ஓரம் கட்டின அனுபவங்கள்

2 comments

வெறுமையாய் இருக்கிறது மனது, வெளியில் தெரியும் வானம் போலே. 

எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம். 

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க... 

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும். 

அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருள் பிள்ளைகள் கைபட்டு உடைந்து விட்ட போதும், பிள்ளைகள் மனம் உடைந்து விடக்கூடாதே என்பதில் கவனம் திரும்பும். "பரவாயில்லை, போகட்டும்", என்று மனது ஆறுதல் கொள்ளும். 

அழுக்காய் கிடக்கிறது வீடு. "அதற்கென்ன இப்பொழுது. சுத்தம் செய்தால் ஆயிற்று. நம் வீடு. நாம் தானே செய்ய வேண்டும்", என்று மேலும் சமாதனம் செய்யும். 

மடிக்க வேண்டிய துணிகள் பெருகிக் கிடக்க, மனம் ஏனோ இன்று படம் வரைவதில் மும்முரம் காட்டும். 

விடாப்பிடியாய் ஒலிக்கும் தொலை பேசியின் கைபேசியை வீட்டின் மூலைகளில் நிதானமாய் தேடும். 

காலையில் அலாரம் வைக்க மறந்த கணவரை மலர்ந்த முகத்துடன் வாழ்த்தும். அலுவலகத்தில் தாமதத்தை அருமையாய் விளக்கும் - "கொஞ்சம் தூங்கி விட்டேன்", என்று. 

நீண்டு கொண்டே போகும் பிள்ளைகளின் கதைகளில் உண்மை ஆர்வம் காட்டும். 

மலர்ந்து நிற்கும் மல்லிகைப் பூக்களை ஆசையாய் மணக்கும். உதிர்ந்து கிடக்கும் பூக்களை விரல்கள் கேசத்தில் சொருகும்.  

அமைதி நிலவும் புல்லின் வெளியில் கொஞ்சம் தலை சாய்க்கும். 

வெறுமையாய் விரிந்த வானத்தின் அழகை கண்கள் ருசிக்கும். ஒரு திட்டில்லாமல் ஒரே சீராய் அமைந்த ஊதா நிறத்தை நெஞ்சம் ரசிக்கும்.  

எனக்காகவே, என் ஒருத்திக்காகவே தினமும் மாற்றப்படும் இந்த ஆகாய ஓவியத்திற்காய் மனம் நன்றி சொல்லும். இறைவனின் கலைநயத்தை எண்ணி எண்ணி வியக்கும். 

சிரிப்பும், களிப்பும், கும்மாளமும், உல்லாசமும் வெகு விரைவில் மீண்டும் தொடரும். 

அது வரை நெஞ்சம் இளைப்பாறும், கொஞ்சம் உங்களோடு...

Wish we were camping... :(

2 comments


"ஒரு பெரீய மல, அத தாண்டி போனா ஒரு பெரீய கடல். அதையும் தாண்டி போனா இன்னொரு பெரீய மல. அப்புறம் இன்னொரு பெரீய கடல். இப்படி ஏழு மலயும் ஏழு கடலும் தாண்டி போனா அங்க ஒரு அழகான ஆறு...", இப்படித்தான் ஆரம்பிக்கும் பெரும்பாலும், சங்கரம்மாள் பாட்டியின் கதைகள்.

சிறு பிள்ளைகள் நாங்கள் கண்கள் அகல மனதில் பெரிய, பெரிய கடல்களும், மலைகளும் வந்து போக இந்த கதைகளில் ஆர்வம் கொள்வோம்.

நான் அநேகமாக இந்த வரிகளிலேயே தங்கி விட்டிருப்பேன் போலும், ஏனென்றால் எத்தனை முயன்றாலும், இதற்கு மேல் என்ன கதை சொன்னார்கள் என்பது நினைவில் வர மறுக்கிறது, ஏதோ ஆரம்பித்த வேகத்தில் கதை முடிந்து விட்டது போல...

