நடுத்தர வயதின் நெருக்கடி

2 comments

அன்பான உங்களுக்கு, அன்புடன் நான் NRIGirl எழுதுகிறேன்...

என்ன ரொம்ப நாளா ஆளையே காணோமே-னு கேட்காத ஆளில்லை என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மையில் கேட்பது, கேட்டுக்கொண்டே இருப்பது ஒற்றை நண்பர் - சில்வண்டு - மட்டுமே.

அதற்காகவே, அவருக்காக மட்டுமே எழுதுகிறேன் இந்த பதிவை... அதனால் அடித்தல் திருத்தலு ட ன் முதல் வரியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிறேன் என் கடிதத்தை...


அன்பான சில்வண்டு அறிய, அன்புடன் நான் NRIGirl எழுதுகிறேன்...

நலம்? நானும் அதே.

வலை தளத்தின் நீண்ட நாள் இடைவெளிக்கு வருந்துகிறேன். குறிப்பான காரணங்கள் என்று சொல்லப்போனால் பல உண்டு. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், 'நடுத்தர வயதின் நெருக்கடி' (mid life crisis) என்று தான் சொல்வேன்.

நடுத்தர வயது கொஞ்சம் குழப்பித்தான்  போடுகிறது மனதை. நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் பழகிப்போனதால் தான் என்னவோ மனம் ஒரு குரங்காக அடம் பிடிக்கிறது. இது வேண்டவே வேண்டாம் என்றும், அது கட்டாயம் வேண்டும் என்றும் ஒற்றைக் காலில் நிற்கிறது. நான் இப்படித்தான். நீங்கள் எப்படியும் போங்கள் என்று எதிர்த்து நிற்கிறது துணிச்சலாய்.

இளமை கடந்து செல்லும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மனது, ஓய்வின்றி சுழழ்கிறது தொலைத்து விட்ட கனவுகளை தேடி. ஆகாயத்திலேயே கட்டிக்கொண்டிருந்த கோட்டைகளை அம்போ என்று அந்தரத்திலேயே விட்டு விட்டு, போதும் இனி, இது தான் வாழ்க்கை, கையில் வைத்துக்கொண்டு காற்றில் என்ன வேடிக்கை. இருப்பதை வைத்து என்ன செய்யலாம் பார் என்று சாடுகிறது மனது.

நினைவுகளிலும் பேச்சிலுமாக மட்டுமே வரைந்து வைத்திருந்த கனவுகளும், கற்பனைகளும் காற்றில் கரைய, செயலில் எதை செயல்படுத்த முடியும் பார் என்று எழுந்து நிற்கிறது மனது... ...

ஏய் ஏய் ஏய் என்ன இது, அடுக்கிக்கொண்டே போனால் எப்படி என்று நீங்கள் குழம்புவதானால், என் புலம்பலை நிறுத்தி விளக்குகிறேன் ஒரு உதாரணத்துடன்...

இத்தனையும் ஏன், நேரில் விஷயத்திற்கு வருகிறேனே...

சைக்கிள் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு.

சைக்கிளா? அதற்கும் மனதுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது சொல்கிறேன்.

சைக்கிள் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு. (மோட்டார் சைக்கிள் என்றால் அதையும் விட பிரியம்...)

அமெரிக்காவில் அடி எடுத்து வைத்த கையுடன், sorry காலுடன், நான் முதலில் விரும்பி என்னவரிடம் கேட்டது ஒரு சைக்கிள் வேண்டும் என்பது தான்.

எந்த விருப்பத்தையும் கொஞ்சம் ஆற அமர யோசித்தே முடிவு செய்யும் என்னவர் என் நச்சரிப்பு தாங்க முடியாமல் சைக்கிள் ஒன்றை வாங்கி வந்தார் (நான் கேட்டு ஆண்டுகள் பல கடந்து).

அதோடு தொல்லை தீர்ந்தது என்று தான் நினைத்தார். சைக்கிள் மட்டுமா கேட்டேன். கூட ஓட்ட நீங்களும் வேண்டும் என்றேன். 
இன்னொரு சைக்கிள் உங்களுக்கும்  வேண்டும் என்றேன். முடியவே முடியாது என்று நிமிர்ந்துவிட்டார்.

