தலைகீழ்

நேற்று பிள்ளைகளுக்கு விடுமுறை, ஏதோ Teacher's Conference என்று. சரி அவ்வளவு தான் வீடே தலைகீழ் ஆகிவிடும் என்று நினைத்துக் கொண்டேன். சாயங்காலம் வீடு திரும்பும்போது இதயம் கொஞ்சம் வேகமாகவே அடித்துக்கொண்டது. சரி எப்படி கிடந்தால் நமக்கென்ன என்று தைரியமாய் உள்ளே நுழைந்தேன்.

உண்மையிலேயே தலைகீழாகத்தான் இருந்தது - நான் எண்ணியதற்கு தலைகீழாய். அதது அதினதின் இடத்தில் இருந்தது. சமர்த்தாய். சாமர்த்தியமாய். அழகாய். அம்சமாய்.

கொஞ்சம் அசந்து தான் போய் விட்டேன். அடடா நம் பிள்ளைகளா இப்படி என்று கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு உற்சாகம். கடைசியாய் எப்போது இவ்வளவு சந்தோஷப்பட்டேன் எதற்காவது என்று யோசித்து பார்த்தேன், ஒன்றும் கிட்ட வில்லை.

நிம்மதியாய் ஒரு நீண்ட பெருமூச்சு தானாய் வந்தது. அழத்தான் இல்லை போங்கள். அவ்வளவு சம்தோஷம்.

சரி கீழ் வீட்டைத்தான் ஒதுக்கியிருப்பார்கள் என்று மேலே போனால், அது அதற்கு மேல். ஒவ்வொரு அறையும் ஒதுக்கப்பட்டு, துணிகள் எல்லாம் மடிக்கப்பட்டு. அப்பப்பா.

நன்றி நன்றி. மிக்க நன்றி என்று மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக்கொண்டேன். பிள்ளகளே போதும், போதும், ஏதோ தெரியாமல் செய்து விட்டோம் என்று சொல்லாத குறை தான்.

இனி பிழைத்துக்கொள்வேன், பிள்ளைகள் தலை தூக்கி விட்டார்கள் என்று எனக்கு நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன்.

சரி, சரி அதற்கென்ன? இன்னும் இரண்டே நாளில் மீண்டும் தலைகீழ் ஆகப்போகுது, அதற்குள் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களில் யாரையும் சொல்லவில்லை. மற்றவர்களில் சொல்கிறேன். இதைத் தான் Pessimism என்கிறோம். optimism-ன் எதிர்மறை.

Optimists எல்லா விஷயங்களிலும் உள்ள நல்லதை காண்கிறார்கள். Pessimists அனைத்து விஷயங்களிலும் உள்ள குறைகளை பெரிது படுத்துகிறார்கள்.

கல்லூரி காலங்களில் படித்த ஒரு துணுக்கு நியாபகம் வருகிறது: "The optimist sees the doughnut, the pessimist the hole!", என்று. (தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், doughnut என்பது நம்ம அதிரசம் மாதிரி இருக்கும், வட்டமாய், இனிப்பாய். அதின் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். Optimist அதிரசத்தை காண்கிறான், pessimist ஓட்டையை காண்கிறான் என்பது பழமொழி.)

அது இருக்கட்டும், எனக்கொரு சந்தேகம். தமிழில் தலைகீழ் என்ற வார்த்தைக்கு எதிர்மறை தான் என்ன? ஆங்கிலத்தில், "up side down" என்றும் அதின் எதிர்மறையாக "right side up" என்றும் சொல்கிறோம்.

தமிழில் தலைகீழின் எதிர்மறை தலைமேல் என்று சொல்ல முடியாது, அர்த்தம் முற்றிலும் மாறிவிடுகிறது. கால்மேல் என்றும் சொல்லமுடியாது. யோசித்து பார்த்ததில் கால்கீழ் என்பது தான் சரியாக பொருந்துகிறது. ஆனால் அப்படி ஒரு வார்த்தையை நான் கேள்விப்பட்டதில்லை. நீங்கள்?

சரி இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அதிகம் குழப்பிக்கொள்ளாதீர்கள். தலைகீழின் எதிர்மறை என்று சொன்னால் போச்சு...

அப்புறம், சொல்லுங்கள், வேற என்ன விசேஷம்? உங்க வீட்டில் எல்லோரும் சுகமா? உங்க வீடு சுத்தமா இருக்கா?

Great! Enjoy பண்ணுங்க. நாளைக்கு அழுக்காகும்னு நினைச்சு இன்னைக்கு கவலை படாதீங்க. ஒருவேளை தலைகீழாய் கிடந்தாலும் கவலையை விடுங்க. நாளைக்கு சுத்தம் பண்ணினா ஆச்சு...

அன்புடன்,
~NRIGirl

6 comments: (+add yours?)

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

யாவரையும் கவரும் படி மிக அருமையாகசொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

NRIGirl சொன்னது…

நன்றி நண்பர் ரூபன்! தவறாத தங்கள் வருகைக்கும், ஊக்குவிக்கும் உங்கள் கருத்துகளுக்கும், நன்றி!

KParthasarathi சொன்னது…

திடீரென்று ஒரு சந்தேகம் பொறி தட்டியது.ஒரு வேளை இஸ்ரேல் அவர்கள் உங்களுக்கு வேலை பளுவை குறைக்க ஒரு cleaner ஏற்பாடு செய்து இருப்பாரோ என்று !! ஆனால் குழந்தைகள் படு சுட்டியாக வீட்டை சுத்த படுத்தி இருக்கிறார்கள்.
உங்களுடைய பெருமிதம் நியாயமானதே.என் சார்பில் ஒரு சபாஷ் சொல்லுங்கள்.

NRIGirl சொன்னது…

நன்றி நண்பர் KP! என் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே நீங்கள்?

தமிழில் தலைகீழ் என்ற வார்த்தைக்கு எதிர்மறை தான் என்ன?

கொஞ்சம் விளக்குங்களேன்...

KParthasarathi சொன்னது…

தலை கீழ்- எதிர் மறை நேராக

NRIGirl சொன்னது…

படு smart KP! நன்றி! :)