கனவுகள் நிறைவாகும், நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சங்கரம்மாள் பாட்டியின் கதைகளும் நிறைவாகியிருக்கிறது கடந்த நாட்களில்.

சொல்கிறேன்...

சென்ற வாரம் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட முன்னூறு மைல் தொலைவில் உள்ள Lake Placid சென்று வந்தோம், சில நண்பர்கள் சூழ. வீட்டில் நான் அடுப்பறையில் வைத்திருக்கும் கரும்பலகையில் பெருமிதமாய், "Gone Camping! :)" என்று எழுதி வைத்துவிட்டு ஆரம்பித்தோம் பயணத்தை.

எத்தனை எத்தனை மலைகள் தாண்டி! எத்தனை எத்தனை கடல்கள் தாண்டி! எத்தனை எத்தனை அழகு இந்த உலகம்!! அதிலும் எத்தனை அழகு இந்த இடம்!!! Lake Placid ஒரு கண் கொள்ளா காட்சி தான்.

எத்தனை தான் சிறப்பான camera வைத்திருந்தாலும் அத்தனை அழகையும் புகைப்படமாக்குவது வெகு சிரமமாகப்பட்டது. ஆதலால் camera-வை கை விட்டு கண்களில் நிறைத்தோம் கதை உலகை. மனதுகளில் நுழைத்தோம் மலைகளின் அழகை.

கூடாரமடித்து குதூகலித்தது கூடுதல் கொண்டாட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கூடாரம்.

நாங்கள் சென்றடையும் போது மழை பெய்து கொண்டிருந்தது. அதை சற்றும் பொருட்படுத்தாது கூடாரம் அடிக்க துவங்கினோம். துவங்கினோம் என்று சொல்வதை விட துவங்கினார்கள் என்று சொல்வது தான் சரி, ஏனென்றால் நாங்கள் பெண்கள் குடை பிடித்து நின்று வேடிக்கை பார்த்ததோடு சரி. மழையில் நனைந்து கூடாரம் அடித்தது எங்கள் கணவர்கள் தான்.

ஒரு நரி பதுங்கி பதுங்கி மழையில் ஒதுங்கியது கண்டு கொஞ்சம் கலவரமும், நிறைய சந்தோஷமுமானோம். இரவில் தான் நண்பர் விளக்கினார், "'நரி முகத்தில் முழித்த மாதிரி' என்று ஒரு பழமொழி இருக்கிறது. நரியை பார்த்தது ஒரு அதிர்ஷ்டம் என்று."

அதிர்ஷ்டம் தான் போலும்! கூடாரம் முடிக்கவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. கொண்டு வந்த படுக்கை மற்றும் சாதனங்களை கூடாரத்தில் வைத்து விட்டு, இரவு உணவு பற்றி யோசிக்க ஆரம்பித்தோம். நெருப்பு மூட்ட ஆரம்பித்தார்கள் பிள்ளைகள்.

தோழி மணக்க மணக்க சமைத்திருந்த கோழி குருமாவும், ரசமும், நாங்கள் கொண்டு சென்றிருந்த சப்பாத்தியும், சுட சுட பொங்கிய சோறும், வயிறையும் மனதையும் நிரப்பியது. சாப்பிட்ட திருப்தியில் நெருப்பின் அருகில் கொஞ்ச நேரம் கதைத்தோம். கதைத்த களைப்பில் உறங்கிப்போனோம்.

விடிந்ததும் விடியாததுமாய் (விடிந்தது எங்களுக்கு, விடியாதது இன்னும் உறங்கும் பிள்ளைகளுக்கு) பகல் உணவுக்கு கொண்டு வந்திருந்த ரொட்டி, muffin, வகையறாக்களை ஒரு பிடி பிடித்தோம். காணாத குறைக்கு கொண்டு சென்றிருந்த தோசை மாவை ஊற்றி தோசையாகவும் இல்லாமல், ஊத்தப்பமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் ஒரு பதமாக சமைத்து அதையும் உள்ளே தள்ளினோம்.

