நிழல்களைத்தான் காணவில்லை...

4 comments

நிழல்களை தொலைத்து நிற்கிறேன்.

கூடவே வந்த நிழல் எப்போது எங்கு எப்படி தொலைந்தது என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. நேற்றோ, இன்றோ இல்லை, தொலைத்து ஆண்டுகள் பல ஆகிறது. ஆனால் தொலைத்த விவரம் கூட தெரியாமல் இருந்திருக்கிறேன் இத்தனை நாளும்.

திடீரென்று தான் நிழலை தேடுகிறேன், காண வில்லை. போகிற வருகிற வழிகளில், வீட்டில், வெளியில், சுற்றும் முற்றும் எங்கும் காண வில்லை.

நான் என்றில்லை அமெரிக்கா-வில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டுப் பாருங்கள் - அவர்களும் ஒத்துக்கொள்வார்கள் தங்கள் நிழல்களையும் காணவில்லை என்று.

என்னைப்போலவே அவர்களுக்கும் தங்கள் நிழல்களை தொலைத்தது கூட தெரியாமல் தான் போயிருக்கும் இத்தனை நாளும். நீங்கள் இப்போது கேட்கும் போது தான், 'ஐயோ, ஆமா, என் நிழல்களையும் காணவில்லை' என்று பதறுவார்கள்.

சிறு வயதில் பள்ளி பருவத்தில் நிழல்களிடம் ஒளிந்து விளையாட முயற்சித்தது நினைவில் வருகிறது. கூடவே வந்த நிழல் ஒளிந்து விளையாட மறுத்தது.

பாடம் படித்துக்கொண்டிருக்கும் இரவு நேரங்களில், அவ்வப்போது மின்சாரம் நின்று போக, மெலிதாய் சிமிட்டும் மெழுகுவர்த்திரி வெளிச்சத்தில் சுவரில் விரல்களால், விரல்களின் நிழல்களால், மான் என்ன, மயில் என்ன, துள்ளி விளையாடும் முயல் என்ன, நீந்தி ஓடும் மீன் என்ன, அன்னம் என்ன என்று நானும் தம்பியும் வரைந்து வியந்த காட்சி தான் என்னென்ன!!

காலையில் பள்ளி செல்லும் போது நீளமாய் நிழல் பின்னாலேயும், மதியம் மிட்டாய் வாங்க கடைக்கு ஓடும்போது குட்டையாய் காலடியிலும், மாலை வீடு திரும்பும்போது நீளமாய் முன்னாலேயும் நடந்த நிழல் ஒரு நிரந்தரம் என்று தான் ஊகித்திருந்தேன்.

நிழல்கள் கூட தற்காலிகம் தான் என்பது இப்போது தான் புரிகிறது.

இருட்டோடு வேலைக்கு வந்து, இருட்டிய பிறகு வீடு திரும்பி, விடுமுறைகளை வீட்டில் தொலைத்து, துரிதமாய் சமையல்  முடித்து, எப்போதாவது பயணம் செய்து, அவசரமாய் வீடு திரும்பி, கொஞ்சமாய் தூங்கி முழித்து, மீண்டும் இருட்டோடு வேலைக்கு வந்து --- இப்படியாக வாழ்க்கைச்சக்கரம் அதி வேகமாய் சுழல நிழல்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை போலும்.

முடிந்த வரை ஓடி வந்திருக்கும் பாவம்; முடியாத பட்சத்தில் எங்கோ எப்போதோ நின்று விட்டிருக்கிறது போலும்.

ம்ஹூம்.

கடைசியாக எப்போது எங்கே பார்த்தோம் என்று யோசித்துப்பார்த்தேன். கல்லூரி நாட்களில் திருச்சியிலிருந்து திருநெல்வேலிக்கு பேருந்துகளில் பயணிக்கும் போது, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கையில், சாலையின் ஓரத்தில் பேருந்தின் நிழலில், அந்த நிழலில் தெரியும் ஜன்னலின் ஓரமாய் அமர்ந்து வந்து கொண்டிருந்தது தான் நினைவில் வருகிறது.

மூக்கும் முழியும் ஒன்றும் தெரியாவிட்டாலும், நான் தான் அது, என் நிழல் தான் அது என்பது புரிந்து விட்டது நொடிகளில். கலைந்த கேசம் அலைந்து  பாய, விரல்கள் விரைந்து ஒழுங்கு படுத்த ... அது தான் அநேகமாக நான் என் நிழலை கடைசியாய் கண்ட நாட்கள்...

இது ஒரு வெட்டிப் பேச்சாக தோன்றும் பலருக்கும்...

 எங்கே போய்விடப்போகுது நிழல்? நிழல்களை தொலைத்ததாக சரித்திரமே இல்லை என்று எடுத்தெறியும் சிலருக்கு சொல்கிறேன்,

என்னை சுற்றி நன்றாக தேடி விட்டேன்; சத்தியமாக நிழல்களைத்தான் காணவில்லை...