அன்பான விசாரிப்பு

4 comments

அன்புள்ள உங்களுக்கு அன்புடன் NRIGirl எழுதுகிறேன்,

நீங்க எப்ப இந்த தளத்திற்கு வந்தாலும் ஒரு புது கடிதமாவது இருக்கணும் உங்களுக்காக என்பது என் விருப்பம். அதனால் தான் மீண்டும் எழுதுகிறேன். நல்லா இருக்கீங்களா?

எனக்கு எப்போ கடைசியா கடிதம் வந்தது என்று யோசித்துப்பார்த்தேன். ரொம்ப நாளாச்சி.

ஆனா பாருங்க, அன்னிக்கு மார்ச் 1-ஆம் தேதி காலண்டரை புது பக்கத்துக்கு திருப்பும்போது கீழே ஒரு தாள் விழுந்தது. என்னன்னு பார்த்தா ஒரு அழகான கடிதம் - அந்த காலண்டரை எங்களுக்கு அனுப்பி வைத்த குடும்ப நண்பரிடம் இருந்து - புதுவருட வாழ்த்து சொல்லி எழுதியிருந்தாங்க.

எதிர்பாரா நேரத்தில் கிடைத்ததாலோ, அல்லது நிறைய வருடம் கழித்து கைப்பட எழுதின ஒரு கடிதத்தை பார்த்ததாலோ ரொம்ப சந்தோஷமா இருந்தது. மார்ச் முடித்து ஏப்ரல் வந்தாச்சு, இன்னும் நான் அவங்களுக்கு பதில் எழுதல - அது வேற விஷயம்.

நம்ம ஒருத்தங்களுக்கு என்ன தான் செய்யமுடியும்? எத்தனை ரூவா கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் அன்பான விசாரிப்பில் கிடைக்கும் என்கிறது என்னோட அபிப்பிராயம். சிலருக்கு இப்படி அன்பை வெளிப்படுத்துவதில் ஒரு வெட்கம் போல. அவங்க உண்மையிலேயே ரொம்ப சந்தோஷத்தை அதன் மூலம் இழக்கிறாங்க.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு friend-க்கு ஒரு புது உடை கொடுத்தேன் - எனக்கு அது சிறியதாயிருந்ததாலும், பிள்ளைகள் அதை போட மறுத்ததாலும். இன்னிக்கு அந்த friend-டோட அம்மாவை பார்த்தேன். அவங்க கண்ணீர் மல்க எனக்கு நன்றி சொன்னாங்க. அவங்க சொன்னாங்க, "நானும் இந்த அமெரிக்கா வந்து பத்து இருபது வருஷம் ஆகுதம்மா. எனக்கு இருப்பதும் ஒரே மகா. என் கணவரும் இல்ல. மகளையும் கட்டி குடுத்து அப்புறம் நானும் இங்கேயே வந்துட்டேன்-மா. இது வரை ஒருத்தராவது எனக்கோ என் பிள்ளைக்கோ ஒரு பொருள் தந்தது கிடையாது-மா. நீ தான் தந்திருக்கே.", என்று.

ஒண்ணுமே எதிர்பார்க்காமல் ஒரு சின்ன பொருள் ஒருத்தங்களுக்கு குடுத்து பாருங்க, அந்த சந்தோஷமே தனி தான்.

உங்களை வளர்த்து இன்று ஆளாக்கிவிட்டிருக்கிற உங்க பெற்றோருக்கோ, நீங்க அப்பளம் கேட்டவுடன் பொரித்து தந்த உங்க சித்திக்கோ, இளநீர் வெட்டித்தந்த மாமாக்கோ, மல்லிகப்பூ கொஞ்சம் வைத்துவிட்ட பக்கத்துவீட்டு aunty-க்கோ முடிந்தால் ஒரு கடிதம், குறைந்த பட்சம் ஒரு phone call போட்டு பாருங்க, அவங்க அவ்ளோ சந்தோஷப்படுவாங்க. அதுக்கு மேல நீங்க சந்தோஷப்படுவீங்க. 

எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதவா? ஆச்சரியமாயிருக்கே! சரி, நானும் அப்படியே அந்த கலண்டர் அணுப்பித்தந்த அந்த Uncle-க்கு இப்பவே ஒரு பதில் எழுதிடுறேன்...

