கண்மணி வருகிறாள்

4 comments

நாங்கள் மொத்தம்  ஐம்பத்திரெண்டு பேர்!

ஆசைக்கு பெண்கள் இரன்டு பேர்; ஆஸ்திக்கு ஆண்கள் ஐம்பது பேர்!!

நாங்கள் 1993 முதல் 1996 வரை எங்கள் முதுநிலை பட்டப்படிப்பில் கூடிப்படித்தவர்கள். 

பட்டப்படிப்பு முடிந்த கையோடு உலகம் எங்கும் சிதறி விட்டிருந்தோம் நாங்கள்.

எங்கள் திருமண அழைப்புகளை ஏனோ தவற விட்டிருந்தோம்.

பிள்ளைகள் பிறந்த செய்திகளை பகிர மறந்து விட்டிருந்தோம்.

வாழ்வின் வசந்தங்கள், பயணங்கள், தொடர்புகள், தொல்லைகள், வேகம் வேகமாக எங்களைத் துறத்த கூடித்திரிந்த நாட்களை தொலைத்து தான் விட்டிருந்தோம் போங்கள்.

சமீபத்தில் ஒரு நாள்...

கூடிப்படித்த தோழி திடீரென்று தொலை பேசினாள். 'ஏய்! எப்படி?! என்ன? எங்கே? எப்போ?' ஆர்வ ஆர்வமாய் கேள்விகள் தொடர்ந்தது. 'ஓ! ஓகே! சரி. கட்டாயம். நிச்சயம். ஆமா.' என்பதாய் சுடச்சுட பதில்கள் பறந்தது.

கண்களை விரித்து வியந்து நின்ற கணவரிடம் உற்சாகமாய் சொன்னேன், "கண்மணி வருகிறாள்' என்று.

பத்தொன்பது வருடம் கழித்து பேசிக்கொள்கிறோம்! வெகு விரைவில் பார்க்கப்போகிறோம். உற்சாகம் இருக்காதா பின்னே!

வழி மேல் விழி வைத்து காத்திருந்தோம். கண்மணி வந்து சேர்ந்தாள். ஏய்! அதெப்படி? அப்படியே இருக்கிறாய்?! ஐயோ நீயும் தான்! என்றெல்லாம் வியந்து கொண்டோம்.

விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் மீண்டும் தொடர்ந்தோம். பிள்ளைகளையும் கணவன்மாரையும் சற்றே ஒதுக்கி வைத்தோம். பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம்.

குறிப்பாய் எங்கள் சக மாணவர்கள் ஐம்பது பேரை பற்றி பேசினோம். "ஒருத்தருக்காவது கவலை இருக்கிறதா பார், நம் கூட படித்த பெண்பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ, எங்கிருக்கிறார்களோ, என்ன ஆனார்களோ என்ற சிந்தையாவது இருக்கிறதா பார்", என்று சொல்லி சிரித்து வைத்தோம்.

பேசியும் சிரித்துமாய் சமையல் ஒன்றை ஆக்கி முடித்தோம்.

கீச் கீச் கூப்பிட்டது வாசல் குருவி.

யார் அங்கே? எட்டிப் பார்த்தோம். அட கண்மணி உங்களுக்குத்தான் விருந்தாளி என்று வியத்தி நின்றேன். வியந்தே தான் போனாள். ஏய். இது நம்ம நம்பி தானே. தான். தான். அவரே தான். வீட்டிற்குள் நுழைய விடாமலேயே குசலம் விசாரித்தோம்.

கீச் கீச் கீச் கீச் மீண்டும் கூப்பிட்டது குருவி.

பாஆஆ வாஆஆ! என்று வாய் பிளந்து நின்றோம்.

கண்ணுக்கெட்டா தொலைவில் இருந்து வந்திருந்த கண்மணியை பார்க்க கூப்பிடு தூரத்திலிருந்தும் எட்டிப்பார்க்காமல்  இருந்திருந்த இளையநம்பியும் பாவாவும் வந்திருந்தார்கள்.

நான் ஏதும் கேட்காமலேயே, 'ச ச அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஹி ஹி'  என்று குழைந்து நிற்க, 'சரி, சரி இப்படியாவது  வந்து சேர்ந்தீர்களே மக்களே!' என்று நெகிழ்ந்து போனேன்.


மீண்டும் மனைவி/கணவர்  மக்கள் மறந்து விட்ட கதை விட்ட இடம் விட்ட விதம் தொடர்ந்தோம்.

ஆக்கி வைத்த ஆகாரத்தை அளவளாவி உண்டு மகிழ்ந்தோம்.

வயிறும், மனமும் நிறையவே மெல்ல எங்கள் கணவர்/மனைவி மக்களையும் சேர்த்துக்கொண்டோம் சங்கதிகளில்.

"இதுகளையும் கட்டி மேய்க்கிறார்களே" என்பதாய் எங்கள் இருவரின் கணவர்களையும் பார்த்து கொள்ளை பிரியம் கொண்டார்கள் எங்கள் கூடப்படித்தவர்கள்.

"எவ்வளவு அன்பாய் நம் நண்பர்களை கவனித்துக் கொள்கிறார்களே" என்று அவர்கள் மனைவிகளிடம் மதிப்பும் மரியாதையும் வியப்பும் விருப்பமும் கொண்டோம், பெண்கள் நாங்கள்.

இதற்கு நடுவில் ஆமா உங்கள் கல்லியான அழைப்பு ஒன்றும் வரவேயில்லையே என்று ஒருத்தருக்கொருத்தர் குறை பட்டுக்கொண்டோம். மிச்சம் உள்ள 48 பேரை பற்றியும் அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த நாங்கள் கேள்விப்பட்ட செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

சீனியர் கிளாஸ் என்றும் ஜூனியர் கிளாஸ் என்றும் விருப்பமான வாத்தியார் வாத்திமார் என்றும் நாங்களே நலம் விசாரித்தும், பகிர்ந்தும் கொண்டோம்.

இரவு நெருங்க நெருங்க, 'இனி இவர்கள் கிளம்பி விடுவார்களே. எப்படியாவது இன்னுமொரு மூன்று வருடம் இவர்களுடன் கூடிப்படித்தால்... மூன்று வருடம் என்ன ஒரு மூணு நாளாவது சேர்ந்து இருந்தால்... விடுங்கள், இன்னுமொரு மூணு மணி நேரமாவது பேசக்கிடைத்தால்... குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது...' நான் யோசித்துக்கொண்டிருக்கவே...

'சரி, அப்ப நாங்க கிளம்பறோம்!'

'நாங்களும் தான்'

'நாங்களும்.'

விடை பெற்றார்கள் நண்பர்கள்.

'ஏய்! வெயிட். இனி எப்போ எங்கே?' சொல்லாமல் சொல்லி நின்றேன்.

காற்றிலோ கற்பனையிலோ எங்கிருந்தோ பதில் ஒன்று பறந்து வந்தது,  "மீண்டும் கண்மணி வரும்போது", என்று. சிரிப்பலை ஒன்றும் தொடர்ந்ததாக நினைவு.
.
"கிண்டல் தானே!", கண்கள் கசிய சிரித்து வைத்தேன்...

இன்னுமொரு பத்தொன்பது வருடம் மனக்கணக்கில் கூட்டிப்பார்த்தேன்.

சிரிப்பு உறைந்தது. கசிவு தொடர்ந்தது...