A Room of One's Own

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நாங்கள் எல்லோரும் நல்ல சுகம்.

சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வருகிறேன்.

நிறைய பேருக்கு ஒரே கேள்வி, 'உனக்கு எங்க தான் நேரம் கிடைக்குது கடிதம் எழுத?' என்று. நமக்கு மூச்சு விட நேரம் எடுக்கிறோமா என்ன? யோசிக்க? இல்லை. பேச? இல்லை. அது போல் தான் இதுவும் என்பது என்னுடைய பதில். ஆனால் அவர்களிடம் சொல்லத்தான் தயங்குகிறேன்; புரிந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்று.

எப்படியும், உங்களுக்கு இந்த வலை தளம் மூலம் கடிதம் எழுதுவதை என் சிந்தனைகளின் ஒரு வடிகாலாகவே கொள்கிறேன். நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது அதை எழுதினவரின் சிந்தனை ஓட்டத்தை தெரிந்துகொள்கிறோம். நம் அலை வரிசையில் ஒத்துப்போகும் சிந்தனை உள்ளவர்களை தொடர்ந்து படிக்கிறோம். மற்றவர்களை ஒரு பக்கத்தோடு நிறுத்தி விட்டு மீண்டும் தேடுகிறோம் - நம் அலை வரிசையை.

இப்போது நான், Virginia Woolf எழுதிய, 'A Room of One's Own' வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  அலை வரிசை அவ்வளவாக ஒத்துப்போகாவிட்டாலும், அவர்கள் எழுத்து நடை நன்றாக இருப்பதாலும், சரி என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போமே என்பதாலும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

என்னவென்றால், 'பெண்களும் கதைகளும்' என்ற தலைப்பில் அவர்களை பேசக் கேட்டிருக்கிறார்கள் ஒரு கல்லூரியில். அந்த கட்டுரையை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதை அழகாய் விவரித்திருக்கிறார்கள் - இந்த புத்தகத்தில். 

அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில், "ஒரு பெண் கதைகள் எழுத வேண்டுமானால், அவளுக்கென்று ஒரு தனி அறை வேண்டும், வருடம் ஒரு $300-ஆவது கைச்செலவுக்கு பணம் வேண்டும்", என்று முடிக்கிறார்கள். அவர்கள் எழுதியது 1929-ஆம் வருடத்தில். அதை ஆம் என்றும் இல்லை என்றும் இன்னும் விவாதங்கள் தொடருகிறது - எழுத்தாளர்கள் மத்தியில்.

அவர்கள் கூறும் கருத்தில் ஒரு கருத்து என்னை பாதித்தது. அவர்கள் சொல்லுகிறார்கள், ஒரு பெண் கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதப்போனால், உலகம் அவர்களைப் பார்த்து சொல்லுமாம், "நீ எழுத வேண்டுமானால் எழுதிக்கொள் எதையும், என்னை அது எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் நீ எழுதுவதை நான் வாசிக்கப்போவதில்லை", என்று.

நான் ஏன் இதை உங்களிடம் சொல்லுகிறேன் என்றால், என் கடிதங்களும் அப்படியே. எத்தனை பேர் படிக்கிறார்கள், அதில் எத்தனை பேர் புரிகிறார்கள், அதிலும் எத்தனை பேர் தொடர்கிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான். அதனால் தான் நண்பர்கள் கேட்கிறார்கள், "யாருக்காக எழுதுகிறாய்? எங்கிருக்கிறது உனக்கு நேரம்? நீ எழுதி நாங்கள் யார் படிக்கப்போகிறோம்" என்று.

எனக்காகத்தான் எழுதுகிறேன் என்பது என் தாழ்மையான பதில். உங்களிடம் பேசுவதாக எண்ணிக்கொண்டு என்னிடம் நானே பேசிக்கொள்கிறேன் இந்த கடிதங்கள் மூலம். அவ்வளவு தான். ஒரு வேளை இன்னும் ஐந்து வருடங்களோ பத்து வருடங்களோ கழித்து வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, வாழ்ந்ததின் தடங்களாக இந்த கடிதத் தொகுப்பு அமையும் என்பது ஒன்றே என் எதிர்பார்ப்பு.

