காற்று

"இது தான் ஆடி மாதமாக இருக்குமோ", என்று யோசிக்கிறேன். காரணம் அவ்வளவு காற்று. அம்மியை தூக்குகிறதோ இல்லையோ ஆட்களை தூக்க கொஞ்சம் முயற்சிக்கத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.

காலையில் மெனெக்கெட்டு சீவி சிங்காரித்து கிளம்பினால், தலை விரி கோலமாகத்தான் ஆஃபீஸ்-குள் வந்து சேருகிறோம். அவ்வளவு காற்று. 

குட்டைப் பாவாடை அணிந்த பெண்களின் நிலமை இன்னும் பரிதாபம். கிளு கிளு சிரிப்போடு பறக்கும் பாவாடைகளை அமுத்தியபடி காற்றை அவர்கள் திட்டுவதை கேட்க நமக்கு சிரிப்புத் தான் வருகிறது. அவ்வளவு காற்று.

இப்பொழுது தான் பூக்க ஆரம்பித்திருக்கும் பல மரங்களும், பூத்த பூக்களை அவசரமாய் உதிர்த்து விட்டு, 'ஐயோ இன்னும் கொஞ்சம் தூங்கி இருக்கலாமோ' என்று கவலையாய் நிற்கிறது. அவ்வளவு காற்று.

வெப்ப நிலை இன்று 60-களில் என்றால், நாளை 40-களில் என்றிருக்கும். குளிர் காலம் திரும்பி வந்து விட்டதோ என்று திகைக்க வைக்கும். அவ்வளவு காற்று.

கடந்த சில நாட்களாய் சூரியனும் பேருக்கு தலையைக் காட்டி விட்டு பிறகு தலைமறைவாகி விட்டது. இன்று என்னவோ தலையையும் காணோம் - ஏதோ காற்றிற்கு பயந்துகொண்டு, மேகங்களுக்குள் ஒளிந்திருக்கிறது போலும். அவ்வளவு காற்று.

சொல்லப்போனால், காற்று சுகமாகத்தான் இருக்கிறது. மனதில் ஒரு இனம் தெரியாத உல்லாசத்தை தரத்தான் செய்கிறது. அப்படியே நடந்து கொண்டே இருக்கமாட்டோமா சுதந்திரமாய்? என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.

ஏதோ நம்மை தழுவிச்செல்வது தான் அதன் தலையாய கடமை என்று ஒரு கற்பனை விரியத்தான் செய்கிறது. காற்று பட்ட முகமும், மேனியும், உடையும், உள்ளமும் ஒரு படி அழகில் கூடி விட்டதாய் ஒரு எண்ணம் வரத்தான் செய்கிறது. அவ்வளவு காற்று.   

நான் வாசித்துகொண்டிருக்கும் 'To The Lighthouse' புத்தகத்திலும் வீசுகிறது காற்று. ஒரு தீவில் கோடை விடுமுறைக்காக வந்திருக்கிறார்கள் ஒரு குடும்பம். அம்மா தன் எட்டு பிள்ளைகளை, குறிப்பாக சின்னவன் James-ஐ, அங்குள்ள கடற்கரை விளக்குக்கு கூட்டி போக படும் பாட்டைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள், வேற யாரு, நம்ம Virginia Woolf அம்மையார் தான்.

 "நாளைக்கு போவோம் விளக்கை பார்க்க", என்று சொல்லுகிறாள் அன்னை. பிள்ளைகள் சந்தோஷப்படுகிறார்கள். "எப்படி போக முடியும்? இவ்வளவு காற்றில்?, சாடுகிறார் தந்தை. பிள்ளைகள் வாடிப்போகிறார்கள். "நாளை நன்றாக இருக்கும்", சமாதானப்படுத்துகிறாள் பெற்றவள். "இல்லவே இல்லை, ரொம்ப மோசமாக இருக்கும்", இன்னும் இறுக்குகிறார் பெற்றவர்.

அடிக்கிறது காற்று - மனதில்... அவ்வளவு காற்று.

வெளியே வீசும் காற்றுக்கும், மனதின் உள்ளே வீசும் காற்றுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். ஒன்று மூச்சை நிறைக்கிறது. மற்றொன்று மூச்சை அடைக்கிறது. ஒன்று மனதை பறக்க வைக்கிறது. மற்றொன்று மனதை கூண்டில் அடைக்கிறது. ஒன்று இதமாய். மற்றொன்று இடறலாய். சுகமாய் ஒன்று. சுமையாய் மற்றொன்று. கலகலக்கும் ஒன்று. கலங்க வைக்கும் மற்றொன்று. ம்ஹூம்.

மன்னிக்கவும் - காற்றில் எங்கேயோ போய் விட்டது மனது... அவ்வளவு காற்று.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் ஊரில் இப்போது என்ன காலம்? உண்மையில் இது என்ன மாதம்? ஆடி எப்போது? தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்?!


என்றும் அன்புடன்,
~ NRIGirl

8 comments: (+add yours?)

YL சொன்னது…

இப்பொழுது சித்திரை , அடுத்து வருவது வைகாசி, ஆணி, ஆடி! ஜூலையில்!

NRIGirl சொன்னது…

Thank You அம்மா!

பள்ளியில் இதை சொல்லித்தந்ததாக நினைவில்லை. வீட்டிலும் தமிழ் மாதங்கள் பற்றி நாம் பேசியதில்லை. இனி கேட்டு பதித்துக்கொள்ள வேண்டியது தான்.

பெயரில்லா சொன்னது…


நான் இந்த வலைப்பதிவில் குளிர் தென்றல் அனுபவிக்க முடிந்தது .

கடவுள் ஆசீர்வதிப்பாராக

Angel சொன்னது…

கடவுள் ஆசீர்வதிப்பாராக

bkaseem சொன்னது…

உங்களூரிலும் காற்றா?
எங்களூரிலும் காற்றுதான்! அப்போ
பெங்களூரில்???

(சரி சரி விடுங்க ஏதோ ரைமிங்கா எழுதலாம்னு முயற்சி செஞ்சேன்... Context காத்துல அடிச்சிட்டு போயிடுச்சு!)

NRIGirl சொன்னது…

நன்றி. உங்களையும் ஆசீர்வதிப்பாராக... Angel & பெயரில்லா.

நன்றி Bawa. சிரிக்க வைக்கிறது உங்கள் கருத்து.

KParthasarathi சொன்னது…

எதுவுமே அளவுக்கு மீறினால் சங்கடம் தான்.விரித்த தலையும்,குட்டை பாவாடையின் பிரதிகூலமும் சிரிப்பை வரவழைத்தது..மெல்லியதான தென்றல் போல் உள்ள காற்று மேனியையும் முகத்தையும் தழுவி சென்றால் அதன் சுகமே அலாதி தான்..சமுத்ர கரையோரத்தில் காற்றிற்கு எதிராக நடந்து போன ஞாபகங்கள் நினைவிற்கு வருகிறது.இங்கு சென்னையில் மாலை மூன்று மணிக்கு பிறகு காற்றினால் வெப்பம் தணிந்து இதமாக செய்கிறது..

NRIGirl சொன்னது…

ரொம்ப சந்தோஷம் KP, உங்கள் கருத்தை பார்த்து. ஏனோ, உங்கள் கருத்து கிடைத்தால் ஒரு பாஸ் மார்க் வாங்கின சந்தோஷம்... நல்லாயிருக்கீங்களா?