என்றும் அன்புடன்,

~NRIGirl

Dear Karen, Who are you?

5 comments

Dear Karen, How are you?
Dear Karen, Who are you? I mean... How are you?
Dear Karen,
Hi Karen!
Hello Karen!
Karen!

அன்புள்ள Karen அறிய, அன்புடன் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்...

நானும் உங்களுக்கு எத்தனையோ முறை கடிதம் எழுத ஆரம்பிப்பதும், ஒரு வரி எழுதியவுடன் அடுத்து என்ன எழுத என்று திகைப்பதுமாக கடந்த இரண்டு வாரங்களை ஒட்டி விட்டேன். இன்று எப்படியும் எழுதி விடுவது என்று ஒரு தீர்மானத்துடன் தான் இப்போது அமர்ந்திருக்கிறேன்.

கடிதம் எனக்கு சரளமாகவே வரும், ஏனென்றால் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதிவிடுவேன். மனதில் வைத்து அடிக்கவோ, கிறுக்கவோ முயன்றால் எண்ணங்கள் தடை படும் என்பதால் பொதுவாக அப்படியே எழுதுவது தான் வழக்கம். எழுதிய பிறகு அடிக்கவோ கிறுக்கவோ செய்தால் கடிதத்தின் அழகு கெடும் என்பதால் எழுதியவற்றை அப்படியே விடுவது தான் பழக்கம்.

ஆனால் உங்கள் விஷயத்தில் என்னமோ ஒரு வரிக்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. சரி, ஆங்கிலம் தவிர்த்து தமிழில் முயற்சிக்கலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இதோ இந்த கடிதம்...

எப்படி இருக்கிறீர்கள்? நான் நல்ல சுகம் தான்.

உங்களுக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை. என் பெயர், ஊர், எதுவும் குறிப்பிடக்கூடாது என்பது விளையாட்டின் விதி முறை. அதாவது இந்த கடிதம் உங்களுக்கு யார் எழுதியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு இப்போது தெரியக்கூடாதாம். நானும் அடிக்கடி உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமாம். வருட இறுதியில் Christmas விழாவை ஒட்டி தான் தெரிய வருமாம் யார் வருடம் முழுவதும் நமக்கு கடிதம் எழுதி நம்மை உற்சாகபடுத்தினார்கள் என்று. இது நம் ஆலயத்தில் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டு - உங்களுக்கும் தெரிந்திருக்கும். Secret Angel விளையாட்டு.

கடிதம் எழுதி விளையாட்டா, பரவாயில்லையே என்று நினைத்து நானும் பெயர் கொடுத்திருந்தேன். இப்படி மாட்டிக்கொள்வோம், என்று நினைக்கவில்லை. காரணம், எனக்கும் உங்களை யார் என்று தெரியவில்லை.

ஆலயத்தில் பல காரியங்களில் நான் முன்னுக்கு நிற்பதால் பலரையும் பழக்கம் உண்டு. ஆனால் உங்களை இது வரை சந்தித்ததாக நினைவில்லை. ஒரு வேளை நீங்கள் புதிதாக வருபவராயிருக்கும். அல்லது ஆராதனை முடிந்தவுடன் யாரையும் பார்க்க நிற்காமல் ஓடுபவராயிருக்கும். எப்படியும் இப்போது வசமாக என்னிடம் மாட்டிக்கொண்டீர்கள்.

சரி சொல்லுங்கள், கொஞ்சம் உங்களைப்பற்றி. உங்கள் பெயர் நான் அறிந்ததே. Karen Moher. நீங்கள் எத்தனை வருடங்களாக இங்கு ஆராதனையில் கலந்து கொள்கிறீர்கள்? குடும்பம்? பிள்ளைகள்?...

புரிகிறது எனக்கு உங்கள் தயக்கம். தெரியாத ஒருவரிடம் எப்படி நம்மளைப்பற்றி சொல்ல முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள். நல்ல கேள்வி தான்.

