கண்மணி வருகிறாள்

4 comments

நாங்கள் மொத்தம்  ஐம்பத்திரெண்டு பேர்!

ஆசைக்கு பெண்கள் இரன்டு பேர்; ஆஸ்திக்கு ஆண்கள் ஐம்பது பேர்!!

நாங்கள் 1993 முதல் 1996 வரை எங்கள் முதுநிலை பட்டப்படிப்பில் கூடிப்படித்தவர்கள். 

பட்டப்படிப்பு முடிந்த கையோடு உலகம் எங்கும் சிதறி விட்டிருந்தோம் நாங்கள்.

எங்கள் திருமண அழைப்புகளை ஏனோ தவற விட்டிருந்தோம்.

பிள்ளைகள் பிறந்த செய்திகளை பகிர மறந்து விட்டிருந்தோம்.

வாழ்வின் வசந்தங்கள், பயணங்கள், தொடர்புகள், தொல்லைகள், வேகம் வேகமாக எங்களைத் துறத்த கூடித்திரிந்த நாட்களை தொலைத்து தான் விட்டிருந்தோம் போங்கள்.

சமீபத்தில் ஒரு நாள்...

கூடிப்படித்த தோழி திடீரென்று தொலை பேசினாள். 'ஏய்! எப்படி?! என்ன? எங்கே? எப்போ?' ஆர்வ ஆர்வமாய் கேள்விகள் தொடர்ந்தது. 'ஓ! ஓகே! சரி. கட்டாயம். நிச்சயம். ஆமா.' என்பதாய் சுடச்சுட பதில்கள் பறந்தது.

கண்களை விரித்து வியந்து நின்ற கணவரிடம் உற்சாகமாய் சொன்னேன், "கண்மணி வருகிறாள்' என்று.

பத்தொன்பது வருடம் கழித்து பேசிக்கொள்கிறோம்! வெகு விரைவில் பார்க்கப்போகிறோம். உற்சாகம் இருக்காதா பின்னே!

வழி மேல் விழி வைத்து காத்திருந்தோம். கண்மணி வந்து சேர்ந்தாள். ஏய்! அதெப்படி? அப்படியே இருக்கிறாய்?! ஐயோ நீயும் தான்! என்றெல்லாம் வியந்து கொண்டோம்.

விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் மீண்டும் தொடர்ந்தோம். பிள்ளைகளையும் கணவன்மாரையும் சற்றே ஒதுக்கி வைத்தோம். பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம்.

குறிப்பாய் எங்கள் சக மாணவர்கள் ஐம்பது பேரை பற்றி பேசினோம். "ஒருத்தருக்காவது கவலை இருக்கிறதா பார், நம் கூட படித்த பெண்பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ, எங்கிருக்கிறார்களோ, என்ன ஆனார்களோ என்ற சிந்தையாவது இருக்கிறதா பார்", என்று சொல்லி சிரித்து வைத்தோம்.

பேசியும் சிரித்துமாய் சமையல் ஒன்றை ஆக்கி முடித்தோம்.

கீச் கீச் கூப்பிட்டது வாசல் குருவி.

யார் அங்கே? எட்டிப் பார்த்தோம். அட கண்மணி உங்களுக்குத்தான் விருந்தாளி என்று வியத்தி நின்றேன். வியந்தே தான் போனாள். ஏய். இது நம்ம நம்பி தானே. தான். தான். அவரே தான். வீட்டிற்குள் நுழைய விடாமலேயே குசலம் விசாரித்தோம்.

கீச் கீச் கீச் கீச் மீண்டும் கூப்பிட்டது குருவி.

பாஆஆ வாஆஆ! என்று வாய் பிளந்து நின்றோம்.

கண்ணுக்கெட்டா தொலைவில் இருந்து வந்திருந்த கண்மணியை பார்க்க கூப்பிடு தூரத்திலிருந்தும் எட்டிப்பார்க்காமல்  இருந்திருந்த இளையநம்பியும் பாவாவும் வந்திருந்தார்கள்.

