர்த்தம். எப்படியும் அதற்கு பசி எடுக்கும் போது தானாகவே இந்த இழுபறியை முடித்து சமரசம் ஆகிவிடும் என்று காத்திருக்கிறார்.

மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இதற்குள் மீனை தன் சகோதரனாக பாவித்து பேசிக்கொள்கிறார். "வந்து விடு சகோதரனே, உன்னை நான் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். சிறுவனுக்கு காட்ட வேண்டும். வந்து விடு வேகம்", உரக்கவே பேசிக்கொள்கிறார்.

திடீரென்று மீன் குபீரென்று துள்ளிச் செல்கிறது. மிகப்பெரிய மீன். மார்லின். அழகான மீன். ஊதா நிறமும் வெள்ளியும் கலந்தாற்போல் ஒரு நிறம். கொள்ளை அழகு. சாமர்த்தியம். மெச்சிக்கொள்கிறார் "சகோதரனை". இன்னும் ஒரு முறை துள்ளிச் செல்கிறது மீன். தூண்டில் கயிறின் நீளம் இன்னும் குறைகிறது.

மூன்றாவது பொழுது சாயும் நேரத்தில், பெரியவரிடம் தோற்கிறது மீன். படகை விட நீளமான மீன். கை வலி,தோள் வலி,கால் வலி எல்லாம் மறந்து விடுகிறது பெரியவருக்கு. பொக்கிஷம் கிடைத்திருக்கிறது. பத்திரமாய் சிறுவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ஒன்றே அவர் தலையாய கடமை. சாமர்த்தியமாய் மீனை படகுடன் சேர்த்து கட்டிக்கொள்கிறார். அதின் நீண்ட வாயின் ஈட்டிகளை சேர்த்து கட்டுகிறார்.

மீன் கிடைத்த சந்தோஷத்தில், கொஞ்சம் கண் அயர்ந்து தூங்குகிறார். ஆப்பிரிக்க கடற்கரையும் அதில் விளையாடும் சிங்கங்களும் கனவில் வந்து போகிறது.

திடீரென்று படகில் ஒரு மோதல். பார்த்தால், சுறா மீன் ஒன்று கட்டி வைத்திருக்கிற மீனை கடித்து இழுக்கிறது. மீன் பிடிக்க தான் வைத்திருக்கிற ஆயுதங்களை வீசியும், எறிந்தும் அதை மேற்கொள்கிறார். கொஞ்ச நேரத்தில் மற்றோரு சுறா. இம்முறை ஆயுதமும் தொலைந்து விடுகிறது கடலில். இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னும் பல சுறா மீன்கள் - கூட்டமாய் படகை தொடருகிறது.

கடித்தும் இழுத்தும், கொத்தியும், குதறியும், பொக்கிஷத்தை நாசமாக்கி விடுகிறது சுறா கூட்டம். இனி போராடி பயன் இல்லை என்கிற பட்சத்தில், அமைதலாகிறார் பெரியவர். கூட ஒரு தூக்கம் போடுகிறார். மீண்டும் ஆப்பிரிக்க கடற்கரையும், அதில் விளையாடும் சிங்கங்களும் விரிகிறது சொப்பனத்தில். கூடவே போராடி கிடைத்த மீனும், அதை சீறி பிடுங்கிய சுறா மீன்களும் வருகிறது கனவில். கனவு தானோ என்று எழும்பினால், நிஜம் என்பது ஊர்ஜிதமாகிறது.

கட்டி வைத்த மீனை எட்டி பார்க்கக் கூட இஷ்டம் இல்லை. எவ்வளவு அழகான மீன். இப்படி உருக்குலைத்து விட்டார்களே சுறாக்கள். கரை தெரிகிறது. இருட்டி விட்டது. ஆள் நடமாட்டம் இல்லை. கரையில் ஒதுங்கிய உடன், படகை இழுத்து கரையில் கட்டி விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு சென்று விடுகிறார்.

காலையில் சிறுவன் வருகிறான். இவரை எழுப்பி தான் கொண்டு வந்திருக்கிற தின்பண்டங்களை கொடுக்கிறான். காப்பி எடுத்து வர மீண்டும் கடற்கரை கடைக்கு செல்கிறான். கூட்டம் கூடியிருக்கிறது படகை சுற்றி.

மீனின் முழு எலும்புக் கூடும் தெரிகிறது. தலை மட்டும் அப்படியே இருக்கிறது. ஒருவர் அளக்கிறார். 18 அடி நீளம் என்று சொல்லப்படுகிறது. சிறுவனுக்கு அதில் ஒன்றும் நாட்டம் இல்லை. கடந்த மூன்று நாட்களும் பெரியவருக்காக அழுதுகொண்டிருந்தான் கடற்கரையில். அவரைத் தேடி போன மக்கள் வெறுமையாய் திரும்பவே பயந்து தான் போனான். பெரியவர் திரும்பி வந்தது ஒன்றே அவனுக்கு போதும். ஆனாலும் இன்னும் ஏனோ அழுகை வருகிறது அவனுக்கு.