அதனால் நான் முதலில் என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன். என் பெயர்... ஐயோ அதை நான் சொல்லக்கூடாதே! மன்னிக்கவும். நான் வசிப்பது... ஐயையோ அதையும் நான் சொல்லக்கூடாதே. மீண்டும் மன்னிக்கவும்.  

ரொம்ப கஷ்டம் தான் இந்த விளையாட்டு! அப்ப இப்ப என்னதான் செய்யலாம்?

ஒன்று செய்யலாம், இந்த கடிதத்தை இத்துடன் முடிக்கலாம். அடுத்த கடிதத்தை எங்கே ஆரம்பிக்க, எங்கே முடிக்க என்று இப்போதிருந்தே யோசிக்கலாம்... என்ன சொல்றீங்க? 

முடிப்பதற்குள், உங்களை உற்சாகப்படுத்த ஒரு வேத வசனம் இதோ: 

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடை விடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. I தெசலோனிக்கேயர் 5:16-18

அன்புடன்,
~NRIGirl 

வாசகர் கவனத்திற்கு:
மேலுள்ள இந்த கடிதம், உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம்.
Karen-க்கு நான் கைப்பட கடிதம் எழுதி அவர்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். Karen ஒரு அமெரிக்க பெண்மணி. அதனால் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். 
இந்த கடிதம், என் பிரச்சனையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும், உங்களுக்கும் ஒரு hello சொல்லவும், அமெரிக்க வாழ்க்கை-யின் ஒரு பகுதியை உங்களுக்கு எடுத்துரைக்கவுமே.

வசந்த கால வாழ்த்துக்கள்

6 comments

அன்புள்ள உங்களுக்கு, வசந்த கால வாழ்த்துதல் சொல்லி NRIGirl எழுதும் கடிதம்...
வடக்கு துருவ பகுதிகளில் வசந்த காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது; சரியாக இன்று பிற்பகல் 12:47 மணியிலிருந்து.

வசந்த காலத்திற்கான மற்ற அறிகுறிகள் ஏதும் இன்னும் தென்படவில்லை. குளிர் இன்னும் விட்டபாடில்லை. பூக்கள் ஏதும் மலரவும் இல்லை. 

Robin-பறவைகளோ, சிட்டுக்குருவிகளோ, அண்ணங்களோ, அணில்களோ, முயல் குட்டிகளோ, மான்களோ, கரடிகளோ ஏதும் இன்னும் விழித்து வரவில்லை. (நாங்கள் வசிக்கும் பகுதியில் இவை எல்லாம் சகஜம்). 

ஆனால் ஒரு நாளும் இல்லாத திருநாளாய் நேற்று ஒரு raccoon வந்தது. பிள்ளைகள் சமையல் அறையில் அமர்ந்து பாடம் எழுதிக்கொண்டிருக்க, வெளியே ஒரு அனக்கம். யார் என்று பார்த்தால், நம்ம raccoon தான். 

இதற்கு முந்தி அதை நேரில் பார்த்தது கிடையாது. இருந்தாலும் சின்ன பிள்ளைகளில் இருந்தே நாம் அதை புஸ்தகங்களில் படங்களில் பார்த்திருந்ததால் அது "நம்ம raccoon" தான் என சட்டென அறிய முடிந்தது. பிள்ளைகளுக்கு முதலில் சந்தோஷம் - ஒரு அரிய பிராணியை பார்த்ததில். 

பிறகு பயம். கேள்விக்கு மேல் கேள்வி. Raccoon நல்லதா, கெட்டதா, கடிக்குமா, பிரண்டுமா, நம்மள பார்த்து பயப்படுமா, பாயுமா, வேற என்ன பண்ணும், என்ன தான் சாப்பிடும், ஏன் நம்ம வீட்டுக்கு வந்தது? அதற்கு என்ன தான் வேண்டும்? வேலி எங்காவது உடைந்திருக்கா? அது வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்? என்று பல கேள்விகள். இவர்கள் கேள்விகளுக்கு யாரால் தான் பதில் சொல்லி முடியும். யாருக்குத்தான் பதில் தெரியும். நீங்களே தேடி கண்டுபிடியுங்கள், எங்களுக்கும் சொல்லுங்கள் என்று சொல்லித் தப்பித்தோம்.