ஆனால் இப்போது Virginia அம்மையாரின் பாதிப்பினால், எப்படியும் எனக்கென்று ஒரு அறை வேண்டும் என்பது மனதில் பதிந்து விட்டது. தேடுகிறேன், "ஒரு முக்கோ, மூலையோ அமையுமா நமக்கென்று", என்று. அமையும் போது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் தானாய் புரளத்தான் போகிறது, அம்மையாரின் கருத்துப்படி. அமையும் வரை முடிந்தது கடிதங்கள் மட்டுமே.

அடுத்த கடிதம் விரையும் வரை விடை பெறுகிறேன்.

அன்புடன்,
~NRIGirl

4 comments: (+add yours?)

bkaseem சொன்னது…

உங்களுக்கும், உங்கள் கல்லூரிக் கால நண்பனான எனக்குமான, அலைவரிசை எப்படி? ஒத்துப்போவதா? ஒத்துப்போகாததா? இதைப்பற்றி இதுவரை யோசித்ததே இல்லையென்பதால் இதற்கான விடையும் தெரியாது என்றாலும், இந்தக் கட்டுரையைப் பொருத்தவரை அப்படிக்கு அப்படியே ஒத்துப்போகிறது “அலை வரிசை”.

எப்போதாவது ஏதாவது எழுதும் என்னிடமும் கேட்கப்பட்ட கேள்விகள்தான் இவை. “எங்கிருந்துதான் நேரம் கிடைக்கிறதோ?” “அப்போ… இதைத்தான் அமெரிக்காவுல உக்காந்து செஞ்சிட்டிருக்கியா நீ?” என்றெல்லாம் நானும் எதிர்கொண்ட கேள்விகளே இவை.

இதற்காக நான் இதைக் கேட்டவர்களிடமும் மற்றவர்களிடமும் உரைத்த பதிலின் சாரமும் அப்படிக்கு அப்படியே உங்கள் பதிலோடு ஒத்துப்போகிறது. உண்மைதான், எனக்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு நான் மட்டும் துணையாக ஆகும் தனிமையில் நான் என்னோடு கலந்துரையாட கருத்தாவது என் நினைவுகளே. பசுமையாய் இன்றிருக்கும் நினைவு, மனதின் இதரச் சுமைகள் காரணமாக பசுமை குன்றிவிடுமேயானால் அதை அப்போது புரட்டிப்பார்க்க எழுத்தில் பதிய வேண்டும் எனும் எண்ணமே எழுதுவதற்கான தூண்டுகோல்.

அவைகளை எவரேனும் படித்தாராயின், அபிப்பிராயங்கள் பகிர்வார்களாயின், அது கூடுதல் பயண். கூடுதல் மகிழ்ச்சி.

உங்கள் இடுகைகள், எனக்கு மிக்க பயண் தருபவை. இதோ, இன்றுகூட காலையிலிருந்து வேலை, மீட்டிங், அது இது என்று ஓயாது ஓடிவிட்டு, உண்டு முடித்து, அடுத்த வேலையை ஆரம்பிக்கும் முன் உற்சாகத்தைக் கூட்ட, ஏதேனும் செய்யவேண்டுமே என்று மனம் சொன்னபோது, உங்கள் வலைதளத்திற்கு செல்லலாம் அங்கே புதிதாய் ஏதும் இடுகை இருக்கும் அதைப்படிக்கையில் மனம் இளைப்பாறும் என்றொரு எண்ணம் மேலோங்கி வந்தது.

ஒவ்வொரு கட்டுரைக்கும் கருத்து எழுதாவிட்டாலும் ஒவ்வொரு கடிதத்தையும் கட்டாயம் படிப்பதுண்டு. மேலும், நான் கருத்து எழுதினால் அதிலுள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், சமயத்தில் உங்கள் கடிதத்தை விட என் கருத்து நீநீநீளளள…மானதாகப் போய்விடும்.

உண்மையைச் சொல்லப்போனால், Short and Sweet ஆக எழுதுவது எப்படி என்று உங்கள் கடிதங்கள் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஆகவே, தொடரட்டும் உங்கள் கடிதங்கள்… என்னைப்போல இன்னும் பலர் அதை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை.