பெரியவர் அந்த மீன் தலையை அவருக்கு உணவு கொடுத்து விடும் கடைக்காரருக்கு கொடுத்துவிடச் சொல்கிறார். அந்த ஈட்டி-யை உனக்கு வேண்டுமானால் வைத்துக்கொள் என்று சொல்கிறார். சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான் சிறியவன்.

இன்னும் தொடருகிறது இவர்கள் வாழ்க்கை...

(அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway 1951/52-ஆம் வருடங்களில் எழுதிய புலிட்சர் மற்றும் நோபல் பரிசுகளை வென்ற "Old Man and the Sea" என்ற புத்தகத்திற்கு என்னால் இயன்ற தமிழாக்கம்)

கண்ணாடியின் பதில்...

0 comments

முதன் முறையாக என் கடிதத்திற்கு பதில் வந்திருக்கிறது! முந்தைய post-ல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கண்ணாடியின் பதில் இதோ...

கண்ணாடி உன் முன்னாடி ஒரு கேள்வி...

பின்னாடி கேலி பேசாமல், முன்னாடி கேள்வி கேட்கின்றீர். நன்று! துவங்கட்டும் கேள்விக் கணை!

பலருக்கும் உன் மீது சிநேகம் ஏன்?

தன்னை சிநேகிப்பவரே… என்னை சிநேகிப்பவர்! தன்னையே நிந்திப்பவர் என்னையும் நிந்திக்கத்தான் செய்கிறார்! தன் மீது தான் எப்படியோ அப்படியே என் மீதும் அவர் ஆகிறார்!

உன்னை காண தினம் தவறாதது ஏன்?

காண்பவர் கண்கவர இரகசிய ஆசை உள்ளதாலும்… தன் முகத்தை தான் பார்த்திட தான் கொண்ட கண் உதவாததாலும், கண்ணாடி எனை நாடி தவறாமல் வருகிறார் போலும்! மொத்தத்தில் தன் மீது தனக்குள்ள காதலால், அல்லாது, அவர்க்கு என் மீதுள்ள காதலால் என்று எண்ணிடவேண்டாம்!

நாள்தோறும் உன்னைத்தான்
பார்த்தாலும் தான்
வேகத்தில் உன் சாயல் மறைவது ஏன்?


நேற்று என்பதில் பற்று கூடி, இன்றென்பதன் எதார்த்தம் மறந்து, நாளையென்பதில் கவலை கொள்ளும் மாக்களுக்கே என் சாயல் மறைவதாய் தோன்றுமோ?

நெற்றியின் சுருக்கம் நரைகளின் பெருக்கம்
கண்களில் துழாவும் வயோதிப துவக்கம்
எதுவும் உன்னில் பொலிவது ஏன்?


இன்று… இது… இப்படி இருப்பதுதான் இதற்குப் பெருமை என்பதை சூளுரைக்கத்தானோ என்னமோ?

கேசத்தின் கலைவு நேசத்தின் நிறைவு
பாசத்தின் பதிவு சோகத்தின் சுவடு
எதிலும் நீ மிளிர்வது ஏன்?


பாசத்தை பதிவு செய்கையில், நேசம் நிறைவுறும். காற்று கேசத்தை கலைப்பதுபோல, காலம் வாழ்வின் இன்பத்தை கலைக்கும்போது அங்கே சோகத்தின் சுவடுகள் தோன்றும். நிறைவும், குறைவும் வாழ்வின் பாகம் என்று உணர்த்தத்தான் இவைகளுக்கு மிளிர்கிறேன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டீர்களோ?

அன்பான நீ அறிவுள்ள நீ
கைகோர்த்து குலாவ மறுப்பது ஏன்?
பண்பான நீ பரிவுள்ள நீ
பாசமாய் பொழிய மறப்பது ஏன்?


அதீத நெருக்கம் சிலப்போது அன்பைக் குறைக்கும் என்றறிந்ததாலோ ஏனோ எட்ட நின்று சுட்டிக்காட்டுவதே என் இயல்பென்று ஆகிப்போனது!

நான் பார்க்க நீ பார்க்க
சாய்ந்தாட அசைந்தாட
கை ஓங்க மாறு கை ஓங்க
எப்போதும் எனை நீ
விமர்சனம் ஏன்?


இவை, என் விமர்சனமன்று! ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் சுய விமர்சகர் என் வழி எதிரொளிப்பதாய் இருக்கலாமன்றோ?

