காற்று

8 comments

"இது தான் ஆடி மாதமாக இருக்குமோ", என்று யோசிக்கிறேன். காரணம் அவ்வளவு காற்று. அம்மியை தூக்குகிறதோ இல்லையோ ஆட்களை தூக்க கொஞ்சம் முயற்சிக்கத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.

காலையில் மெனெக்கெட்டு சீவி சிங்காரித்து கிளம்பினால், தலை விரி கோலமாகத்தான் ஆஃபீஸ்-குள் வந்து சேருகிறோம். அவ்வளவு காற்று. 

குட்டைப் பாவாடை அணிந்த பெண்களின் நிலமை இன்னும் பரிதாபம். கிளு கிளு சிரிப்போடு பறக்கும் பாவாடைகளை அமுத்தியபடி காற்றை அவர்கள் திட்டுவதை கேட்க நமக்கு சிரிப்புத் தான் வருகிறது. அவ்வளவு காற்று.

இப்பொழுது தான் பூக்க ஆரம்பித்திருக்கும் பல மரங்களும், பூத்த பூக்களை அவசரமாய் உதிர்த்து விட்டு, 'ஐயோ இன்னும் கொஞ்சம் தூங்கி இருக்கலாமோ' என்று கவலையாய் நிற்கிறது. அவ்வளவு காற்று.

வெப்ப நிலை இன்று 60-களில் என்றால், நாளை 40-களில் என்றிருக்கும். குளிர் காலம் திரும்பி வந்து விட்டதோ என்று திகைக்க வைக்கும். அவ்வளவு காற்று.

கடந்த சில நாட்களாய் சூரியனும் பேருக்கு தலையைக் காட்டி விட்டு பிறகு தலைமறைவாகி விட்டது. இன்று என்னவோ தலையையும் காணோம் - ஏதோ காற்றிற்கு பயந்துகொண்டு, மேகங்களுக்குள் ஒளிந்திருக்கிறது போலும். அவ்வளவு காற்று.

சொல்லப்போனால், காற்று சுகமாகத்தான் இருக்கிறது. மனதில் ஒரு இனம் தெரியாத உல்லாசத்தை தரத்தான் செய்கிறது. அப்படியே நடந்து கொண்டே இருக்கமாட்டோமா சுதந்திரமாய்? என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.

ஏதோ நம்மை தழுவிச்செல்வது தான் அதன் தலையாய கடமை என்று ஒரு கற்பனை விரியத்தான் செய்கிறது. காற்று பட்ட முகமும், மேனியும், உடையும், உள்ளமும் ஒரு படி அழகில் கூடி விட்டதாய் ஒரு எண்ணம் வரத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.   

நான் வாசித்துகொண்டிருக்கும் 'To The Lighthouse' புத்தகத்திலும் வீசுகிறது காற்று. ஒரு தீவில் கோடை விடுமுறைக்காக வந்திருக்கிறார்கள் ஒரு குடும்பம். அம்மா தன் எட்டு பிள்ளைகளை, குறிப்பாக சின்னவன் James-ஐ, அங்குள்ள கடற்கரை விளக்குக்கு கூட்டி போக படும் பாட்டைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள், வேற யாரு, நம்ம Virginia Woolf அம்மையார் தான்.

 "நாளைக்கு போவோம் விளக்கை பார்க்க", என்று சொல்லுகிறாள் அன்னை. பிள்ளைகள் சந்தோஷப்படுகிறார்கள். "எப்படி போக முடியும்? இவ்வளவு காற்றில்?, சாடுகிறார் தந்தை. பிள்ளைகள் வாடிப்போகிறார்கள். "நாளை நன்றாக இருக்கும்", சமாதானப்படுத்துகிறாள் பெற்றவள். "இல்லவே இல்லை, ரொம்ப மோசமாக இருக்கும்", இன்னும் இறுக்குகிறார் பெற்றவர்.

அடிக்கிறது காற்று - மனதில்... அவ்வளவு காற்று.