நான் ஏதும் கேட்காமலேயே, 'ச ச அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஹி ஹி'  என்று குழைந்து நிற்க, 'சரி, சரி இப்படியாவது  வந்து சேர்ந்தீர்களே மக்களே!' என்று நெகிழ்ந்து போனேன்.


மீண்டும் மனைவி/கணவர்  மக்கள் மறந்து விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் தொடர்ந்தோம்.

ஆக்கி வைத்த ஆகாரத்தை அளவளாவி உண்டு மகிழ்ந்தோம்.

வயிறும், மனமும் நிறையவே மெல்ல எங்கள் கணவர்/மனைவி மக்களையும் சேர்த்துக்கொண்டோம் சங்கதிகளில்.

"இதுகளையும் கட்டி மேய்க்கிறார்களே" என்பதாய் எங்கள் இருவரின் கணவர்களையும் பார்த்து கொள்ளை பிரியம் கொண்டார்கள் எங்கள் கூடப்படித்தவர்கள்.

"எவ்வளவு அன்பாய் நம் நண்பர்களை கவனித்துக் கொள்கிறார்களே" என்று அவர்கள் மனைவிகளிடம் மதிப்பும் மரியாதையும் வியப்பும் விருப்பமும் கொண்டோம், பெண்கள் நாங்கள்.

இதற்கு நடுவில் ஆமா உங்கள் கல்லியான அழைப்பு ஒன்றும் வரவேயில்லையே என்று ஒருத்தருக்கொருத்தர் குறை பட்டுக்கொண்டோம். மிச்சம் உள்ள 48 பேரை பற்றியும் அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த நாங்கள் கேள்விப்பட்ட செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

சீனியர் கிளாஸ் என்றும் ஜூனியர் கிளாஸ் என்றும் விருப்பமான வாத்தியார் வாத்திமார் என்றும் நாங்களே நலம் விசாரித்தும், பகிர்ந்தும் கொண்டோம்.

இரவு நெருங்க நெருங்க, 'இனி இவர்கள் கிளம்பி விடுவார்களே. எப்படியாவது இன்னுமொரு மூன்று வருடம் இவர்களுடன் கூடிப்படித்தால்... மூன்று வருடம் என்ன ஒரு மூணு நாளாவது சேர்ந்து இருந்தால்... விடுங்கள், இன்னுமொரு மூணு மணி நேரமாவது பேசக்கிடைத்தால்... குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது...' நான் யோசித்துக்கொண்டிருக்கவே...

'சரி, அப்ப நாங்க கிளம்பறோம்!'

'நாங்களும் தான்'

'நாங்களும்.'

விடை பெற்றார்கள் நண்பர்கள்.

'ஏய்! வெயிட். இனி எப்போ எங்கே?' சொல்லாமல் சொல்லி நின்றேன்.

காற்றிலோ கற்பனையிலோ எங்கிருந்தோ பதில் ஒன்று பறந்து வந்தது,  "மீண்டும் கண்மணி வரும்போது", என்று. சிரிப்பலை ஒன்றும் தொடர்ந்ததாக நினைவு.
.
"கிண்டல் தானே!", கண்கள் கசிய சிரித்து வைத்தேன்...

இன்னுமொரு பத்தொன்பது வருடம் மனக்கணக்கில் கூட்டிப்பார்த்தேன்.

சிரிப்பு உறைந்தது. கசிவு தொடர்ந்தது...

நாற்பத்தி...

3 comments

வயது நாற்பதை தாண்டி வீர நடை போட்டுக்கொன்டிருக்கிறது. எங்கே எப்போது எப்படி நாற்பதை தொட்டோம் என்று வியப்பாக இருந்தாலும், அட பரவாயில்லையே நாற்பது சுலபாக இருக்கிறதே என்று பூரிக்கிறது மனது. 

இருக்காதா பின்னே?!

ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்த ஓட்டம் பதட்டம் எல்லாம், கல்லூரியிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பு தேடுவதிலும், பிறகு கிடைத்த வேலையை தக்க வைத்துக்கொள்வதிலுமாக ஒரு முடிவேயில்லாமல் அல்லவா போய்க்கொன்டிருந்தது!