பிள்ளைகள் முழித்து வரவே, அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கிறோம் என்ற பெயரில் இன்னும் ஒரு வட்டம் கட்டினோம். இவ்வளவும் சாப்பிட்டு இன்னும் ஏப்பம் விடாத நிலையில் மதிய உணவு குறித்து ஆலோசிக்கலானோம்.

இருக்கவே இருக்கிறது புதிதாய் பொங்கின சோறு. கூடவே இருக்கிறது மீதியுள்ள கோழி குழம்பு. போதா குறைக்கு புளியோதரை mix-ம், கொண்டு சென்ற ஊறுகாயும், chips-ம். முடித்து குளித்து கிளம்பி Lake Placid-க்கு சென்றோம், சுதந்திர தினத்தை கொண்டாட.

வெளிச்சம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் குளிரும் காற்றும் சுற்றி வளைத்து அடித்தது. கிளம்பி விடலாமா என்று யோசிக்கும் போது தான் நான் ஆசையாய் செய்து கொண்டுபோயிருந்த cake நியாபகம் வந்தது.

Cake என்பது பெயரில் தான். சரி ருசியிலும். ஆனால் பார்க்க என்னவோ பரிதாபமாய்தான் இருந்தது. யாரும் அதை குறை சொல்லவில்லை. ஏனென்றால் அவ்வளவு பசி, மன்னிக்கவும் ருசி!

பிள்ளைகள் lake-ல் மீன் பிடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பாவம் போல சின்னதாய் 7 மீன்கள் அவர்களிடம் மாட்டியிருந்தன. கிடைத்த வரையில் கொண்டாட்டம் என்று உற்சாகாமாய் கிளம்பினோம் வான வேடிக்கை பார்க்க.

இந்த குளிரில் எங்களால் இருக்க முடியாது என்றும், திரும்பி போய் விடுவோம் என்றும், வயிறு பசிக்கிறது என்றும் பலவாறாக பிள்ளைகளும் பெரியவர்களும் குரல் எழுப்பவே நண்பர் சமாதானம் செய்தார், "இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது, வான வேடிக்கை துவங்க. அதற்குள் சாப்பிட்டிட்டு வந்திரலாம்" என்று. "கட்டாயமாய்", என்றவாறு கிளம்பினோம் ஏதோ சாப்பிட்டு ஐந்தாறு நாட்கள் ஆன மாதிரி.

வாய்த்தது சைனீஸ் தான். ஏனோ இறங்கவில்லை. எப்படி இறங்கும் - விடாமல் தொடர்ந்து சாப்பிட்ட களைப்பில்? அதை யோசிக்காமல் சாப்பாட்டை குறை சொல்லிவிட்டு மீண்டும் ஏரிக்கரைக்கு வந்து அமரவும், இருட்டி விட்டிருந்தது.

எட்டு வயது சிறுமி ஒருத்தி கணீரென்று ஒலிபெருக்கியில் தேசிய கீதம் (Star spangled banner) பாட, கூடி வந்திருந்த மக்கள் அனைவரும், நாங்களும் கூட கொடியை நோக்கி நின்று, வலது கையை இதயத்தில் வைத்து கொடி வணக்கம் செய்தோம்.

பாடல் அறிந்த எங்கள் பிள்ளைகளும் சேர்ந்து பாட பெருமிதம் கொண்டோம். ... Oh, say does that star-spangled banner yet wave O'er the land of the free and the home of the brave?- என்ற வரிகளை பாடும்போது சற்றே சிலிர்த்து நின்றோம்.

வான வேடிக்கை துவங்கியது. ஏங்கப்பா, என்ன வானம், என்ன வெடி, என்ன வேடிக்கை! நொடிகளில் தோன்றியும் மறைந்தும் வேடிக்கை காட்டியது வெடிகள் வானில்.

என் மனதில் சிறு பிள்ளை கும்மாளங்கள் அடங்கி இறைவன் இயேசு மீண்டும் வரும் நாட்கள் பற்றி நினைவு வந்தது, "இப்படித்தான் இருக்கும் போலும். நடு வானில். மின் வேகத்தில். நொடிப் பொழுதில். தோன்றின பொழுதில் மறைய. கூட நாமும் செல்ல. எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில். அப்பப்பா!"