இப்படித்தான் ஒரு முறை இந்தியாவில் முதல் முறையாக பல்லியை பார்த்துவிட்டார்கள். நாங்கள் உறங்கி விட்டோம். கேட்டார்களே கேள்வி. பேசினார்களே பேச்சு. நமக்கு போதும் போதும் என்றாகியிருக்கும். ஆனால் அம்மா ரொம்ப பாராட்டினார்கள். பரவாயில்லை உன் பிள்ளைகள், கெட்டிக்கார பிள்ளைகள் என்று ரொம்பவும் மெச்சிக்கொண்டார்கள். முடிந்த வரை பதிலும் சொன்னார்கள், தூக்கத்தை விட்டு, அவர்கள் கேள்விகளுக்கு.

சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உற்சாகாமாய்? சந்தோஷமாய்? நல்லது, அப்படித்தான் இருக்க வேண்டும். கவலைப்பட்டு என்னதான் சாதிக்கப்போகிறோம்? சந்தோஷமாய், உற்சாகாமாய்த்தான் முயற்சி பண்ணுவோமே. 

உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற, சுக பெலன் நன்கு அமைய, மற்றும் இந்த வசந்த காலம் மிகவும் வசந்தகரமாய் இருக்க வாழ்த்துக்கள். 

என்றும் அன்புடன்,

~ NRIGirl

அவசர அவசரமாய்...

6 comments

அவசர அவசரமாய் எழுதுகிறேன், அதனால் விசாரிப்பதற்க்கு நேரமில்லை; மன்னிக்கவும். சரி பரவாயில்லை சொல்லுங்கள், எப்படி இருக்கிறீர்கள்? நானும் தான்.

போன வாரம் நாங்கள் கடிகார முள்ளை ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது போன சனிக்கிழமை இரவு பண்னிரெண்டு மணியான போது, எங்கள் புது நேரப்படி அது காலை ஒரு மணி ஆகிவிட்டது. ஆக எங்களுக்கு ஒரு மணி நேரம் குறைந்து விட்டது அன்று. இதைத்தான் Spring Forward என்று கூறுகிறோம். அதேனென்றால் சூரியன் வசந்த காலத்தில் சீக்கிரமாக எழும்பி விடுவது தான். அது எழும்புவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் எழுப்பிவிடுகிறது. சூரியன் அடையவும் நேரம் ஆகிறது. வசந்த காலம் இந்த மாதம் 20ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

இனி இலையுதிர் காலத்தில் கடிகார முள்ளை ஒரு மணி நேரம் பின்னாடி மாற்றி வைத்துக்கொள்வோம். இதை Fall Backward என்று கூறுகிறோம். இருக்கட்டும்.

அங்கு உங்கள் உலகில் என்ன விசேஷங்கள்? சரி உலகை விடுங்கள், உங்கள் வீட்டில் என்ன விசேஷம்? சூரியன் எப்படி இருக்கிறது? சந்திரன்? நட்சத்திரம்? நிறைய தெரிகிறதா?

பிள்ளைகள் சிறிதாக இருக்கும்போது நானும் பிள்ளைகளும் மாலை மயங்கும் சமையத்தில், வானத்தை பார்த்தபடி படுத்துக்கொள்வோம் - வீட்டின் பின் புறம் உள்ள சிறிய அமைப்பில். அன்று இரவு யார் முதல் நட்சத்திரத்தை பார்க்கிறார்கள் என்பது தான் எங்களுக்குள் போட்டி. முதல் நட்சத்திரம் தெரிந்த சில நொடிகளில் வானம் முழுவதும் நட்சத்திரங்கள் நிறைந்து விடும். அப்படியே நம் மனசெல்லாம் நிறைந்து விடும் - சந்தோஷத்தினால். இப்போது நட்சத்திரங்களை எதிர் பார்க்கவோ, வந்தவற்றை வரவேற்கவோ சமயம் ஒதுக்கி பல நாட்களாகிறது. முடிந்தால் சந்திரனை ரசித்துக்கொள்வோம். சிறிது மேகங்களையும். அவ்வளவு தான்.