இப்போது நாற்பதை தொட்டு விட்டு திரும்பி பார்த்தால் அந்த ஓட்டமும் பதட்டமும் நின்று விட்டிருக்கிறது. "சரி பரவாயில்லை, என்ன தான் ஆகி விடப்போகிறது?", என்கிற மப்பை விட "இம்மட்டும் வழி நடத்தின கர்த்தர் இன்னும் நடத்துவார்", என்கிற நம்பிக்கை ஓங்கி நிற்கிறது.

கணவரையும் பிள்ளைகளையும் கொஞ்சம் வளர்த்து விட்ட நிலையில் (என்ன அப்படி பார்க்கிறீர்கள்! வேண்டியதை எடுத்து சாப்பிட வைப்பது வளர்த்து விடுவது தானே?) கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைக்கிறது. என்னைப்பற்றி யோசிக்க, எனக்கு பிடித்ததை செய்ய -  என்ன படம் வரையலாம், என்ன கதை எழுதலாம், எந்த அ
றையை எப்படி மாற்றி அமைக்கலாம், என்று.

அழுக்காய் கிடக்கும் அ
றைகளை ஒரு தோல்வியாக எண்ணி மனம் ஒடிந்த நாட்கள் மாறி, வீடு கிடப்பது போல கிடக்கட்டும் என்று ஆறுதல் கொன்ட வகையில் கொஞ்சம் தூங்கி முழிக்க, நெட்டி முறிக்க நேரம் இருக்கத்தான் செய்கிறது விடுமுறைகளில்.

கடிதமாவது, கட்டுரையாவது, யார் வாசிக்கிறார்கள், யார் பதில் எழுதுகிறார்கள் என்ற அங்கலாய்ப்பினால் தானோ என்னவோ கொஞ்சம் உங்களோடு பகிர்வதிலும் வேகம் குறைந்திருக்கிறது.

தின் பண்டங்கள் மீதான ஆசை குறைந்திருப்பதினால் அதை செய்தெடுக்க செலவிடும் சமயம் மிச்சம் ஆகிறது. அவியலும் பொரியலும் கட்டாயம் என்றில்லாமல், பருப்போ, மீனோ, அதையும் விட்டால் இருக்கவே இருக்கிறது தயிரும் ஊறுகாயும் என்று மனம் அமைதலாகிறது.

பரவாயில்லயே, திருந்தி இருக்கிறோம், வாழ்க்கையை அமைதலாக்கி கொன்டிருக்கிறோம் என்று பெருமிதம் தாங்க வில்லை.

வாயெல்லாம் பல்.

அங்கேயும் இங்கேயுமாக வீட்டில் நடை பயில, 'Free-யாக இருந்தால் கொஞ்சம் பேசலாமே', கூப்பிட்டது கூடத்து கண்ணாடி. "Why not?!" என்றது நிஜம்.

ஏய்!
ஏய்!!
பரஸ்பரம் பரிமாரிக்கொன்டார்கள் நிஜமும், நிழலும்.


பேசிக்கொன்டிருக்கையில், நிஜம் கொஞ்சம் நிழலை கூர்ந்து கவணித்தது. 'ஏய். இரு. அப்படியே. ஆடாமல். அசையாமல்', என்று கூவியவாரே கையால் விரைந்து நிழலின் காதோரம் தடவி, 'ஒரு நரை முடி பார்த்தேன் அதான்' என்றது அவசரமாய் அதை 'pull'-லியவாறே.

நிமிர்ந்தால், இன்னொன்று. அதையும் அடுத்து வேறொன்று. அட அட அட.

கொஞ்சம் பதட்டத்துடன் அடுத்த காதையும் திரும்பி காட்டியது நிழல். பார்த்தால், 'ஒன்னு, ரென்டு, மூனு, நாலு.... ஐயோ நிறையவே இருக்கிறதே!', கலங்கி நின்ற நிஜத்திடம் நிழல் சொன்னது, 'உனக்கும் தானே இருக்கிறது', என்று.

என்ன சொல்கிறாய் நீ?!

