வட்டம் வட்டமாய் நம் உலகம்

0 comments

தனி மரங்கள் இல்லை நாம் தோப்புகள். தீவுகள் இல்லை நாம் தீபகற்பங்கள். வெறும் புள்ளிகள் இல்லை நாம் வட்டங்கள்...

நிற்க தோழி! சென்ற பதிவில் என்னவோ தனிமையே இனிமை என்பது போல் எழுதியிருந்தீர்களே; இன்று முரணாயிருக்கிறதே உங்கள் கருத்து?

நன்றி சகோதரா(ரி)!

நீங்கள் என் பதிவுகளை வாசிக்கிறீர்கள், யோசிக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அது அன்றைய என் மன நிலை. இது என்றுமே நம் அசல் நிலை. மனமும் அசலும் அவ்வப்போது கொஞ்சம் முரண்படுவது சகஜம் தானே?!

நீங்கள் ஆட்சேபிக்காமல் ஆமோதிக்கிறதினால் தொடருகிறேன் என் கருத்தை...

பொதுவாய் தன், தனி, தான் என்று நாம் தனித்தியங்கினாலும், வட்டங்களில் சுழலும் கூட்டு வாசிகள் நாம் என்பதை மறுக்க முடியாது.

சிறு வயது தொடங்கி வயதில் முதிரும் வரை வட்டம் வட்டமாய் நம்மை சுற்றி பல வட்டங்களை வரைந்து கொள்கிறோம் நாம்.

சொந்தங்களின் வட்டம். நட்புகளின் வட்டம்.  பள்ளி பருவத்தில் வரைந்த வட்டம். கல்லூரி நண்பர்களின் வட்டம். வேலை ஸ்தலங்களில் வட்டம். தெருமுனைகளில் வட்டம். விரும்பி நேயர்களின் வட்டம், வலை தல உலகில் வட்டம். தூர தேசத்தில் வட்டம். சமீபத்தில் வட்டம். நெருங்கின வட்டம். சுருங்கின வட்டம்...

நம்மை பெற்றோரின் நண்பர்கள் என்றொரு வட்டம், நாம் பெற்றவர்களின் நண்பர்கள் என்றொரு வட்டம். புதிய வட்டங்கள். பழைய வட்டங்கள். சிறிதாய், பெரிதாய் பல்வேறு வட்டங்கள்.

இந்த வட்டங்கள் அனைத்தும் பொதுவாக நம்மை சுற்றி நாமே வரைந்து கொண்டதாலோ என்னவோ, நம்மை சுற்றியே அவை இயங்குவதாய் நமக்கொரு எண்ணம். ஆனால் நிஜம் என்னவோ, நாம் தான் இந்த வட்டங்களின் விளிம்புகளில் இயங்குகிறோம்.

பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது போலத்தான் நாமும் தன், தனி, தான் என்று நம்மை நாமே சுற்றிக்கொண்டு நம்முடைய வட்டங்களையும் சுற்றி வருகிறோம்.

காலப்போக்கில் நெருங்கின வட்டங்கள் விரிவதும், விரிந்த வட்டங்கள் சுருங்குவதும், தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

விளிம்புகளிலேயே சுற்றிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் நெருங்கி வந்த நட்புகளின் வட்டங்கள் சிறிதாய் இருப்பதால் நம்முடைய சுழற்சியும் அதிகமாய் இருக்கிறது அவர்களை சுற்றி.

விளிம்புகளில் இருந்து அகன்று சென்ற நட்புகள் விரிசலாய் விரிந்து அகலமாய், தூரமாய், வெகு தொலைவில் சென்று விடுவதால், நம்முடைய சுழற்சியும் வெகுவாய் குறைந்து காலப்போக்கில் நின்றே விடுகிறது அவர்களை சுற்றி.

இப்படி நாம் வட்டங்களை வரைந்து கொண்டிருக்க, நம்மை வட்டங்களில் வரைந்து கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள். அவர்கள் வட்டங்களில் நாம் நெருங்கி செல்வதும் அகன்று செல்வதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

ஓட்டமும் நடையுமாய், வட்டங்களின் விரிசல்களை தவிர்க்கத்தான் முயற்சிக்கிறோம். முடியாத போது கை விரித்து நிற்கிறோம்.

அதற்காய் வருந்தி புள்ளியாய் மாறி மறைந்து விடுவதில்லை நாம். நெருங்கின வட்டங்களில் இன்னும் நெருங்கிக்கொள்கிறோம். அது கூடாத பட்சத்தில் புத்தம் புதிதாய் ஒரு வட்டம் வரைகிறோம். நான், நீ, நீங்கள், நாம் என்று...

...