வெளியே வீசும் காற்றுக்கும், மனதின் உள்ளே வீசும் காற்றுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். ஒன்று மூச்சை நிறைக்கிறது. மற்றொன்று மூச்சை அடைக்கிறது. ஒன்று மனதை பறக்க வைக்கிறது. மற்றொன்று மனதை கூண்டில் அடைக்கிறது. ஒன்று இதமாய். மற்றொன்று இடறலாய். சுகமாய் ஒன்று. சுமையாய் மற்றொன்று. கலகலக்கும் ஒன்று. கலங்க வைக்கும் மற்றொன்று. ம்ஹூம்.

மன்னிக்கவும் - காற்றில் எங்கேயோ போய் விட்டது மனது... அவ்வளவு காற்று.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் ஊரில் இப்போது என்ன காலம்? உண்மையில் இது என்ன மாதம்? ஆடி எப்போது? தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்?!


என்றும் அன்புடன்,
~ NRIGirl

A Room of One's Own

4 comments

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நாங்கள் எல்லோரும் நல்ல சுகம்.

சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வருகிறேன்.

நிறைய பேருக்கு ஒரே கேள்வி, 'உனக்கு எங்க தான் நேரம் கிடைக்குது கடிதம் எழுத?' என்று. நமக்கு மூச்சு விட நேரம் எடுக்கிறோமா என்ன? யோசிக்க? இல்லை. பேச? இல்லை. அது போல் தான் இதுவும் என்பது என்னுடைய பதில். ஆனால் அவர்களிடம் சொல்லத்தான் தயங்குகிறேன்; புரிந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்று.

எப்படியும், உங்களுக்கு இந்த வலை தளம் மூலம் கடிதம் எழுதுவதை என் சிந்தனைகளின் ஒரு வடிகாலாகவே கொள்கிறேன். நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது அதை எழுதினவரின் சிந்தனை ஓட்டத்தை தெரிந்துகொள்கிறோம். நம் அலை வரிசையில் ஒத்துப்போகும் சிந்தனை உள்ளவர்களை தொடர்ந்து படிக்கிறோம். மற்றவர்களை ஒரு பக்கத்தோடு நிறுத்தி விட்டு மீண்டும் தேடுகிறோம் - நம் அலை வரிசையை.

இப்போது நான், Virginia Woolf எழுதிய, 'A Room of One's Own' வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  அலை வரிசை அவ்வளவாக ஒத்துப்போகாவிட்டாலும், அவர்கள் எழுத்து நடை நன்றாக இருப்பதாலும், சரி என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போமே என்பதாலும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

என்னவென்றால், 'பெண்களும் கதைகளும்' என்ற தலைப்பில் அவர்களை பேசக் கேட்டிருக்கிறார்கள் ஒரு கல்லூரியில். அந்த கட்டுரையை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதை அழகாய் விவரித்திருக்கிறார்கள் - இந்த புத்தகத்தில். 

அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில், "ஒரு பெண் கதைகள் எழுத வேண்டுமானால், அவளுக்கென்று ஒரு தனி அறை வேண்டும், வருடம் ஒரு $300-ஆவது கைச்செலவுக்கு பணம் வேண்டும்", என்று முடிக்கிறார்கள். அவர்கள் எழுதியது 1929-ஆம் வருடத்தில். அதை ஆம் என்றும் இல்லை என்றும் இன்னும் விவாதங்கள் தொடருகிறது - எழுத்தாளர்கள் மத்தியில்.

அவர்கள் கூறும் கருத்தில் ஒரு கருத்து என்னை பாதித்தது. அவர்கள் சொல்லுகிறார்கள், ஒரு பெண் கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதப்போனால், உலகம் அவர்களைப் பார்த்து சொல்லுமாம், "நீ எழுத வேண்டுமானால் எழுதிக்கொள் எதையும், என்னை அது எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் நீ எழுதுவதை நான் வாசிக்கப்போவதில்லை", என்று.