கண் மூட நீ மறைய
கண் திறக்க நீ விழிக்க
சிறு பிள்ளை விளையாட்டும்
வேடிக்கையும் இன்னும் ஏன்?


நிலைக்கண்ணாடி என் முழுப்பெயர். ஒரே நிலையில் இருப்பதே என் விதி. இந்நிலையில் என்னால் ஆன விளையாட்டும் வேடிக்கையும் இது மட்டுமே. இருந்திட்டுப் போகட்டுமே!


அகத்தின் அழகை முகங்கள் காட்ட
முகத்தின் அழகை நீயும் பார்க்க
உன் முகம் மட்டும் நீ
மறைப்பது ஏன்?


பன்முகம் காட்டும் பணி எனக்கு. இதில் என் முகம் காட்டி பிணி எதற்கு?

ஒரு கேள்வி நான் கேட்க
மறுமொழி நீ மறுக்க
தொடரும் இந்த அம்புகளை
தவிர்க்காமல் வெறும் சிரிப்பு ஏன்?


ஒன்றா கேட்டீர்கள்? ஒவ்வொன்றாகவன்றோ கேட்டீர்கள்? உங்கள் கேள்வி அம்புகளைத் தவிர்க்கவில்லை. ஏனெனில், அவை வம்பைச் சுமந்து வரவில்லை அன்பையே சுமந்து வந்தது. என்னை “பார்த்து” செல்லும் பல கோடிப்பேரில் என்னைக் “கேட்டுச்” செல்ல ஒருவரேனும் உண்டென்றரிந்து பொங்கிவரும் பெருமைச் சிரிப்பு. உங்கள் கேள்விகள் என் வாழ்வின் சிறப்பு!

இப்படிக்கு,
கண்ணாடி!
நன்றி: நண்பர் Bawa!

கண்ணாடி உன் முன்னாடி ஒரு கேள்வி

5 comments

கண்ணாடி உன் முன்னாடி ஒரு கேள்வி...
பலருக்கும் உன் மீது சிநேகம் ஏன்?
உன்னைக் காண தினம் தவறாதது ஏன்?

நாள்தோறும் உன்னைத்தான்
பார்த்தாலும் தான்
வேகத்தில் உன் சாயல் மறைவது ஏன்?

நெற்றியின் சுருக்கம் நரைகளின் பெருக்கம்
கண்களில் துழாவும் வயோதிப துவக்கம்
எதுவும் உன்னில் பொலிவது ஏன்?

கேசத்தின் கலைவு நேசத்தின் நிறைவு
பாசத்தின் பதிவு சோகத்தின் சுவடு
எதிலும் நீ மிளிர்வது ஏன்?

அன்பான நீ அறிவுள்ள நீ
கைகோர்த்து குலாவ மறுப்பது ஏன்?
பண்பான நீ பரிவுள்ள நீ
பாசமாய் பொழிய மறப்பது ஏன்?

நான் பார்க்க நீ பார்க்க
சாய்ந்தாட அசைந்தாட
கை ஓங்க மாறு கை ஓங்க
எப்போதும் எனை நீ
விமர்சனம் ஏன்?

கண் மூட நீ மறைய
கண் திறக்க நீ விழிக்க
சிறு பிள்ளை விளையாட்டும்
வேடிக்கையும் இன்னும் ஏன்?

அகத்தின் அழகை முகங்கள் காட்ட
முகத்தின் அழகை நீயும் பார்க்க
உன் முகம் மட்டும் நீ
மறைப்பது ஏன்?

ஒரு கேள்வி நான் கேட்க
மறுமொழி நீ மறுக்க
தொடரும் இந்த அம்புகளை
தவிர்க்காமல் வெறும் சிரிப்பு ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காலம் ஓடுகிற வேகம்...

0 comments

அன்புள்ள உங்களுக்கு, அன்புடன் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்.

நலம். நலம் அறிய ஆவல்.

காலம் ஓடுகிற வேகத்தைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது தான் இந்த வருடம் புது வருடமாகியிருந்தது. அதற்குள் ஐந்தாவது மாதமாகி அதிலும் பாதிக்குமேல் முடிந்து விட்டது. எதற்காக இத்தனை வேகம் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

Virginia Woolf-ன் To The Lighthouse புத்தகத்திலும் அதே வேகம் தான். கோடை விடுமுறைக்கு தங்கள் விடுமுறை வீட்டிற்கு வந்திருக்கிற குடும்பத்தில் எப்படியும் பிள்ளைகளை அவர்கள் கடலுக்கு மறுகரையில் இருக்கும் கடற்கரை விளக்குக்கு கூட்டிப் போக அம்மா Mrs. Ramsey பெரிதும் முயற்சிக்கிறார்கள்.