உனக்கு இருப்பதால் தானே எனக்கும் இருக்கிறது?

இன்னும் குழப்புகிறாய் நீ.

சரி விடு, என்றது நிழல், நிஜத்திடம் பேசி பயனில்லை என்பதால்.

அதை விட்டு வேறு காரியங்கள் பேசிக்கொன்டார்கள் நெடு நேரம் இருவரும். புத்தாடைகளை காட்டி மகிழ்ந்துகொன்டார்கள். தலையில் ஒரு கொண்டை போட முயற்சித்தார்கள். குட்டை முடியால் பயன் இல்லாமல் போகவே, கை விட்டார்கள் முயற்சியை. நீளமாக முடியை வளர்த்தே தீருவது என்று ஆனை இட்டுக்கொன்டார்கள் இருவரும், என்பது கூடுதல் செய்தி.

மொத்தத்தில் இருவரின் உற்சாகம் அவ்வளவாக குறையவில்லையென்றாலும் மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு நெருடல் இல்லாமல் இல்லை - நாளுக்கு நாள் அதிகரிக்கும் நரைகளை பற்றி.


அலுவலகத்தில் அன்று அறுபதுகளில் உள்ள ஒருவர் ஒரு ஊசியில் நூல் கொருத்துக்கொண்டிருந்தார். அலுவலகத்திலா? ஊசியா? நூலா? அதுவும் அமெரிக்காவிலா? என்று அடுத்தடுத்து வரும் கேள்விகளை அறிவேன்.

ஆமா. ஆமா. ஆமாங்க ஆமா. என்பது தான் அதற்கான பதில்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மதிய நடை முடிந்து நான் மீண்டும் அலுவலகத்திற்குள் நுளையும் போது reception desk-ல் இருந்த Annie ஊசியில் நூல் கொருத்துக்கொண்டிருந்தார்.

"Hi Annie! How are you? It's a beautiful day out!" என்றேன் அழகிய வெயிலின் உற்சாகத்தால்.

"Hi Hephzi! I am frustrated. For the last entire hour I have been struggling with this thing!!!!" என்றார் ஊசியையும் நூலையும் கையில் பிடித்தவாறு. "There's a button gone lose on my shirt and I am trying to fix it. But if only I can get this thread through the needle..." என்றார் பரிதாபமாய்.

அவ்வளவு தானே, இதுக்குப்போய் வருதப்படலாமா என்ற தோரனையில், "Let me try" என்று சாந்தப்படுத்தினேன். சொன்ன கையோடு விரைந்து ஊசியையும் நூலையும் பறித்துக்கொண்டேன் Annie-யிடமிருந்து.

எத்தனை ஊசியையும் நூலையும் பார்த்திருப்போம் - கல்லூரி நாட்களில் teddy bear பொம்மை செய்ய கற்றுக்கொண்டபோது! எத்தனை எத்தனை பொம்மைகள் செய்து குவித்திருக்கிறோம்!! இந்த அமெரிக்க ஊசி என்ன! என்ற ஒரு அலட்சியம் மனதில்.

இதை எதற்காக சொல்ல வருகிறென் என்று கட்டாயம் ஊகித்திருப்பீர்கள் - கெட்டிக்காரர்கள் நீங்கள்! ஒரு நொடி வேலை என்று நினைத்தது 5 நிமிடம் ஆகியும் தொடர்ந்தது. ஊசியின் ஓட்டை தெரிகிறது. நூலின் நுனி தெரிகிறது. ஆனால் இரண்டையும் பக்கத்தில் கொண்டு போகிறபோது ஏதோ ஒன்று 'out of focus' ஆகிவிடுகிறது!! அப்பப்பா வேர்த்து ஊற்றிவிட்டது எனக்கு.