நான் ஏன் இதை உங்களிடம் சொல்லுகிறேன் என்றால், என் கடிதங்களும் அப்படியே. எத்தனை பேர் படிக்கிறார்கள், அதில் எத்தனை பேர் புரிகிறார்கள், அதிலும் எத்தனை பேர் தொடர்கிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான். அதனால் தான் நண்பர்கள் கேட்கிறார்கள், "யாருக்காக எழுதுகிறாய்? எங்கிருக்கிறது உனக்கு நேரம்? நீ எழுதி நாங்கள் யார் படிக்கப்போகிறோம்" என்று.

எனக்காகத்தான் எழுதுகிறேன் என்பது என் தாழ்மையான பதில். உங்களிடம் பேசுவதாக எண்ணிக்கொண்டு என்னிடம் நானே பேசிக்கொள்கிறேன் இந்த கடிதங்கள் மூலம். அவ்வளவு தான். ஒரு வேளை இன்னும் ஐந்து வருடங்களோ பத்து வருடங்களோ கழித்து வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, வாழ்ந்ததின் தடங்களாக இந்த கடிதத் தொகுப்பு அமையும் என்பது ஒன்றே என் எதிர்பார்ப்பு.

ஆனால் இப்போது Virginia அம்மையாரின் பாதிப்பினால், எப்படியும் எனக்கென்று ஒரு அறை வேண்டும் என்பது மனதில் பதிந்து விட்டது. தேடுகிறேன், "ஒரு முக்கோ, மூலையோ அமையுமா நமக்கென்று", என்று. அமையும் போது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் தானாய் புரளத்தான் போகிறது, அம்மையாரின் கருத்துப்படி. அமையும் வரை முடிந்தது கடிதங்கள் மட்டுமே.

அடுத்த கடிதம் விரையும் வரை விடை பெறுகிறேன்.

அன்புடன்,
~NRIGirl

ஒரு அண்ணன் என்ன விலை?

2 comments

அன்புள்ள நண்பர்கள் அறிய,

எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு அண்ணன் உண்டா? உங்கள் அண்ணன் எப்படி இருக்கிறார்கள்? எனக்கு ஒரு அண்ணன் இல்லை என்பது மட்டும் ஒரு பெரிய குறை தான். யோசித்தாலே வருவது ஒரு பெருமூச்சு தான். ம்ம்ம்ஹூம்!

சிறு வயதில் நான் அடிக்கடி தோழிகளிடம் பேரம் பேசுவதுண்டு, "ஒரு அண்ணன் என்ன விலை?", என்று. என் கூட படித்த கோமதிக்கு ஐந்து அண்ணன்கள் - கூடப்பிறந்தவர்கள் மூன்று பேர், சித்தப்பா பிள்ளைகள் இரண்டு பேர். மீரா பானுவுக்கு மூன்று அண்ணன்கள். 

அவர்களுக்கெல்லாம் நிறைய அண்ணன்கள் இருக்கும்போது எனக்கு ஒரு அண்ணனும் இல்லை என்பது என் சின்ன மனதின் பெரிய வருத்தமாகவே இருந்தது.

அவர்களும் நாளொன்றுக்கு ஒரு விலை சொல்லுவார்கள் - அது அவர்கள் மன நிலையை பொறுத்து. அண்ணன்களிடம் அன்று சண்டை போட்டிருந்தால் விலை ரொம்ப குறைவாகவே இருக்கும் - 5 பைசா மிட்டாய் போதும். அண்ணன்களிடம் பாசம் உள்ள நாட்களில் ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வேண்டும் என்று விலை கூடி இருக்கும். 

இதிலெல்லாம் கூத்து என்னவென்றால், இந்த விஷயம் அண்ணன்களுக்கு தெரியக்கூடாது. அவர்களை அண்ணன் என்று கூப்பிடவும் கூடாது. அந்த நிபந்தனையில் தான் அண்ணன்களை விற்றிருப்பார்கள். அதுவும் அந்த ஒரு நாள் மட்டும் தான் ஒரு அண்ணன் எனக்கு சொந்தம்.