சிந்தனைகள் சிதற கிளம்பினோம் கூடாரம் நோக்கி. சாப்பிட்ட களைப்பு தான். நல்ல உறக்கம்.

மறு நாள் மீதி பண்டங்களை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பினோம் ஆற்றை நோக்கி. கொக்கியும் கையுமாய் காத்திருந்தது தான் மிச்சம். ஒற்றை மீனையும் காணோம்.

பரவாயில்லை. சமாதானம் ஆனோம். ஆற்றின் நீரில் ஆசை தீர விளையாடி மகிழ்ந்தோம்.

மீண்டும் கூடாரம், சமையல், சாதம், காய்கறிகளும் பிரமாதம்...

"இல்லை இது போதாது, உங்கள் இந்திய சாப்பாடை தொடர்ந்து எங்களால் சாப்பிட முடியாது. எங்களுக்கு வேண்டும் எங்கள் சாப்பாடு. அமெரிக்க சாப்பாடு.", என்று பிள்ளைகள் குரல் எழுப்பவே, உணவு விடுதி தேடி சென்றோம். வசமாய் மாட்டியது Hungry Trout - அருமையான சூழலில் அமர்ந்திருந்த அழகான restaurant.

எப்படி இருக்குமோ என்று தான் சென்றோம். பொரித்தோ அவித்தோ வைத்திருந்தார்கள் முழு மீனை. கூடவே வெண்ணையும், ரொட்டியும், அருமையாய் சமைத்த காய்கறிகளும்.  வெளுத்து கட்டிவிட்டோம் - நண்பர் பணத்தை.

அதனால் தானோ என்னவோ, மறு நாள் காலையிலேயே தப்பித்தோம் பிழைத்தோம் என்று நண்பர் கிளம்பி விட்டார். "ச ச அதெல்லாம் ஒன்னுமில்லை எனக்கு Monday வேலைக்கு போணும் அதான்", என்றார் பரிதாபமாய்.

மீதி குடும்பங்கள் மீண்டும் ஆற்றுக்கு சென்று காத்து கிடந்தோம், இன்னும் இரண்டு மீன் கிடைக்குமா என்று. கிடைக்காத பட்சத்தில் கூடாரம் திரும்பினோம், நாங்கள் மட்டும் தனியாக.

மீனோடு தான் திரும்புவோம் என்று இன்னும் காத்து கிடந்தார்கள் எங்கள் கணவன்மார்களும், சிறு பிள்ளைகளும். வெகு நேரம் பொருத்து வெறுமையாய் வந்து சேர்ந்தார்கள் - ஒரு சின்னஞ்சிறு மீனுடன் - சுண்டு விரல் அளவிருக்கும்!

புது மீன் கிடைத்த உற்சாகத்தில், நேற்று கிடைத்த ஏழு மீன்களையும் சேர்த்து, கழுவி, உப்பு, மஞ்சள், வத்தல் சேர்த்து, பொரித்து, மீதி எண்ணையில் கொஞ்சம் சோறும் விரவி... சுடச்சுட... இதல்லவா வாழ்க்கை...

வெகு நேரம் அமர்ந்து நெருப்பின் ஒளியில் பிள்ளைகளும் பெற்றவர்களுமாய் கூடி அமர்ந்து கதைகள் பேசினோம். சிரித்தோம். கூட வந்த நண்பர் காஷ்மீர் காரரானதால், அவர்கள் கதைகள் கேட்டு கண்கள் கசிந்தோம்.

நிறைந்த மனதுடன், நிம்மதியாய் ஒரு உறக்கம் போட்டு, விடிந்ததும் கூடாரம் பிரித்து, பிரிய மனமில்லாமல் ஊர் விட்டோம்...

வீட்டிற்கு வந்து சேர்ந்த நொடியில், பெருமூச்சோடு மாற்றி எழுதினோம் அடுப்பறை கரும்பலகையில், "Wish we were camping... :(" என்று...