காற்று விட்ட பாடில்லை, மனதின் உள்ளேயும் வெளியேயும். ஆனாலும் அந்த அம்மா கடற்கரை விளக்கு பொறுப்பாளரின் மகனுக்கு வீட்டிலிருந்து என்ன கொண்டு போகலாம் என்று படங்கள், புத்தகங்கள் சில தேடி எடுத்து வைக்கிறார்கள். விடிய விடிய அமர்ந்து ராத்திரியும் பகலுமாக குளிருக்கு அவனுக்கு ஒரு stockings பின்னுகிறார்கள்.

கணவர் எப்போதும் எதிராகவே பேசுகிறார். நீங்கள் போக முடியாது. காற்று நிற்கப் போவதில்லை என்று. அவர்கள் வீட்டில் பல நண்பர்களும் தங்கி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அவர்களும் விடுமுறைக்காக வருகிற நண்பர்கள். அந்த வீட்டில் தங்கி அருகிலிருக்கும் கடலில் போய் விளையாடுவதும், மரநிழலில் அமர்ந்து சிலர் கவிதைகள் எழுதுவதும், சிலர் படங்கள் வரைவதுமாக விடுமுறையை கழிக்கிறார்கள்.

தன் கணவர் தன் ஆசைக்கு எதிர்ப்பாய் பேசினாலும் Mrs. Ramsey அவரை மதித்து நடந்து கொள்ளுகிறார்கள். பிள்ளைகளை அன்பாக கவணித்துக் கொள்கிறார்கள். கடைக்குட்டி ஜேம்ஸ்-க்கு எப்போதும் புத்தகங்களில் இருந்து படங்களை வெட்டுவது தான் பொழுதுபோக்கு. அவனை மடியில் அமர்த்தி ஜன்னலோரம் அமர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறார்கள். ஜேம்ஸ்-ம் அவனுக்கு முந்தின பிள்ளை Cam-ம் வளர்ந்துவிடாமல் இப்படியே சின்ன பிள்ளைகளாக இருந்து விட மாட்டார்களா என்று ஆசை படுகிறார்கள்.

வேலைக்காரர்களிடம் பொறுமையாய் இருக்கிறார்கள். விருந்தாளிகளை நன்றாக உபசரிக்கிறார்கள். அவர்கள் தான் வீட்டில் எல்லோரையும் இயக்கும் ஒரு இயந்திரம். பூச்செடிகள் வளர்ப்பதும், சமயம் கிடைக்கும்போது கடற்கரையில் ஒரு பாறையின் மேல் அமர்ந்து கடிதங்கள் எழுதுவதும், துணிகளை துவைத்து, காய வைத்து, மடித்து வைப்பதும், விருந்தாளிகள் ஒவ்வொருவரையும் உற்சாகப் படுத்துவதுமாக ஓய்வின்றி வேலை செய்கிறார்கள்.

இப்படியாக விடுமுறை கழிகிறது. கடற்கரைக்கு போகாமலே. அதற்கும் வருத்தப்பட்டதாக காட்டிக்கொள்ளவில்லை அவர்கள்.

அடுத்த காட்சியிலேயே பத்து வருடங்களாகி விடுகிறது. பத்து வருடம் கழித்து தான் மீண்டும் இந்த விடுமுறை வீட்டிற்கு வருகிறார்கள் அந்த குடும்பம். வீட்டை பார்த்துக்கொள்ளும் வயதான ஒரு பெண்மணி வீட்டை சுத்தம் செய்து, துணிமணிகள் மற்றும் புத்தகங்களை வெயிலில் காய வைத்து, கண்ணாடிகளை துடைத்து, வீட்டை ஒட்டிரை அடித்து, உதவிக்கு ஆட்களை அமர்த்தி, புல் பூண்டுகளை சுத்தம் செய்து ஆயத்தம் செய்கிறார்கள்.

அவர்களின் ஒரே வருத்தம், இந்த பத்து வருடங்களில் அந்த குடும்பம் இந்த வீட்டை எட்டிப் பார்க்கவில்லையே என்பது தான். பிள்ளைகளோ, தாயாரோ ஒரு கடிதம் கூட எழுத வில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் ஒரு கடிதம் வந்திருக்கிறது. "நாங்கள் வருகிறோம், வீட்டை ஆயத்தம் செய்யுங்கள்" என்று ஒரு வரியில் எழுதியிருந்தார்கள்.

எப்படியும் குடும்பம் வருகிறது. Mrs. Ramsey வரவில்லை. இந்த பத்து வருடங்களில் அவர்கள் மரித்துவிடுகிறார்கள். பழைய மாதிரி உற்சாகம் பிள்ளைகளிடமோ, வந்திருக்கிற ஒரு சில பழைய நண்பர்களிடமோ இல்லை. Mr. Ramsey-யிடமும் தளர்ச்சி தெரிகிறது. ஜேம்ஸ்-ம், Cam-ம் வளர்ந்துவிட்டார்கள். 16, 17 வயதாகிறது அவர்களுக்கு.