ச ச. இருசக்கர வாகனங்களுக்கும் நமக்கும் ஆகவே ஆகாது என்று, சிறு பிள்ளையில் சைக்கிள் ஓட்டி கீழே விழுந்த கதை ஒன்றை சொல்லி வைத்தார். ஏதோ விளையாட்டுக்குத்தான் சொல்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு முடிவோடு தான் இருந்தார் சைக்கிள் மீதுள்ள வெறுப்புடன்.

கெஞ்சியும் கொஞ்சியுமாக ஏதோ வீட்டை சுற்றி ரெண்டு ரவுண்டு ஓட்டியதோடு சரி என் சைக்கிள் பயணம். ஏதோ எனக்கு பாவம் பார்த்து அதே சைக்கிளில் அவர்களும் ரெண்டு ரவுண்டு வந்திருப்பார்கள் அவ்வளவு தான் அவர்கள் பயணம். ஒரே சைக்கிள் வைத்துக்கொண்டு ரெண்டு பேர் எப்படி ஓட்ட முடியும். அதனால் நாங்கள் 
தனித்தனியாகத்தான் ஓட்டி வைத்தோம்.

இதற்கிடையில் பிள்ளைகள் மூன்று பெற்று எடுத்தோம். எப்பொழுதெல்லாம் சைக்கிள் பேச்சை எடுத்தாலும், சின்ன பிள்ளைகளை வைத்துக்கொண்டு சைக்கிளா?, சாடினார் என்னவர். அமேரிக்க அம்மாக்கள் தங்கள் சிறு பிள்ளைகளை பொதிந்து வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதை காட்டினால், அது அவர்கள் பண்பாடு என்று வாதிட்டார். சோர்ந்து போன என்னை ஏதோ பாவம் பார்த்து, கோபம் தனித்து சமரசம் செய்தார். கொஞ்சம் பொறு. பிள்ளைகள் வளர்ந்து விடுவார்கள். குடும்பமாக நாம் எல்லோரும் சைக்கிள் ஓட்டுவோம் சரியா என்றார். சரி ஒன்றை சொல்லி வைத்தேன்.

காலம் கடந்தது. பிள்ளைகளுக்கு சைக்கிள் சொல்லி கொடுப்பதில் முன் நின்றேன். எல்லாம் பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது தெரியாமல் கணவரும் மூழ்கி நின்றார் இந்த முயற்சியில். இவ்வளவு தானே என்பதாய் மூன்று பிள்ளைகளும் வெகு இயல்பாய் கற்றுக்கொண்டார்கள் சைக்கிள் பயணம். ஆர்வம் ஆர்வமாய் குடும்ப பயணம் துவக்கினோம் எங்கள் சைக்கிள்களில். என் சைக்கிளில் என் கணவரும், தங்கள் சைக்கிள்களில் பிள்ளைகளும், நான் மட்டும் ஓட்டமும் நடையுமாய். 


இதற்கெல்லாம் வருந்துமா இந்த மனது? உற்சாகத்தில் துள்ளிக்குதித்தது.

ஒரு ரெண்டு எட்டு போயிருப்போம். முதல் ஏற்றத்திலேயே பிள்ளைகள் இறங்கினார்கள் சைக்கிள் விட்டு. நானும் நடக்கிறேன் அம்மா கூட என்று. அம்மாவுக்கு சைக்கிள் இல்லை அதனால் நடக்கிறேன். உங்களுக்கு இருக்கிறதே ஓட்டுங்கள் என்றேன்.

ம்ஹூம். நாங்களும் நடப்போம். சரி நடங்கள்; உங்கள் சைக்கிளை உருட்டிக்கொண்டே, என்றேன். கொஞ்ச தூரம் போயிருப்போம். உருட்ட கஷ்டமாக இருக்கிறது எங்களுக்கு. வேண்டுமானால் நீங்கள் உருட்டுங்கள் என்றார்கள்.