பொதுவாக வீட்டில் அம்மா ஆங்காங்கே வைத்து பிறகு காணாமல் போன பைசாக்கள் இப்படி அண்ணன்கள் வாங்கவே செலவாகிவிடும். அண்ணன்களுக்காக பைசா செலவு செய்வதில் கொஞ்சமும் சங்கடப்பட்டது கிடையாது. 

ஒரு முறை என்னை நிறுத்தி கேட்டேன், 'உனக்கு எதற்காக அண்ணன் வேண்டும்?", என்று. அதற்கு தெளிவான பதில் இல்லை. "அண்ணன் வேண்டும் அவ்வளவு தான்", என்று பிடிவாதமாகத்தான் பதில் வந்தது.

சில சமயம் விடுமுறை வேதாகம பள்ளிகளில் பாடல் மற்றும் கதைகள் சொல்லிக்கொடுக்க சில அண்ணன்கள் வருவார்கள். அதில் எல்லா அண்ணன்களையும் ரொம்பவும் பிடித்து விடும். எல்லோரையும் அப்படியே வீட்டுக்கு கூட்டிப்போனால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்பது என் கற்பணையாயிருக்கும். அந்த வகுப்புகளின் முடிவில் அழுகை அழுகையாக வரும், இனி அந்த அண்ணன்களை பார்க்க முடியாது என்பதால்.

வளர வளர அண்ணன் ஆசை அதிகமானதே தவிர குறையவில்லை. புதிதாய் எந்த சொந்தக்காரர்கள் அறிமுகமானாலும் முதலில் விசாரிப்பது ஒரு அண்ணன் உண்டா என்பது தான்.

வளர்ந்து விட்ட பிறகும் அண்ணன் யாராவது எங்கேயாவது நமக்கு உண்டா என்று ஆராய்ந்திருக்கிறேன். ஒரே ஒரு அண்ணன் இருக்கிறார்கள் - அருள்ராஜ் சித்தப்பா மகன் - என்று அறிந்து மிகவும் சந்தோஷம். ஆனால் அவர்களை பார்த்ததோ பேசியதோ கிடையாது. 

வளர்ந்தது திருநெல்வேலி-யாதலால் பெயர் தெரியாத பெரியவர்களை அண்ணாச்சி என்றும், அண்ணன் என்றும் அழைப்பது முறை. இப்படியாக கடைக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் எல்லோரும் அண்ணன்களாகவோ, அண்ணாச்சிகளாகவோ மாற்றப்பட்டார்கள். சொந்தமாகவே கருதப்பட்டார்கள், என்னால்.

மினி மார்கெட் அண்ணன், அரிசி கடை அண்ணன், லக்ஷ்மி ஸ்டோர் அண்ணன், ப்ரிமியர் டைலர் அண்ணன் என்று ஒவ்வொருத்தருக்கும் பெயர். அன்பாகத்தான் வைத்திருந்தோம் இந்த அண்ணன்மார்களை. ஆனால் இந்த அண்ணன்களில் ஒருவரையும் என் திருமணத்திலோ மற்ற வைபவங்களிலோ பார்த்ததாக நினைவில்லை. அவ்வளவு தான் அவர்கள் பாராட்டிய உறவும் கொண்டாடிய உரிமையும்.

அண்ணன் ஆசை இன்னும் விட்டபாடில்லை. இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். உங்களுக்கும் சொல்லி வைக்கிறேன், அண்ணனின் தகுதிகளை: 10-Aug-1973-க்கு முன் பிறந்திருக்க வேண்டும்; ஆண்மகனாக இருக்க வேண்டும். 

இவை இரண்டு மட்டுமே. எங்கேயாவது பார்த்தால் சொல்லுங்கள், தங்கை ஒருத்தி தேடிக்கொண்டிருக்கிறேன் என்று...