Mr. Ramsey எப்படியும் இந்த இரு பிள்ளைகளை-யும் Mrs. Ramsey ஆசை பட்டபடி கடற்கரை விளக்குக்கு கூட்டிப்போக விரும்புகிறார். பிள்ளைகளிடம் ஒரு உற்சாகமும் இல்லை. அப்பா என்கிற அன்பும் இல்லை. ஆனால் எதிர்த்து பேசுகிற நிலையிலும் இல்லை. கொஞ்சம் சாப்பாடும் கைகளில் எடுத்துக்கொண்டு அப்பா பின் செல்கிறார்கள்.

படகில் கடலில் செல்ல வேண்டும். கடற்கரை விளக்கு பொறுப்பாளரின் மகன் வந்திருக்கிறான் படகில் கூட்டிச்செல்ல. ஜேம்ஸ் தான் தண்டு வலிக்கிறான். ஜேம்ஸ்-ஓ Cam-ஓ ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை அப்பாவிடம். Mr. Ramsey புத்தகம் ஒன்றை வாசித்தவாறு வருகிறார்.

எப்படியும் கடற்கரை துறைமுகத்திற்கு வந்து சேருகிறார்கள். 'Well done James!' என்று தன் மகனை பாராட்டுகிறார். முதன் முறையாக தன் தந்தையின் பாராட்டை கேட்ட James நெஞ்சம் நெகிழ்கிறான். இப்படியாக கதை முடிகிறது...

இப்படித்தான் நம் கதைகளும் என்று நினைத்துக்கொண்டேன். இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்ய வேண்டும். தள்ளிப்போடுவதில் அர்த்தம் ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன். பாராட்டோ, பரிந்துரையோ, ஆறுதலோ, அரவணைப்போ, இன்றே கொடுப்பது நன்று.

காலம் ஓடுகிற வேகத்தில் நம் பிள்ளைகளை, துணைவரை, பெற்றோரை, உடன்பிறப்புகளை, நண்பர்களை ஆதாயம் செய்ய வேண்டுமானால் நாமும் கொஞ்சம் ஓடியே ஆக வேண்டும்.

கொஞ்சம் பிரயாசப்படத்தான் வேண்டும் - நம் அன்பை வெளிக்காட்ட. முடிந்தவரை நம் அன்பர்களின் ஆசைகளை நிறைவேற்றத்தான் வேண்டும் - நம் விருப்பங்களுக்கு மாறாக இருந்தாலும் கூட. மற்றபடி வேகமான இந்த வாழ்க்கையில் பிரயோஜனம் தான் என்ன? என்று உணர்ந்து கொண்டேன்.

உங்களின் ஆசைகள் நிறைவேற என்றும் என் வாழ்த்துக்கள். உங்களவர்களின் ஆசைகள் நிறைவேற மேலும் என் வாழ்த்துக்கள்.

சந்தோஷமாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் உங்களுக்கு சொல்லுகிறேன் (பரிசுத்த வேதாகமம்).

என்றும் அன்புடன்,

~NRIGirl

வெந்து நொந்து வீதியில்...

1 comments

அன்புள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அறிய.

எப்படி இருக்கிறீர்கள்?

அன்று New York-ல் நடந்து வரும்போது ஒரு homeless நபரை பார்த்தேன். கண்டுகொள்ளாமல் தாண்டி வந்தும் விட்டேன். ஐந்தாறு அடிகள் நடந்தபின் மனசு கேட்கவில்லை. அவசரமாய் திரும்பி விரைந்தேன்.

மதிய உணவுக்காக வைத்திருந்த பழங்களை அவருக்கு தரலாம் என்று நினைத்து, "குட் மார்னிங்! வுட் யூ லைக் ஸம் ஃப்ரூட்ஸ்?" என்று வினவிவேன். நிமிர்ந்து என் கைகளில் உள்ள பழங்களை பார்த்தார். ஒரு ஆப்பிளும், ஒரு வாழைப்பழமும் இருந்தது.

"மிக்க நன்றி. ஆப்பிள் வேண்டாம், என் பல் உடைந்திருக்கிறது. வாழைப்பழத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று நன்றியுடன் வாங்கிக்கொண்டார். அப்படியானால் என்னிடம் இன்னும் ஒரு வாழைப்பழம் இருக்கிறது. தயவுசெய்து அதையும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று நீட்டினேன். மிக சந்தோஷமாக பெற்றுக்கொண்டார்.

ஆச்சரியமாகத்தான் இருந்தது அவரின் நேர்மை.