நல்லவேலையாக உடன் இருந்த அலுவலக தோழி விரைந்து என் கையில் இருந்து பறித்து நொடியில் கொருத்து Annie-யின் கைகளில் கொடுத்து விட்டாள். Annie-க்கு பெரிய உபகாரமாய் போயிற்று. எனக்கும் தான். "அவமானப்படுத்தாமல் காப்பாத்தி விட்டாயே தாயி", என்று மனதில் தோழிக்கு நன்றி சொல்லிகொண்டேன்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் கவணித்தேன், out of focus ஆனது Annie-யின் ஊசி மட்டும் இல்லை. சின்ன எழுத்து தமிழ் Bible-ம், shampoo bottle instructions-ம், மற்றும் பல fine prints-ம் என்று.

ம்ஹூம்!!

கண் டாக்டரிடம் ஒரு நடை போய் கண்ணை காட்டி விட்டு வந்தேன். "வேற ஒன்னும் இல்லை வயசாகிறதில்லே, அதான்." என்றார் ரொம்ப அமைதலாய். தலையே சுற்றி விட்டது எனக்கு.

என்ன சொல்கிறீர்கள் டாக்டர்? வயசா? எனக்கா? நாற்பதை தான்டி ரென்டு வருஷம் கூட ஆகலியே முழுசா?! என்றேன். சிரித்துக்கொண்டே சொன்னார்  டாக்டர், "சந்தோஷப்பட்டுக்கொள் இவ்வளவு நாள் கூர்மையான கண்கள் கிடைத்ததற்கு என்று.".

தொடர்ந்து சொன்னார், "I am not saying you need glasses right now. But clearly I see that you have it in your future. May be 5 years from now. But I will give you a prescription just in case you wish to get it now".

Nooooooooo!!!! அலறிக்கொன்டே திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தேன்.

நாற்பது நன்றாகத்தான் இருக்கிறது, முதுமை வந்து நெருக்காத வகையில்...

ஒருவேளை வந்து நெருக்கும்போது ஒதுங்கி நின்று வழிகொடுத்தால் போச்சு!

கவலையை விடுங்க...

என்றும் அன்புடன்,

நாற்பத்தி...  NRIGirl




நிழல்களைத்தான் காணவில்லை...

4 comments

நிழல்களை தொலைத்து நிற்கிறேன்.

கூடவே வந்த நிழல் எப்போது எங்கு எப்படி தொலைந்தது என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. நேற்றோ, இன்றோ இல்லை, தொலைத்து ஆண்டுகள் பல ஆகிறது. ஆனால் தொலைத்த விவரம் கூட தெரியாமல் இருந்திருக்கிறேன் இத்தனை நாளும்.

திடீரென்று தான் நிழலை தேடுகிறேன், காண வில்லை. போகிற வருகிற வழிகளில், வீட்டில், வெளியில், சுற்றும் முற்றும் எங்கும் காண வில்லை.

நான் என்றில்லை அமெரிக்கா-வில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டுப் பாருங்கள் - அவர்களும் ஒத்துக்கொள்வார்கள் தங்கள் நிழல்களையும் காணவில்லை என்று.

என்னைப்போலவே அவர்களுக்கும் தங்கள் நிழல்களை தொலைத்தது கூட தெரியாமல் தான் போயிருக்கும் இத்தனை நாளும். நீங்கள் இப்போது கேட்கும் போது தான், 'ஐயோ, ஆமா, என் நிழல்களையும் காணவில்லை' என்று பதறுவார்கள்.

சிறு வயதில் பள்ளி பருவத்தில் நிழல்களிடம் ஒளிந்து விளையாட முயற்சித்தது நினைவில் வருகிறது. கூடவே வந்த நிழல் ஒளிந்து விளையாட மறுத்தது.

பாடம் படித்துக்கொண்டிருக்கும் இரவு நேரங்களில், அவ்வப்போது மின்சாரம் நின்று போக, மெலிதாய் சிமிட்டும் மெழுகுவர்த்திரி வெளிச்சத்தில் சுவரில் விரல்களால், விரல்களின் நிழல்களால், மான் என்ன, மயில் என்ன, துள்ளி விளையாடும் முயல் என்ன, நீந்தி ஓடும் மீன் என்ன, அன்னம் என்ன என்று நானும் தம்பியும் வரைந்து வியந்த காட்சி தான் என்னென்ன!!