உங்கள் அண்ணனையும் அன்புடன் விசாரித்ததாக சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,

~ NRIGirl

சிரிப்புத்தான் வருகிறது எனக்கு

2 comments

அன்புள்ள நீங்கள் அறிய,

சிரிப்புத்தான் வருகிறது எனக்கு சிரிப்பை நினைத்தால். தனியாக சிரிப்பது ஒரு மாதிரியாகப் படவே, உங்களுடன் பகிர்ந்து சிரிக்க வினைந்தேன்...

'சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே', என்பார். ஆனால், என்னைக் கண்டு நீங்கள் சிரிக்க, உங்களைக் கண்டு நானும் சிரிக்க, பிறகு எல்லோரும் சேர்ந்து சிரிக்க, இது தவிர ஏது சந்தோஷம்?

சரி, விஷயத்திற்கு வருகிறேன்...

அன்று பேருந்தில் கக்க கக்க கக்க வென்று ஒரே சிரிப்பு சத்தம். தொடர்ந்து, ஹே ஹே ஹே என்று மற்றொன்று, ஹா ஹா ஹா வென்று வேறொன்று. பேருந்தில் பொதுவாய் காலையில் மிச்சம் வைத்த உறக்கத்தை நான் பெரும்பாலும் தொடர்வதால், முதலில் 'யாரிவார்கள்? ஏன் இந்தக் கூச்சல் போடுகிறார்கள்' என்று எரிச்சல் தான் வந்தது. சத்தம் தொடரவே, கொஞ்சம் சிரித்துவிட்டுத்தான் போகட்டுமே என்று அமைதலானேன்.

தூக்கத்தை கைவிட்டு, சிந்தையில் ஆனேன்...

சிரிப்பில் தான் எத்தனை வகை...

சிலர் அமுக்கமாய்; சிலர் ஆக்ரோஷமாய். சிலர் ஊமையாய்; சிலர் உற்சாகமாய். கவலைகள் மறந்து, உள்ளம் நிறைந்து...

முகமும் வாயும் கொஞ்சம் தளர, நெற்றியின் சுருக்கம் தானாய் மறைய, மூக்கு மட்டும் நன்றாய் புடைக்க, கண்கள் இரண்டும் ஒத்துழைக்க, பற்களனைத்தின் பாங்கும் தெறிய, அகத்தின் அழகு முகத்தில் விரிய...

கலகல கல-வென. சிலசில சில-வென...

யாரங்கே? என்ன சத்தம்?

புரண்டோடும் வெண்கலமோ, சிந்தி விட்ட சில்லறையோ, தண்ணீர் ஓடும் ஓட்டமோ, கொக்கரக்கோ கோழியோ, எச்சரிக்கும் பல்லியோ, இல்லை அது விக்கலோ, அல்ல வெறும் இருமல் தானோ?

ஒருவேளை உங்கள் உடம்புக்கு ஏதும்?

வயிற்றை கையால் அணைத்தபடி, குனிந்து நிமிர்ந்து நெளிந்தபடி, கைகள் கால்கள் உதறியபடி, வாயில் கோழை ஒழுகியபடி, கொஞ்சம் புரண்டு உருண்டபடி...

போதும் போதும் என்ற போதும், மீண்டும் மீண்டும் நினைவில் வர, குடித்த தண்ணீர் நாசியில் ஏற, புதிதாய் இருமல் துரத்தி வர, ஐயோ அம்மா ஆளை விடுங்கள், கொஞ்சமும் இனி தாங்காது...

ஒருவேளை இது சிரிப்பு தானோ!

குபீர், குபீர் என மீண்டும் குமுற, கொஞ்சம் நிறுத்தி யோசிக்க, எதற்கு என்பதும் மறந்து விட, அதனால் சிரிப்பு மீண்டும் தொடர...

"6th & 34th! Have a pleasant day!", நல்லவேளையாய் ஓட்டுனர் வாழ்த்த, சிரித்த சிரிப்பு சிந்தையில் உறைய, புன்னகை ஒன்று தானாய் மலர, துள்ளளாய் விரைந்தேன் அலுவல் நோக்கி.

அன்புடன் நான்,

~ NRIGirl