இந்த வருடம், இந்த மாதிரி விஷயங்களுக்கு சமயம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பார்ப்போம். உலகம் தான் எவ்வளவு அழகு! அதை அனுபவிக்காமல் இருப்பது தான் எத்தனை அக்கிரமம். நாம் உலகை ரசிக்க நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் கட்டாயமாய். கஷ்டம் தான், வீடியோ கேம் (video game) பிடிகளில் இருந்து அவர்களை விலக்கி, விண்ணைப்பார், உலகைப்பார், என்று காட்டுவது ஒரு போராட்டம் தான். அப்படியே பார்த்தாலும், வேண்டா வெறுப்பாய், "ஆமா அதற்கென்ன இப்போ?" என்று சொல்பவர்களிடம் என்ன தான் பதில் சொல்ல முடியும்? ஆனாலும், நம் பிள்ளைகளல்லவா, அதனால் மீண்டும் முயற்சித்தான் செய்ய வேண்டும். 

நீங்கள் வானத்தை சமீப காலத்தில் பார்த்தீர்களா? அதில் ஒரு மூன்று நட்சத்திரம் ஒரு வரிசையில் இருக்கும் - பார்த்திருக்கிறீர்களா? பல வருடங்களுக்கு முன், நானும் என் இரண்டு தோழிகளும், ஒரு சபதம் செய்தோம் - எப்பவெல்லாம் அந்த நட்சத்திரங்களை பார்ப்போமோ, அப்பவெல்லாம் நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக்கொள்வோம் என்று. இந்த சபதத்தை வேறு இரண்டு நண்பர்களுடன் கூற, அவர்கள், 'நல்லது. நாமும் அப்படியே செய்வோம்' என்றார்கள். அந்த நட்சத்திரங்களைப் பார்த்து தான் எவ்வளவு காலம் ஆகிறது. அந்த தோழிகளின் நினைவும் அவ்வளவு தான்.

நிலாவைத்தான் எடுத்துக்கொள்ளுங்கள் - எத்தனை நினைவுகளை தூண்டிவிடுகிறது. பப்பா, அம்மா, அக்கா, தம்பி-யுடன் மொட்டை மாடியில் இருந்து வறுத்த கடலையை உரித்து சாப்பிட்டது கட்டாயம் நினைவில் வருகிறது. மெரினா பீச்சில், திகட்ட திகட்ட சிரித்து விட்டு, தோழி நிம்மி வாங்கித்தந்த மல்லிகைப் பூவையும் வைத்துக் கொண்டு, பார்த்த நிலா நினைவில் உண்டு. "கீறி எறிந்த நகத்தைப் போன்ற நிலா" என்று தமிழ் ஆசிரியை விளக்கின கவி நினைவில் உண்டு. Jim Carrey ஒரு படத்தில், நிலாவை பக்கத்தில் இழுத்து வைத்துக்கொள்ளும் காட்சி வந்து போகிறது. இன்னும் எத்தனையோ.

நம் பிள்ளைகளுக்கும் இந்த அனுபவங்கள் வேண்டும் என்கிறது என் மனது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

"ஏதோ அவசரம் என்று சொன்னாயே", என்று யாரோ கேட்பது என் காதில் விழுகிறது. நினைவூட்டினதற்கு மிக்க நன்றி. அவசரம் தான். ஏனென்று கேட்போருக்காய் சொல்லுகிறேன், "வார இறுதி முடிவதற்குள் கொஞ்சம் ஒய்வெடுத்திட வேண்டும்", என்று ஒரு ஆதங்கம். அதனால் தான் அவசரம்.

அதனால், மன்னிக்கவும்,

அவசரமாய் முடிக்...

~ NRIGirl


கடிகார முள்

1 comments

அன்புள்ள உங்களுக்கு, அன்புடன் நான் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்,

Philadelphia-விலிருந்து உங்களுக்கு வாழ்த்துக்கள். என் வேலை விஷயமாக வருடம் ஒரு முறை எல்லா கிளை அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. ஆகவே இன்று Philadelphia-வில் இருக்கிறேன். இன்றும் நாளை-யும் வேலை இருக்கிறது. முடித்து விட்டு நாளை இரவு வீடு திரும்புகிறேன்.  Philadelphia வீட்டிலிருந்து 2 1/2 மணி நேர பிரயாண தூரம்.