காலையில் பள்ளி செல்லும் போது நீளமாய் நிழல் பின்னாலேயும், மதியம் மிட்டாய் வாங்க கடைக்கு ஓடும்போது குட்டையாய் காலடியிலும், மாலை வீடு திரும்பும்போது நீளமாய் முன்னாலேயும் நடந்த நிழல் ஒரு நிரந்தரம் என்று தான் ஊகித்திருந்தேன்.

நிழல்கள் கூட தற்காலிகம் தான் என்பது இப்போது தான் புரிகிறது.

இருட்டோடு வேலைக்கு வந்து, இருட்டிய பிறகு வீடு திரும்பி, விடுமுறைகளை வீட்டில் தொலைத்து, துரிதமாய் சமையல்  முடித்து, எப்போதாவது பயணம் செய்து, அவசரமாய் வீடு திரும்பி, கொஞ்சமாய் தூங்கி முழித்து, மீண்டும் இருட்டோடு வேலைக்கு வந்து --- இப்படியாக வாழ்க்கைச்சக்கரம் அதி வேகமாய் சுழல நிழல்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை போலும்.

முடிந்த வரை ஓடி வந்திருக்கும் பாவம்; முடியாத பட்சத்தில் எங்கோ எப்போதோ நின்று விட்டிருக்கிறது போலும்.

ம்ஹூம்.

கடைசியாக எப்போது எங்கே பார்த்தோம் என்று யோசித்துப்பார்த்தேன். கல்லூரி நாட்களில் திருச்சியிலிருந்து திருநெல்வேலிக்கு பேருந்துகளில் பயணிக்கும் போது, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கையில், சாலையின் ஓரத்தில் பேருந்தின் நிழலில், அந்த நிழலில் தெரியும் ஜன்னலின் ஓரமாய் அமர்ந்து வந்து கொண்டிருந்தது தான் நினைவில் வருகிறது.

மூக்கும் முழியும் ஒன்றும் தெரியாவிட்டாலும், நான் தான் அது, என் நிழல் தான் அது என்பது புரிந்து விட்டது நொடிகளில். கலைந்த கேசம் அலைந்து  பாய, விரல்கள் விரைந்து ஒழுங்கு படுத்த ... அது தான் அநேகமாக நான் என் நிழலை கடைசியாய் கண்ட நாட்கள்...

இது ஒரு வெட்டிப் பேச்சாக தோன்றும் பலருக்கும்...

 எங்கே போய்விடப்போகுது நிழல்? நிழல்களை தொலைத்ததாக சரித்திரமே இல்லை என்று எடுத்தெறியும் சிலருக்கு சொல்கிறேன்,

என்னை சுற்றி நன்றாக தேடி விட்டேன்; சத்தியமாக நிழல்களைத்தான் காணவில்லை...

வண்டி எண் 2015

2 comments

நேற்று தான் கூவிக்கூவி கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்: வண்டி எண் 2015 முதலாம் ப்ளாட்ஃபாரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்று.

சரி வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சம் அசால்ட்டாய் இருந்து விட்டேன்.

இன்று இதோ கூவிக்கொண்டிருக்கிறார்கள்: வண்டி எண் 2015 முதலாம் ப்ளாட்ஃபாரத்தில் இருந்து கிளம்பி கொண்டிருக்கிறது என்று!!

என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? இப்போ தானே வந்தது, அதற்குள் கிளம்பி விட்டதே என்று அக்கம்பக்கம் வினவினேன்.

என்னம்மா பேசுகிறாய்? வண்டி வந்து இன்றோடு 31 நாட்கள் ஆகிறது! எந்த உலகில் இருக்கிறாய் என்றும், இத்தனை நாளாய் எங்கே வாய் பார்த்துக்கொண்டிருந்தாய் என்றும், இப்படி பட்டதுகளுக்கு இது தேவை தான், அப்படியாவது புத்தி வருகிறதா பார்ப்போம் என்றும் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

'நட் கேஸ்!' என்றும் வாலிபர் கூட்டம் ஒன்று தலையில் அடித்துக்கொண்டது.