இந்த இடத்தில் நிறுத்தி மேற்கொண்டு எழுதியவற்றை வாசிக்க, "அட! பரவாயில்லயே!" என்றொரு எண்ணம் தோன்ற, ஏதோ என்னை சுற்றி ஒரு ஒளி வட்டம் நானே வரைய தொடங்க, "போதும் இந்த போக்கு!!", என்று நிறுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம்...

உங்களில் யாரேனும் இந்த வட்டத்தின் விட்டத்தை விரிவாக்கினால் பெரும் உதவியாயிருக்கும். நான் கொஞ்சம் சிரமம் எடுத்து ஒளி வட்டத்தை கிறுக்க முயற்சிக்கிறேன்...

ஒருவேளை யாரேனும் முன்வராத பட்சத்தில், அடுத்த பதிவில் தெளிந்த சிந்தையுடன் தொடருகிறேன்  மீதமுள்ள என் கருத்தை......

உங்கள் வட்டத்தில் என்றும்,
~ NRIGirl

நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை

0 comments

ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது படகு. எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம்.

தனிமையாய் நிற்கிறது படகு. நல்லவேளையாய் படகினுள் நாங்கள் குடும்பமாய் இருப்பதினால் சந்தோஷத்திற்கு குறைவில்லை. ஆனாலும் ஒரு உறுத்தல், எங்கே போனார்கள் நம் நண்பர்கள் என்று.

என்னவாயிருக்கும்? நாம் என்ன தான் சொல்லிவிட்டோம் அல்லது செய்துவிட்டோம், அவர்கள் கோபித்துக்கொள்ள? என்று சின்னதாய் ஒரு எண்ணம் இல்லாமல் இல்லை.

ஆற அமர யோசித்துப்பார்த்ததில் மாற்றம் என்னிடம் தான், நண்பர்களிடம் இல்லை, என்பதை புரிந்து கொண்டேன்.

அவர்கள் எப்பொழுதும் போல் தான் இருக்கிறார்கள். அதிகம் கண்டுகொள்ளாமல். பட்டும் படாமல். தொட்டும் தொடாமல்.

நான் தான் மாறியிருக்கிறேன் சமீப காலங்களில். எதிர்பார்ப்பற்று நட்பு கொண்டாடிய நான், இன்று கொஞ்சம் எதிர்பார்க்கத்தொடங்கி விட்டேன், அது தான் மாற்றம்.

சேர்ந்து விளையாட சென்றார்கள் எங்களை கூப்பிடவில்லை, எல்லோரும் கடலுக்கு போனார்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை, என்பதாய் எனக்குத்தான் மனவருத்தங்கள் அவர்களிடம்.

என்னிடம் அவர்கள் கோபித்துக்கொள்ளவில்லை, இல்லவே இல்லை; நான் தான் அவர்களிடம் கோபித்துக்கொண்டிருக்கிறேன், ஒரு துளி அன்பில்லை என்று.

என்னை அவர்கள் ஒதுக்கவில்லை, இல்லவே இல்லை; நானாகவே கொஞ்சம் ஒதுங்கி நிற்கிறேன், போதும் இவர்கள் நட்பு என்று.

இந்த வருத்தங்கள் தீர வேண்டுமானால், என் எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறைய வேண்டும்.

'கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்' என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன் நான்.

'கொடுங்கள்' என்பது மட்டுமே எனக்கான கட்டளை. 'உங்களுக்கு கொடுக்கப்படும்' என்பது இறைவனின் பொருத்தனை. அதை மக்களிடம், குறிப்பாக நம் நண்பர்களிடம் எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு.

இப்படி தேவையற்ற எதிபார்ப்புகளை கொண்டிருப்பவர்களை பற்றித்தான் வேதத்தில் வாசிக்கிறோம்: "இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து: உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.", என்று. (மத்தேயு 11:16-17)

இப்படியாகத்தானே இருக்கிறது நண்பர்களிடம் நான் கொண்டுள்ள குறைகளும்?

எங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று என்ன கட்டாயம்? கூப்பிட்டால் சந்தோஷம், கூப்பிடாவிட்டால் அதைவிட சந்தோஷம் என்று தானே இருக்க வேண்டும்? தந்தால் நன்றி, தராவிட்டால் மிக்க நன்றி என்ற மன பக்குவம் தானே வேண்டும்?

தேவையில்லா எதிர்பார்ப்புகள் ஏன்? வீண் வருத்தங்கள் ஏன்? வெறும் குறைகள் தான் ஏன்?

நம்மை சுற்றியா அவர்கள் உலகம்? நண்பர்களை சுற்றியா நம் உலகம்? அவ்வளவு சின்னதா நம் உள்ளம்?

பரந்து விரிந்த உலகில் நம் எல்லைகள் ஏன் குறுக வேண்டும்?