மணி இப்போது இரவு 10:10 ஆகிறது. கடிகாரம் அட்வர்டைஸ்மென்ட் மாதிரி. நீங்க நோட் பண்ணியிருக்கீங்களா - எல்லா வகை கடிகாரமும் அட்வர்‌டைஸ் (advertise-க்கு தமிழ் தெரியவில்லை, மன்னிக்கவும்) பண்ணும்போது, முள் 10:10 மணி காட்டுற மாதிரி தான் வச்சிருப்பாங்க. இது வரை அதை கவனிக்காதவங்க, இனி மேல் கவனிச்சு பாருங்க. அதற்கான காரணம் தெரிந்தவங்க கொஞ்சம் எனக்கும் சொல்லுங்க.

இவ்வளவும் எழுதி முடிப்பதற்குள் மணி 10:17 ஆகி விட்டது... 

இன்று சாயங்காலம் இங்கு நல்ல மழை. கையில் குடை இல்லாததால் கொஞ்சம் மழை வெறிக்கத் தான் கிளம்பினேன். வந்து சேர்ந்து, ரூம் ஸர்விஸ் ஆர்டெர் பண்ணி சாப்பிட்டிருக்கிறேன். அவ்வளவு தான். வீட்டில் என்றால் இதற்குள் எத்தனையோ வேலைகள் முடித்திருப்பேன். 

பொதுவாக வீட்டிலிருக்கும்போது எப்போதும் வேலை இருக்கும். நான் யோசிப்பேன், தனி ஆளாய் இருப்பவர்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்று. நான் இப்படி பிரயாணம் பண்ணும்போது தான் தெரிகிறது, தனியாக இருப்பவர்களுக்கும் நேரம் அரிது தான் என. 

அது போலத்தான் காலை-யில் எழும்புவதும், தினமும் 5 மணிக்கு எழும்பி கிளம்பி 7 மணிக்கு NewYork-ல் வேலை-இல் இருப்பேன். இப்படி வருகிற நாட்களில் 7 மணிக்கு எழும்பி கிளம்பி 9 மணிக்கு வேலை ஆரம்பிக்கவே சரியாகத்தான் இருக்கும்.

மாயை மாயை எல்லாம் மாயை என்று இதைத்தான் சொன்னார்கள் போலும்... 

சரி, மணி கன்னாபின்னா என்று ஓடுகிறது. அதனால் முடிக்கிறேன். 

 என்றும் அன்புடன்,

 ~NRIGirl 
நேரம்: இரவு 10:43 மணி. 

பின் குறிப்பு: தமிழில் எழுதி ஆண்டுகள் பல ஆனதால் கொஞ்சம் யோசித்து தான் எழுத முடிகிறது. உதாரணமாக, பிரயாணமா அல்லது பிரயானமா என்று யோசிக்கவே ஒரு 5 நிமிடம் ஆகியிருக்கும். பிடி கிடைக்காத பட்சத்தில் அதற்கு மாறாக வேறொரு வார்த்தை யோசித்தால் அதுவும் பிடி கிடைக்க வில்லை. எப்படியும் 'ண'-வை தீர்மானித்தேன். தயவு செய்து எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன்.  நன்றி!

அது ஒரு கனா காலம்

10 comments

பண்புள்ள உங்களுக்கு (எங்கே பார்க்கிறீர்கள்? உங்களைத்தான் சொல்லுகிறேன்) பண்புடன் NRIGirl (யாரைத் தேடுகிறீர்கள்? என்னைத்தான் சொல்லுகிறேன்) எழுதிக்கொள்ளும் கடிதம்... 

உங்களி்ல் பலரும் என்னுடைய இந்த கொஞ்சம் உங்களோடு வலை தளத்திற்கு அமோக வரவேற்பை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் உற்சாகம் தனிவதற்குள் இன்னும் கொஞ்சம் உங்களோடு...

அது ஒரு கனா காலம்...

அன்பான கணவர் வேண்டும். மீசை கட்டாயம் வேண்டும். அழகான பிள்ளைகள் வேண்டும். ஆங்கிலம் தான் பேச வேண்டும்.