நான் மிக காலையிலேயே அதாவது ஏழு மணிக்கெல்லாம் New York-க்கு வந்துவிடுவதால், பல homeless நபர்களை பார்க்க நேரிடும். தெரு ஓரங்களில் படுத்திருப்பார்கள். அப்பொழுதுதான் தூங்கி எழுந்துகொண்டிருப்பார்கள். தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும்.

என்னைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் பொதுவாக ஓட்டமும் நடையுமாக ஆஃபீஸ்-க்கு வந்து விடுவேன். என்றாவது அக்கம் பக்கம் பார்த்தால் மாட்டிக்கொள்வேன் மனதிடம். "ஏதாவது கொடுக்க இருக்கிறதா பார். கட்டாயம் கிடைக்கும். சில்லறை இல்லாமலா இருக்கும்" என்று பல ஏவுதல்கள் வரும். அவற்றை அசட்டை செய்து வந்து விட்டால் நாள் முழுதும் எண்ணம் அதில் தான் இருக்கும்.

அடிக்கடி கடந்து போகும் மற்றொரு நபர், ஒரு நாய் குட்டியை அணைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார். ஒரு முறை சில orange பழங்களை கொடுத்தேன். மலர்ந்த முகத்தோடு பெற்றுக்கொண்டார். சில முறை சில்லறைகளை கொடுத்திருக்கிறேன். "தாங்க்யூ, காட் ப்லெஸ் யூ" என்று ஆசீர்வதிப்பார்.

அன்று ஒரு நாள் வழக்கத்திற்கு முந்தின பஸ்-ஸில் வந்து விட்டேன். இவர் துள்ளிக்குதித்து நடந்து வந்துகொண்டிருந்தார், நாய் குட்டி பின் தொடர. அவர் என்னை கவணிக்கவில்லை. நானும் அவரை கவணித்ததாக காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் மனதில் ஒரு போராட்டம், "ஏமாந்து விட்டோமோ? ஏமாற்றி விட்டாரோ", என்று.

ஏதோ எப்போதோ என்னவோ பெரிதாய் உதவி விட்டோம் என்கிற பெருமிதத்தில், அவர் நடக்கக்கூடாது என்றும், சிரிக்கக்கூடாது என்றும் எதிர்பார்ப்பது எத்தனை அபத்தம்.

சந்தோஷப்படாமல் சங்கடப்படுகிறாயே. இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருந்தால் நீயே வைத்துக்கொள் உன் சில்லறையை, யாருக்கு வேண்டும் உன் பழங்கள். கண்ணை மூடிக்கொள். கையை பொத்திக்கொள். யாருக்கு நஷ்டம் அதனால். என்னை நானே கடிந்து கொண்டேன்.

வெந்து நொந்து வீதியில் வந்து நிற்கும் நபரிடம், "நீ நன்றாகத்தானே இருக்கிறாய். ஏதும் வேலை செய்து பிழைக்க வேண்டியது தானே", என்று வாதாடும் சிலரை பார்த்திருக்கிறேன். ஏன், எதற்கு, என்று நம்மிடம் அவர்கள் விளக்கியே ஆக வேண்டிய அவசியம் இல்லையே. முடிந்தால், மனம் இருந்தால் இரண்டு காசு கொடுத்து விட்டு அகல வேண்டிய ஒன்றே நியாயம்.

ஒரு நண்பர் கேட்டார். எப்படி தெரியும் அவர்கள் உண்மையில் தேவை உள்ளவர்கள் தான் என்று?

தேவை இல்லாவிட்டால் கேட்க மாட்டார்களே. வீடு இருந்தால் வீதிக்கு வர மாட்டார்களே.

எப்படி தெரியும் யாருக்கு கொடுக்கவேண்டும் என்று?

கேட்கிற எவருக்கும் கொடுக்க வேண்டியது தானே.

நான் ஏதோ பெரிதாய் ஒன்றை செய்துவிட்டதாய் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காக இதை எழுதவில்லை. தயங்கி நிற்கும் நண்பர்களை கொஞ்சம் தூண்டிவிடத்தான் எழுதுகிறேன்.

"கூப்பிடுகிற எவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். கேட்கிற எவரும் பெற்றுக்கொள்கிறார்கள்" என்று வேதம் சொல்லுகிறதே. அப்படியானால் நம்மை கூப்பிடுகிறவர்களுக்கு நாம் செவி மறுக்கலாமா? நம்மிடம் கை நீட்டும் நபருக்கு நாம் கை முடக்கலாமா?

கூடாது என்கிறது என் மனது...

என்றும் அன்புடன்,

~NRIGirl

காற்று

8 comments

"இது தான் ஆடி மாதமாக இருக்குமோ", என்று யோசிக்கிறேன். காரணம் அவ்வளவு காற்று. அம்மியை தூக்குகிறதோ இல்லையோ ஆட்களை தூக்க கொஞ்சம் முயற்சிக்கத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.

