அன்புள்ள Karen அறிய, அன்புடன் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்...
நானும் உங்களுக்கு எத்தனையோ முறை கடிதம் எழுத ஆரம்பிப்பதும், ஒரு வரி
எழுதியவுடன் அடுத்து என்ன எழுத என்று திகைப்பதுமாக கடந்த இரண்டு வாரங்களை
ஒட்டி விட்டேன். இன்று எப்படியும் எழுதி விடுவது என்று ஒரு தீர்மானத்துடன் தான்
இப்போது அமர்ந்திருக்கிறேன்.
கடிதம் எனக்கு சரளமாகவே வரும், ஏனென்றால் மனதில் தோன்றுவதை அப்படியே
எழுதிவிடுவேன். மனதில் வைத்து அடிக்கவோ, கிறுக்கவோ முயன்றால் எண்ணங்கள் தடை
படும் என்பதால் பொதுவாக அப்படியே எழுதுவது தான் வழக்கம். எழுதிய பிறகு
அடிக்கவோ கிறுக்கவோ செய்தால் கடிதத்தின் அழகு கெடும் என்பதால் எழுதியவற்றை
அப்படியே விடுவது தான் பழக்கம்.
ஆனால் உங்கள் விஷயத்தில் என்னமோ ஒரு வரிக்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.
சரி, ஆங்கிலம் தவிர்த்து தமிழில் முயற்சிக்கலாம் என்று நினைத்ததின் விளைவு
தான் இதோ இந்த கடிதம்...
எப்படி இருக்கிறீர்கள்? நான் நல்ல சுகம் தான்.
உங்களுக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை. என் பெயர், ஊர், எதுவும்
குறிப்பிடக்கூடாது என்பது விளையாட்டின் விதி முறை. அதாவது இந்த கடிதம்
உங்களுக்கு யார் எழுதியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு இப்போது
தெரியக்கூடாதாம். நானும் அடிக்கடி உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமாம். வருட
இறுதியில் Christmas விழாவை ஒட்டி தான் தெரிய வருமாம் யார் வருடம்
முழுவதும் நமக்கு கடிதம் எழுதி நம்மை உற்சாகபடுத்தினார்கள் என்று. இது நம்
ஆலயத்தில் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டு - உங்களுக்கும்
தெரிந்திருக்கும். Secret Angel விளையாட்டு.
கடிதம் எழுதி விளையாட்டா, பரவாயில்லையே என்று நினைத்து நானும் பெயர்
கொடுத்திருந்தேன். இப்படி மாட்டிக்கொள்வோம், என்று நினைக்கவில்லை.
காரணம், எனக்கும் உங்களை யார் என்று தெரியவில்லை.
ஆலயத்தில் பல
காரியங்களில் நான் முன்னுக்கு நிற்பதால் பலரையும் பழக்கம் உண்டு. ஆனால்
உங்களை இது வரை சந்தித்ததாக நினைவில்லை. ஒரு வேளை நீங்கள் புதிதாக
வருபவராயிருக்கும். அல்லது ஆராதனை முடிந்தவுடன் யாரையும் பார்க்க நிற்காமல்
ஓடுபவராயிருக்கும். எப்படியும் இப்போது வசமாக என்னிடம்
மாட்டிக்கொண்டீர்கள்.
சரி சொல்லுங்கள், கொஞ்சம் உங்களைப்பற்றி. உங்கள் பெயர் நான் அறிந்ததே.
Karen Moher. நீங்கள் எத்தனை வருடங்களாக இங்கு ஆராதனையில் கலந்து
கொள்கிறீர்கள்? குடும்பம்? பிள்ளைகள்?...
புரிகிறது எனக்கு உங்கள் தயக்கம். தெரியாத ஒருவரிடம் எப்படி நம்மளைப்பற்றி
சொல்ல முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள். நல்ல கேள்வி தான்.
அதனால் நான் முதலில் என்னை
அறிமுகம் செய்துகொள்கிறேன்.
என் பெயர்... ஐயோ அதை நான் சொல்லக்கூடாதே! மன்னிக்கவும். நான் வசிப்பது...
ஐயையோ அதையும் நான் சொல்லக்கூடாதே. மீண்டும் மன்னிக்கவும்.
ரொம்ப கஷ்டம் தான் இந்த விளையாட்டு! அப்ப இப்ப என்னதான் செய்யலாம்?
ஒன்று செய்யலாம், இந்த கடிதத்தை இத்துடன்
முடிக்கலாம். அடுத்த கடிதத்தை எங்கே ஆரம்பிக்க, எங்கே முடிக்க என்று
இப்போதிருந்தே யோசிக்கலாம்... என்ன சொல்றீங்க?
முடிப்பதற்குள், உங்களை உற்சாகப்படுத்த ஒரு வேத வசனம் இதோ:
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடை விடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும்
ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள்
உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. I தெசலோனிக்கேயர் 5:16-18
அன்புடன்,
~NRIGirl
வாசகர் கவனத்திற்கு:
மேலுள்ள இந்த கடிதம், உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம்.
Karen-க்கு
நான் கைப்பட கடிதம் எழுதி அவர்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும். Karen ஒரு அமெரிக்க பெண்மணி. அதனால் ஆங்கிலத்தில் தான் எழுத
வேண்டும்.
இந்த
கடிதம், என் பிரச்சனையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும், உங்களுக்கும் ஒரு
hello சொல்லவும், அமெரிக்க வாழ்க்கை-யின் ஒரு பகுதியை உங்களுக்கு எடுத்துரைக்கவுமே.
5 comments: (+add yours?)
கொஞ்சம் வேடிக்கையான விளையாட்டாக இருக்கிறதே..ஊர் பேர் தெரியக்கூடாதாம்.எதை எழுத எங்க எழுத பாஷை என்ன ஒன்னும்
புரியவில்லையே!உங்கள் வலைப்பூவில் நீங்கள் எழுத அதற்கு அவர் தன்னுடைய வலைப்பூவில் பதில் எழுதினால் இது ஒரு கடித போக்குவரத்து மாதிரி இல்லையே.
எங்களுக்கு உங்கள் கடிதங்கள் தாம் படிக்க முடியும்.
நீங்க எப்போதுமே ஏதாவது
விசித்திரமாக நூதனமாக செய்வது வழக்கம்.உங்கள் பழக்கம் ஆலயத்திற்கும் தொற்றிக்கொண்டு விட்டாற்போல் தெரிகிறது!!
குழப்பத்திற்கு மன்னிக்கவும் KP. உங்கள் கருத்தை பார்த்த பிறகு இப்போது ஒரு பின் குறிப்பு எழுதியிருக்கிறேன். நன்றி.
ஹெப்சிபா, உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.என்னுடைய பின்னூட்டம் உங்களை சீண்டிவிட விளையாட்டாக எழுதினது.தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்.
தப்பாகவா? உங்களையா? ஒருபோதும் இல்லை. சரி ஒரு விளக்கமும் இருக்கட்டுமே என்று தான் பின் குறிப்பு. :)
எனக்கு மட்டும் ஒரு ஏஞ்சலும் கடிதம் எழுத மாட்டேங்குது!!!!!
கருத்துரையிடுக