தோழிகள் அண்ணிகள் ஆக வேண்டும். நானும் அண்ணியாய் இருக்க வேண்டும்..

நல்ல ஒரு வீடு வேண்டும். மலையின் மேல் இருக்க வேண்டும். கடலும் பக்கத்தில் வேண்டும். பச்சைப் புல்வெளிகள் வேண்டும். சுற்றிலும் வேலியும் வேண்டும். அதுவும் வெள்ளையாய் இருக்க வேண்டும்.

இதோ இது நிகழ் காலம்...

அன்பு நிறைந்த நல் வாழ்க்கைக்கு என்றும் நன்றி சொல்ல வேண்டும்.
கணவர், பிள்ளைகள் சுகம் தான் வேண்டும். தமிழ் பேசத் தெரிய வேண்டும்.

அண்ணிகள் தோழிகள் ஆக வேண்டும்.. நானும் தோழியாய் இருக்க வேண்டும்.

வீட்டில் அம்மா உடன் வேண்டும். அக்கா தம்பி அருகில் வேண்டும். புல்லும் வெளியும் வேலியும் எல்லாம்
இறைவன் அமைத்து தந்தது போதும். நிறைந்த மனம் ஒன்றே வேண்டும். அதுவும் வெள்ளையாய் இருக்க வேண்டும்.

என்ன என்னை அப்படி பார்க்கிறீர்கள்? உளரவில்லை உண்மையாய்.

வேண்டும் வேண்டும் இதுவும் வேண்டும். இன்னும் கொஞ்சம் எனக்கு வேண்டும்.

இப்போ நிறுத்தியே ஆக வேண்டும்?

சரி, சரி...

என்றும் அன்புடன் பண்புடன், (அப்படித்தானே ஆரம்பித்தோம்? மறந்து விட்டீர்களா அதற்குள்?)

~ NRIGirl

பயண அனுபவம்

8 comments

அன்புள்ள உங்களுக்கு அன்புடன் NRIGirl மீண்டும் எழுதிக்கொள்ளும் கடிதம்...

என்னவென்று தெரியவில்லை, இந்த வலை தளத்தை ஆரம்பித்த இந்த இரண்டு தினங்களில் மனதில் அப்படி ஒரு சந்தோஷம். வலை தளம் எனக்கு புதிதல்ல. சில வருடங்களாக NRIGirl மற்றும் Coffee with Jesus என்ற தலைப்புகளில் எழுதிக்கொண்டு தான் வருகிறேன். ஆனால் தமிழில் எழுதுவது எனக்கு புதிது. அதனால்தானோ என்னவோ எப்போதும் இல்லாத சந்தோஷம் இப்போது இந்த வலை தளம் மூலம் உணர்கிறேன்.  
இருக்கட்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 

உங்கள் வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி/கணவர், மக்கள் மற்றும் நீங்கள் சுகமா? ஏன் கேட்கிறேன் என்றால், எல்லோரும் நல்லாயிருந்தாதானே நாமும் நல்லா இருக்க முடியும். எங்கள் வீட்டில், யாவரும் சுகம். அதனால் நானும் சுகம். 

சரி, விசாரிப்புகள் முடிந்த பட்சத்தில் விசயத்திற்கு வருவோம். நேற்று நடந்த ஒரு சுவாகசிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தினமும் ந்யூ யார்க் நகருக்கு பேருந்தில் வேலைக்கு சென்றுவருகிறேன். தினமும் செல்வதால் மொத்தமாக டிக்கெட் வாங்கி வைத்திருப்பது வழக்கம். புதிதாக வருபவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு $12 பணம் கொடுத்தால் ஓட்டுனர் அவர்களை ஏற்றிக்கொள்வார். 

பேருந்துக்கு காத்திருக்கும்போது வரிசையில் நிற்கவேண்டும். பேருந்து வந்த உடன் வரிசை பிரகாரம் ஏற வேண்டும். நேற்று ஒரு பெண் வரிசையில் எனக்கு முன் நின்றாள். அவள் முறை வந்த போது, கொஞ்சம் பதட்டமாக, ஒதுங்கி நின்றுகொண்டாள். நான் ஏறி முதல் வரிசை இன்னும் காலியாக இருந்ததால் அதில் அமர்ந்துகொண்டேன். வரிசையில் நின்ற ஒவ்வொருவரும் எறிக்கொண்டிருந்தார்கள். அந்த பெண் பாவமாய் ஓரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டிருந்தாள்.