காலையில் மெனெக்கெட்டு சீவி சிங்காரித்து கிளம்பினால், தலை விரி கோலமாகத்தான் ஆஃபீஸ்-குள் வந்து சேருகிறோம். அவ்வளவு காற்று. 

குட்டைப் பாவாடை அணிந்த பெண்களின் நிலமை இன்னும் பரிதாபம். கிளு கிளு சிரிப்போடு பறக்கும் பாவாடைகளை அமுத்தியபடி காற்றை அவர்கள் திட்டுவதை கேட்க நமக்கு சிரிப்புத் தான் வருகிறது. அவ்வளவு காற்று.

இப்பொழுது தான் பூக்க ஆரம்பித்திருக்கும் பல மரங்களும், பூத்த பூக்களை அவசரமாய் உதிர்த்து விட்டு, 'ஐயோ இன்னும் கொஞ்சம் தூங்கி இருக்கலாமோ' என்று கவலையாய் நிற்கிறது. அவ்வளவு காற்று.

வெப்ப நிலை இன்று 60-களில் என்றால், நாளை 40-களில் என்றிருக்கும். குளிர் காலம் திரும்பி வந்து விட்டதோ என்று திகைக்க வைக்கும். அவ்வளவு காற்று.

கடந்த சில நாட்களாய் சூரியனும் பேருக்கு தலையைக் காட்டி விட்டு பிறகு தலைமறைவாகி விட்டது. இன்று என்னவோ தலையையும் காணோம் - ஏதோ காற்றிற்கு பயந்துகொண்டு, மேகங்களுக்குள் ஒளிந்திருக்கிறது போலும். அவ்வளவு காற்று.

சொல்லப்போனால், காற்று சுகமாகத்தான் இருக்கிறது. மனதில் ஒரு இனம் தெரியாத உல்லாசத்தை தரத்தான் செய்கிறது. அப்படியே நடந்து கொண்டே இருக்கமாட்டோமா சுதந்திரமாய்? என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.

ஏதோ நம்மை தழுவிச்செல்வது தான் அதன் தலையாய கடமை என்று ஒரு கற்பனை விரியத்தான் செய்கிறது. காற்று பட்ட முகமும், மேனியும், உடையும், உள்ளமும் ஒரு படி அழகில் கூடி விட்டதாய் ஒரு எண்ணம் வரத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.   

நான் வாசித்துகொண்டிருக்கும் 'To The Lighthouse' புத்தகத்திலும் வீசுகிறது காற்று. ஒரு தீவில் கோடை விடுமுறைக்காக வந்திருக்கிறார்கள் ஒரு குடும்பம். அம்மா தன் எட்டு பிள்ளைகளை, குறிப்பாக சின்னவன் James-ஐ, அங்குள்ள கடற்கரை விளக்குக்கு கூட்டி போக படும் பாட்டைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள், வேற யாரு, நம்ம Virginia Woolf அம்மையார் தான்.

 "நாளைக்கு போவோம் விளக்கை பார்க்க", என்று சொல்லுகிறாள் அன்னை. பிள்ளைகள் சந்தோஷப்படுகிறார்கள். "எப்படி போக முடியும்? இவ்வளவு காற்றில்?, சாடுகிறார் தந்தை. பிள்ளைகள் வாடிப்போகிறார்கள். "நாளை நன்றாக இருக்கும்", சமாதானப்படுத்துகிறாள் பெற்றவள். "இல்லவே இல்லை, ரொம்ப மோசமாக இருக்கும்", இன்னும் இறுக்குகிறார் பெற்றவர்.

அடிக்கிறது காற்று - மனதில்... அவ்வளவு காற்று.

வெளியே வீசும் காற்றுக்கும், மனதின் உள்ளே வீசும் காற்றுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். ஒன்று மூச்சை நிறைக்கிறது. மற்றொன்று மூச்சை அடைக்கிறது. ஒன்று மனதை பறக்க வைக்கிறது. மற்றொன்று மனதை கூண்டில் அடைக்கிறது. ஒன்று இதமாய். மற்றொன்று இடறலாய். சுகமாய் ஒன்று. சுமையாய் மற்றொன்று. கலகலக்கும் ஒன்று. கலங்க வைக்கும் மற்றொன்று. ம்ஹூம்.

மன்னிக்கவும் - காற்றில் எங்கேயோ போய் விட்டது மனது... அவ்வளவு காற்று.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் ஊரில் இப்போது என்ன காலம்? உண்மையில் இது என்ன மாதம்? ஆடி எப்போது? தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்?!


என்றும் அன்புடன்,
~ NRIGirl

A Room of One's Own

4 comments

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நாங்கள் எல்லோரும் நல்ல சுகம்.

சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வருகிறேன்.

நிறைய பேருக்கு ஒரே கேள்வி, 'உனக்கு எங்க தான் நேரம் கிடைக்குது கடிதம் எழுத?' என்று. நமக்கு மூச்சு விட நேரம் எடுக்கிறோமா என்ன? யோசிக்க? இல்லை. பேச? இல்லை. அது போல் தான் இதுவும் என்பது என்னுடைய பதில். ஆனால் அவர்களிடம் சொல்லத்தான் தயங்குகிறேன்; புரிந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்று.

எப்படியும், உங்களுக்கு இந்த வலை தளம் மூலம் கடிதம் எழுதுவதை என் சிந்தனைகளின் ஒரு வடிகாலாகவே கொள்கிறேன். நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது அதை எழுதினவரின் சிந்தனை ஓட்டத்தை தெரிந்துகொள்கிறோம். நம் அலை வரிசையில் ஒத்துப்போகும் சிந்தனை உள்ளவர்களை தொடர்ந்து படிக்கிறோம். மற்றவர்களை ஒரு பக்கத்தோடு நிறுத்தி விட்டு மீண்டும் தேடுகிறோம் - நம் அலை வரிசையை.

இப்போது நான், Virginia Woolf எழுதிய, 'A Room of One's Own' வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  அலை வரிசை அவ்வளவாக ஒத்துப்போகாவிட்டாலும், அவர்கள் எழுத்து நடை நன்றாக இருப்பதாலும், சரி என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போமே என்பதாலும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

என்னவென்றால், 'பெண்களும் கதைகளும்' என்ற தலைப்பில் அவர்களை பேசக் கேட்டிருக்கிறார்கள் ஒரு கல்லூரியில். அந்த கட்டுரையை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதை அழகாய் விவரித்திருக்கிறார்கள் - இந்த புத்தகத்தில். 

அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில், "ஒரு பெண் கதைகள் எழுத வேண்டுமானால், அவளுக்கென்று ஒரு தனி அறை வேண்டும், வருடம் ஒரு $300-ஆவது கைச்செலவுக்கு பணம் வேண்டும்", என்று முடிக்கிறார்கள். அவர்கள் எழுதியது 1929-ஆம் வருடத்தில். அதை ஆம் என்றும் இல்லை என்றும் இன்னும் விவாதங்கள் தொடருகிறது - எழுத்தாளர்கள் மத்தியில்.

அவர்கள் கூறும் கருத்தில் ஒரு கருத்து என்னை பாதித்தது. அவர்கள் சொல்லுகிறார்கள், ஒரு பெண் கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதப்போனால், உலகம் அவர்களைப் பார்த்து சொல்லுமாம், "நீ எழுத வேண்டுமானால் எழுதிக்கொள் எதையும், என்னை அது எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் நீ எழுதுவதை நான் வாசிக்கப்போவதில்லை", என்று.

நான் ஏன் இதை உங்களிடம் சொல்லுகிறேன் என்றால், என் கடிதங்களும் அப்படியே. எத்தனை பேர் படிக்கிறார்கள், அதில் எத்தனை பேர் புரிகிறார்கள், அதிலும் எத்தனை பேர் தொடர்கிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான். அதனால் தான் நண்பர்கள் கேட்கிறார்கள், "யாருக்காக எழுதுகிறாய்? எங்கிருக்கிறது உனக்கு நேரம்? நீ எழுதி நாங்கள் யார் படிக்கப்போகிறோம்" என்று.

எனக்காகத்தான் எழுதுகிறேன் என்பது என் தாழ்மையான பதில். உங்களிடம் பேசுவதாக எண்ணிக்கொண்டு என்னிடம் நானே பேசிக்கொள்கிறேன் இந்த கடிதங்கள் மூலம். அவ்வளவு தான். ஒரு வேளை இன்னும் ஐந்து வருடங்களோ பத்து வருடங்களோ கழித்து வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, வாழ்ந்ததின் தடங்களாக இந்த கடிதத் தொகுப்பு அமையும் என்பது ஒன்றே என் எதிர்பார்ப்பு.

ஆனால் இப்போது Virginia அம்மையாரின் பாதிப்பினால், எப்படியும் எனக்கென்று ஒரு அறை வேண்டும் என்பது மனதில் பதிந்து விட்டது. தேடுகிறேன், "ஒரு முக்கோ, மூலையோ அமையுமா நமக்கென்று", என்று. அமையும் போது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் தானாய் புரளத்தான் போகிறது, அம்மையாரின் கருத்துப்படி. அமையும் வரை முடிந்தது கடிதங்கள் மட்டுமே.

அடுத்த கடிதம் விரையும் வரை விடை பெறுகிறேன்.

அன்புடன்,
~NRIGirl