நம்மை அடிக்காத குறை தான் போங்கள்!

பூக்கார அம்மா மட்டும் பாவமாய் பார்த்தார்கள்...

தண்ணீர் பையன் தான் சொன்னான் - அக்கா நீங்கள் கொஞ்சம் எட்டி நடந்தால் வண்டியை பிடித்து விடலாம் என்று...

அரக்கப்பரக்க போவதற்குள் வண்டி கொஞ்சம் வேகமாக இழுக்கவே ஒடித்தான் பிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டவாறே வெளியில் பார்த்தால் நான் கொண்டு வந்திருந்த சுமைகள் எல்லாம் ப்ளாட்ஃபாரத்தில் தேமே என்று உட்கார்ந்திருக்கிறது!!

அட அட அட இனி என்ன செய்யலாம் என்று யோசித்துப்பார்த்ததில் வேறு வழியே இல்லை, உங்களிடமே உண்மையை ஒத்துக்கொள்ளலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பதிவு.

நான் பிரயாணப்பட்டதே கொஞ்சம் உங்களோடு பகிரத்தானே!

மண்ணித்து நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!

எல்லோரும் சுகம் தானே?

நாங்களும் தான்.

ஆரம்ப குசலங்கள் அமறவே,

சரி அப்படி என்ன தான் கொண்டு வந்தீர்கள் என்று பலரும் மனதில் வினவி நிற்கிறது நன்றாக புரிகிறது. சொல்கிறேன்.

பெரிதாய் ஒன்றுமில்லை சுமைகள் தான்.

ஐயோ புரிகிறது. சுமைகள் தான் என்று. அந்த சுமைகளில் என்ன என்று தானே கேட்கிறோம்? என்று கொஞ்சம் எகிறுகிறவர்களுக்காக சொல்லுகிறேன்.

பொறுங்கள். சுமைகள் என்று நான் சொன்னது அந்த தலைப்பில் நான் எழுதவிருந்த பதிவை சொல்லுகிறேன்.

ஓ! அப்படியா? சரி சரி வேறு என்ன கொண்டு வந்தீர்கள்?

ஆகாயத்தில் கோட்டை என்றொரு பதிவு.

அப்புறம்?

சொந்தமான பந்தங்கள் என்றொன்று.

அடுத்து என்ன? பந்தமான சொந்தங்கள் என்றா?

அட சரியாக சொன்னீர்கள்! அதெப்படி என்னை மாதிரியே யோசிக்கிறீர்கள்?!

நெடு நாள் பழகிய நண்பர்கள் அல்லவா, இருக்காதா பின்னே!

சரி வேற என்ன இருந்தது? விட்டு வந்த உங்கள் சுமைகளில்?

மிக முக்கியமாய் கொஞ்சம் ஃபோடோக்கள் கொண்டு வந்திருந்தேன் உங்களிடம் காட்ட - சமீபத்தில் நாங்கள் குடும்பமாய் சென்று வந்த நெடுந்தூர பயணம் பற்றி...

மற்றப்படி விசேஷமாய் ஒன்றும் இல்லை. திண் பண்டமோ, புத்தாடையோ, அப்படி என்ன தான் கொண்டு வர முடிகிறது அவசரமான இந்த பயணத்தில். நலம் நலம் அறிய ஆவல் என்று விசாரிப்பது ஒன்றைத் தவிர?!

வெகு விரைவில் வருகிறேன், விட்டு வந்த சுமைகளோடு...

அது வரை அன்புடன்,

~NRIGirl

என்ன அது வரை மட்டும் தானா அன்பு?

பரவாயில்லை, உஷாராகத்தான் இருக்கிறீர்கள்!

என்றும் அன்புடன்,

~NRIGirl

அட, சொல்ல மறந்தே விட்டேனே!

வண்டி எண் 2015-ஐ அருமையாய் பொறுமையாய் பிடித்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிரயாணம் இனிதே அமைய இனிய நல் வாழ்த்துக்கள்! உங்கள் சுமைகள் சுகமாய் மாற மேலும் என் வாழ்த்துக்கள்!!