மற்றபடி அணைத்தும் நலம்.

NRIGirl சொன்னது…

மிக்க நன்றி Bawa!

உங்கள் கருத்துக்களை எனக்கு ஒரு பாராட்டாகவே நான் கருதுகிறேன்.

என் முதன் முதல் கட்டுரையான, "My first drop of sweat" - க்கு (1995-ஆம் வருடம்) நீங்கள் தந்த ஊக்கம் தான் என்னை தொடர்ந்து எழுத வைத்தது என்பது இதுவரை நான் மட்டுமே அறிந்த உண்மை.

உங்கள் சில் வண்டு வலை தளம் வாசிக்கும்போது தான் உங்களின் எழுத்தின் அருமையை அறிந்து கொண்டேன். நம் அலை வரிசைகளின் ஒருண்மையும் என்னை அதிசயித்திருக்கிறது.

சொல்லப்போனால் என் அனைத்து நண்பர்கள் & நண்பிகள் மத்தியில் நீங்கள் ஒருவர் தான் எழுத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். நான் எழுதுவதையும் ஊக்குவிக்கிறீர்கள். இப்போது சமீபத்தில் அண்ணாச்சி Alfy-யும். மற்ற படி எழுதும் என் நண்பர்களெல்லாம் வலை தளத்தில் அறிமுகமானவர்களே.

உங்கள் கருத்துகள் அவ்வளவு நீளமோ அவ்வளவு உற்சாகம் தருகிறது. முடியும்போதெல்லாம் எழுதுங்கள். சில் வண்டையும் கொஞ்சம் எழுப்பி விடுங்கள். நன்றி.

KParthasarathi சொன்னது…

ஒத்து போகின்ற அலை வரிசைகளைதான் படிப்பேன் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அப்படி இருந்தால் கிணற்று தவளையாகவே இருப்போம்..மாற்று கருத்துகள் ரொம்பவும் முரண்பாடாக இல்லாவிட்டால் படிக்கவேண்டிய விஷயம்.பலர் தங்களை பின்னர் மாற்றி கொள்ள கூடும்.எல்லா விஷயங்களும் ஒரே
கண்ணோட்டத்தில் இருப்பதில்லை.நாம் எழுதுபவரின் எண்ணங்களையே புரிந்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும் ,நம்முடைய பார்வையை திணிக்க அல்ல.

நிற்க,நீங்கள் எழுதுவது எல்லாம் எனக்கு ஏற்புடையவை. உங்கள் ஹாஸ்யத்துடன் கலந்த நடை பிடித்தும் உள்ளது

NRIGirl சொன்னது…

நன்றி நண்பர் KP! நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது.

ஆனால் Virginia Woolf-யை பொருத்தவரை ஆண்களை ரொம்ப எதிர்ப்பதும், பெண்கள் கொஞ்சமும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் ஒரு கோபத்துடன் எழுதியிருக்கிறார்கள். Room of One's Own முழுவதும் ஆண்களை தாழ்த்தி பேசுவதாகவே எழுதியிருக்கிறார்கள். அது என் கருத்துக்கு முற்றிலும் மாறானது. தாழ்ந்தவர்கள் அல்ல தான். ஆனால் கோபம் எதற்கு? அமைதியாக விளக்கலாமே, என்பது என் கருத்து.

நீங்கள் சொல்லிய படி, சரி என்ன தான் சொல்ல வருகிறார்கள் பார்ப்போமே, என்று வாசித்ததினால் தான் எனக்கென்று ஒரு அறை வேண்டும் என்ற எண்ணமாவது வந்திருக்கிறது. அவர்கள் சொல்லுவதை ஆலோசித்தால், பெண்களுக்கு மட்டுமல்ல, எழுத்தாளராக விரும்பும் ஆண்களுக்கும் கூட கட்டாயம் அவர்களுக்கென்று ஒரு அறை வேண்டும் என்பது என்னுடைய விளக்கம்.

பல கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள நீங்களே சொல்லுங்கள், இதில் எந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு என்று.