தேவை தான் எனக்கு. சின்னவன் சைக்கிளை அம்போ என்று தரையில் கிடத்தி விட்டு பெருசுகள் சைக்கிள் ரெண்டையும் ரெண்டு பக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தோம். நடக்க முயற்சித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

சைக்கிள் பெடல்கள் ரெண்டு பக்கம் இருந்தும் என் கால்களில் இடிக்க, நான் பிள்ளைகளை முறைக்க, சின்னவன் முன்னால் ஓட, பெரியவள் கோபித்துக்கொண்டு திரும்பி வீட்டுக்கு வந்த வழி ஓட, அடுத்தவள், இல்லை Daddy போன திசைக்கு தான் போனும் என்று அடம் பிடிக்க, அப்பப்பா, போதும் போதும் என்று ஆகி விட்டது இந்த பயணம் எனக்கு.

இதை எதுவும் அறியாமல் ஒற்றைக் கவலை இல்லாமல்  வெகு தூரம் முன் போய்க்கொண்டிருந்தார் என்னவர், தன் சிறு பிள்ளை  காயமும், சைக்கிள் சபதமும் மறந்து, உல்லாசமாய்...

ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை இந்த நிகழ்வு. இது ஒரு தொடர் கதையாகி விட்டிருந்தது, ஆண்டுகள் பல கடந்தும். ம்ஹூம்...


...

பதினேழு வருடம் ஓடி விட்டிருந்தது இப்படியாக. இது வரை ஒரு நாளாவது குடும்பமாய் ஒரு சவாரி சென்றது இல்லை நாங்கள் சைக்கிள்களில். வளர்ந்துவிட்ட பிள்ளைகள் எங்கள் சைக்கிளை தங்களதாய் ஆக்கி விட்டிருந்தார்கள். எப்படியும் எப்போதும் ஒரு சைக்கிள் குறைவு படத்தான் செய்கிறது. அது ஏனோ என்னவர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போய் விடுகிறது. 


இத்தனை நாள் பொறுத்து போன மனது இப்போது இறுகி விட்டிருக்கிறது. சபதம் ஒன்று ஓங்கி நிற்கிறது...

காற்றில் தொலைத்த கனவுகளை விரட்டி பிடிப்பேன். தூங்கி விட்ட சொப்பனங்களை அதட்டி விழிப்பேன். படுத்துக் கிடக்கும் பாசாங்குகளை துரத்தி அடிப்பேன்.

எனக்காய் எனக்கு மட்டுமாய் ஒரு சைக்கிள் தேடி பிடிப்பேன். நடை பயில்வேன். வீர நடை கொள்ளுவேன். மேடானாலும், காடானாலும், கடற்கரை தெருவானாலும், வீட்டின் வெறும் முற்றம் தானானாலும் சைக்கிள் ஆசை தீரும் வரை ஓட்டி மகிழ்வேன்.  உங்களை 
கெஞ்சிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இனி கொஞ்சமும் தாமதிக்க மாட்டேன்...

... என்று சபதம் ஒன்று ஓங்கி நிற்கிறது.

இது ஒரு உதாரணம். இப்படி எத்தனையோ. என்னென்னவோ. இதைத்தான் சொல்கிறேன் 'நடுத்தர வயதின் நெருக்கடி' என்று. குரங்கு மனதின் சேஷ்டைகள் என்று.

இந்த அடம்பிடிப்புகளுக்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் ஒதுங்கி விட்டிருக்கிறார் என்னவர். உனக்கு சைக்கிள் என்றா
ல் எனக்கு Volley Ball என்று தன் முழு ஆர்வத்தையும் பிள்ளைகளின் முழு கவனத்தையும் Volley Ball பக்கம் திருப்பி இருக்கிறார். அவர்களை வாழ்த்தி விட்டு வேகம் விரைகிறேன் என் சைக்கிளில்... நான் மட்டும் தனியாக.

நீங்களே சொல்லுங்கள், இத்தனையும் வைத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல, எல்லாம் நலம் என்று எப்படி நான் நடிக்க முடியும்? வலையின் பதிவுகளை எப்படி நான் தொடர முடியும்?

இப்போது, உங்களிடம் இத்தனையும் பகிர்ந்து கொண்டதில் மனதின் நெருக்கடி கொஞ்சம் குறைந்திருக்கிறது. அநேகமாக விரைவில் விரையும் விரிந்த பதிவு...

அது வரை விடை பெறுகிறேன்,

~ NRIGirl