ஓரமாய் ஒதுங்கி வேடிக்கை ஏன்? துள்ளலாய் நீந்தி மகிழத்தானே வேண்டும்?

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க...

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும்...

(இதைத்தான் சொல்ல வந்தேன் சில இடுகைகளுக்கு முன், "ஓரம் கட்டின அனுபவங்கள்" என்ற தலைப்பில்.

சொல்லவந்ததை சொல்லாமல் மழுப்பி விட்டதாய் ஒரு நெருடல், அதனால் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்திருக்கிறேன் இந்த பதிவில்...

சொல்லவந்ததை சொல்லிவிட்ட பட்சத்தில், சொல்லாமல் மழுப்பிய என் பழைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்: ஓரம் கட்டின அனுபவங்கள்)...

கொஞ்சம் உங்களோடு,

~ NRIGirl

பார்க்க என்னவோ ராஜாங்கம் தான்...

6 comments

பட்டத்து இராணி அவள். அமைதியான நாடு. சீமை அமைந்திருப்பதோ அமெரிக்காவில். எதிரிகள் தொல்லை, உற்பூசல் ஒன்றும் இல்லை. நிதி நிலமை சீர்வரிசை எள்ளளவும் குறைவு இல்லை.

பார்க்க என்னவோ ராஜாங்கம் தான். ஆனால் இராஜாவும், இராணி, இளவரசர் மற்றும் இளவரசிகளையுமே கொண்டது அவள் ராஜியம்.

தந்திரி என்றோ மந்திரி என்றோ சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை. தேரடிக்கவோ, போரடிக்கவோ, பணிவிடைக்கு யாரும் இல்லை.

ஒரு நாளின் இறுதியில் இராஜாவுக்கு ஒரு காப்பி வேண்டுமானால், இராணி தான் கலக்க வேண்டும். இராணிக்கு ஒரு தேவை என்றால் இராஜா தான் உதவ வேண்டும்.

சிங்காசனத்தில் இருந்து இருவரும் இறங்கியே ஆக வேண்டும்.

ஒரு பண்டமோ பணியாரமோ இராணி தான் ஆக்க வேண்டும். 'யார் அங்கே? ஒரு காப்பி!' என்றெல்லாம் கை தட்டி கூப்பிட்டு ஒரு வேலை ஏவ முடியாது. முறுக்கா பணியாரமா இராணி தான் செய்ய வேண்டும்.

பாவம், ஆக்கி எடுத்து வளர்ந்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும். செல்லமாக வளர்ந்து விட்டிருந்தாள் இராணி. அதனால் கொஞ்சம் சிரமம் தான்.

அன்று அப்படித்தான் இராணி முறுக்கு சாப்பிட ஆசைப் பட்டாள். சூடான எண்ணையில் நேராகவே பிழிந்து நின்றாள். என்ன பதம் தவறியதோ, மாவு அச்சிலேயே ஒட்டி நின்றது. 'இராஜா! உதவி தேவை' குரல் எழுப்பினாள் இராணி. ஓடி வந்த இராஜா வேகமாக அடுப்பை அனைத்தார்.

'என்ன காரியம் செய்தாய் மகாராணி? முறுக்கு ஏன் பிழிந்தாய்? தேவையா இந்த
பிரச்சனை நமக்கு', என்று பதறினார்.

'பிள்ளைகள் விரும்புவார்களே என்று...' கொஞ்சம் இழுத்தாள் இராணி.

'அது தான் கடைகளில் கிடைக்கிறதே?', இராஜா அலறினார்.

'இல்லை, சுடச்சுட செய்து அப்படியே சாப்பிட்டால்...'.

'சூடாவது ஒன்றாவது. இருக்கிற மாவை ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கள் போதும்', என்றார் கராராய்.

இராணி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாள், அல்லது ஓய்வெடுப்பதாய் காட்டிக்கொண்டாள். இராஜாவும் பிள்ளைகளும் அக்கம் பக்கம் நகரவே மீண்டும் அடுப்பறைக்கு வந்தாள்.

பிசைந்து வைத்த மாவு பாவம் போல் உட்காந்திருக்கிறதை கண்டாள். 'முறுக்கு வரவில்லயென்றால் சீடை, இரண்டும் ஒரே ருசி தானே' என்று உற்சாகாமாய் ஆரம்பித்தாள் வேலையை. (ஆசை யாரை விட்டது?)

முதல் சுற்றிலேயே எள்ளும் கொள்ளும் வெடித்தன. பட் பட் என்று அங்கும் இங்கும் தெறித்தன சீடை உருண்டைகள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தார்கள்.

'பிரச்சனை ஒன்றும் இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். இராஜாவை தொந்திரவு செய்யவேண்டாம்', உத்தரவிட்டாள் இராணி. கேட்டால் தானே?

ஓடிச் சென்றார்கள் இராஜாவினிடத்தில். 'அம்மா உங்கள் சொல் கேட்கவில்லை. மீண்டும் அடுப்படியில் நிற்கிறார்கள், பண்டம் செய்ய', என்று வத்தி வைத்தார்கள். போன வேகத்தில் இராஜாவும் பிள்ளைகளுமாக திரும்பி வந்தார்கள்.

இம்முறை இராஜாவின் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

'போதும் மகாராணி. நீங்கள் பண்டம் செய்து தரவில்லை என்று யாரும்  குற்றம் சொல்ல மாட்டோம். இருக்கிற உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்து அமருங்கள் உங்கள் ஆசனத்தில்', என்றார் சற்று கோபமாய்.

மாவையும் காலி செய்தார் குப்பையில்.

'சரி போகட்டும்' என்று விட்டு விட்டாள் முறுக்கு ஆசையை, இராணி மகாராணி.

மற்றொரு நாள் இப்படித்தான் புட்டு செய்ய மாவு விரசினாள் இராணி. அண்டை நாட்டு இராஜாவும் இராணியும் விருந்துக்கு வந்திருந்த நேரம் அது. ஒரு குழல் அவிக்கவும் செய்தாள். எப்போதும் நன்றாக வரும் புட்டு அன்று ஏனோ அக்கிரமம் செய்தது.

விருந்தினர் முன்பு அதை எதிர்பார்க்காத இராணி, புட்டு இல்லையென்றால் இடியாப்பம் என்று மாவை மாற்றி பிசைந்தாள், ஏதோ இடியாப்பம் தனக்கு கை வந்த கலை மாதிரி.

காத்திருந்தனர் விருந்தினர்.

பொறுக்க மாட்டாத இராஜா, எதற்கும் ஒரு begal சாப்பிட்டு வையுங்கள், இனி இடியாப்பம் வர விடிந்து விடும் என்று நண்பர்களையும், இராணியையும் கவணித்து வைத்தார்.

நல்லதாய் போயிற்று. ஏனென்றால், இடியாப்பமும் பிரச்சனை செய்தது அன்று. (என்றுமே இடியாப்பம் பிரச்சனை தானே!)

சொன்னால் நம்ப மாட்டீர்கள்; கடைசியில் கொழுக்கட்டையாக மாறி நின்றது புட்டு மாவு!!

நண்பர் சிரித்தே விட்டார் - அவரும் தான் எவ்வளவு பொறுப்பார்? இராணிக்கு அதில் ஒரு சங்கடமுமில்லை என்பது போல் காட்டிக்கொண்டாள். சேர்ந்து சிரிக்கவும் செய்தாள் (பாவம் விட்டால் கொஞ்சம் அழுதிருப்பாள்).

விருந்துக்கு வந்திருந்த இராணியும் தான் அப்படித்தான் ஒரு நாள் இட்டிலி என்று ஆரம்பித்து அது உப்புமாவில் போய் நின்ற கதையை சொன்னார்.

அது தான் சாக்கு என்று வடை போண்டா ஆன கதையையும், தொவையல் சட்டினி ஆன கதையையும் பெருமையாய் பறிமாறிக்கொண்டார்கள் நம் இராஜாவும் இராணியும்.  மீண்டும் சிரித்து வைத்தார்கள் அனைவரும்.

ஆக வந்த விருந்தினருக்கு வயிற்றுக்கு உணவிட்டார்களோ இல்லையோ சிரிப்பிற்கு இட்டார்கள் உணவு. மாறி மாறி பரிமாறினார்கள். பாவம் நண்பர்கள். அன்று போனது போனது தான், இது வரை மீண்டும் வரவேயில்லை என்பது கூடுதல் செய்தி.

இப்படியாக நடக்கிறது ராஜாங்கம். ஒரு வாய்க்கு ருசியாக முறுக்கோ, காப்பியோ, தண்ணியோ சாப்பிட்டு வருஷம் எத்தனை ஆகிறது?!

இதற்காகத்தான் இராணிக்கு இந்தியா மீது ஆசை. கையை சொடுக்கினால் முறுக்கு, பண்டம், பணியாரம், சுடச்சுட காலை பலகாரம், அற்புதமாய் ஏற்ற சூட்டில் தேவையான இனிப்பில் அருமையாய் கையில் காப்பி, வேறு என்ன வேண்டும் என்று வினவி நிற்கும் சுற்றம், ...

ஆக்க முடியாத பட்சத்தில், அதை விட சுலபமாய் கடையில் கிடைக்கிறதே, நமக்கேற்ற ருசியில்?!


ம்ஹூம்... கொடுத்துவைத்திருக்க வேண்டும் அதற்கெல்லாம்... என்ன சொல்கிறீர்கள்?!