அனைவரும் எறிய பிறகு மெதுவாய் வந்து ஓட்டுனரிடம், டிக்கெட்டின் விலை விசாரித்தாள். அவர் $12 என கூறினார். அப்பொழுது அவள், என்னிடம் cash இல்லை, க்ரெடிட் கார்ட் மூலம் பணம் வாங்கிக்கொள்வீர்களா என்று விசாரித்தாள். ஓட்டுனர், "மன்னிக்கவும்; க்ரெடிட் கார்ட் வசதி இல்லை" என்று மறுத்தார். அவள் மீண்டுமாக தன் கைப்பையில் துளாவினாள். பிறகு ஏக்கமாக, "என்னிடம் $7 தான் உள்ளது" என்று கூறி நின்றாள். ஓட்டுனர் கை விரித்துவிட்டார். அவளும் அங்கிருந்து நகல ஆரம்பித்தாள்.

பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பொறுக்கவில்லை மனது.

"நான் உனக்கு ஒரு டிக்கெட் தருகிறேன்", என்று சொன்னேன். காலை நேரத்தில் சத்தம் மெதுவாகத்தான் வந்தது; அவளுக்கு நான் சொன்னது கேட்கவில்லை. ஓட்டுனர் அவளுக்கு அதை உரக்க
டுத்துரைத்தார். அவள் நன்றியோடு என்னை பார்த்தாள். நான் ஒரு டிக்கெட்டை எடுத்து ஓட்டுனரிடம் கொடுக்க, அவளும் எறிக்கொள்ள வண்டி பறந்தது ந்யூ யார்க் நகர் நோக்கி.

அவள் பல முறை நன்றி சொல்லிக்கொண்டாள். அக்கம் பக்கத்தில் அமர்ந்தவர்களெல்லாம் என்னை பெரிதும் பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள். "இப்படி ஒரு செயலை பார்த்தது கிடையாது; உனக்கு என்ன ஒரு பெருந்தன்மை", என்று பலதும் சொன்னார்கள். எனக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. எப்படியும் ஒருவருக்கு உதவ முடிந்ததில்
சிறு சந்தோஷம்.

பேருந்து கொஞ்சம் தூரம் சென்றதும் அவள் உற்சாகமாய் என்னிடம் வந்தாள், ஒரு $20 தாளை கையில் வைத்திருந்தாள். "தேடி கண்டுபிடித்துவிட்டேன்; என்னிடம் பணம் இருக்கிறது இப்போது; தயவு செய்து வாங்கிக்கொள்ளுங்கள்", என்று சந்தோஷமாக நீட்டினாள். நானும் பெற்றுக்கொண்டு சில்லறையை கொடுத்தேன்.

ஆக மொத்தத்தில், நேற்றைய பயண அனுபவம், பலர் மனதிலும் கொஞ்ச நாள் நினைவில் நிற்கும்படி அமைந்தது.  

பயணம் ஒரு தொடர்கதை அல்லவா? தொடரட்டும் உங்கள் பயண அனுபவங்கள். தொடருகிறேன் நானும்.
என்றும் அன்புடன்,
~ NRIGirl

அறிமுகம்...

4 comments

அன்புள்ள உங்களுக்கு அன்புடன் NRIGirl எழுதிக்கொள்ளும் கடிதம்...

நலம். நலம் அறிய ஆவல்.

கொஞ்சம் உங்களோடு மூலம் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். கடிதம் எழுதுவது பெரும்பாலும் மறைந்து வருகிற இந்த காலத்தில், கடிதம் மூலமாகவே உங்களை தொடர்பு கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். நீண்ட நாட்களாக விரும்பியும் இப்பொழுதுதான் வசதி வாய்த்திருக்கிறது.

சிறுவயது முதலே கடிதம் எழுதுவது என் பொழுது போக்கு. பாட்டி அம்மாவுக்கு கடிதம், பப்பாவுக்கு கடிதம், நண்பர்களுக்கு கடிதம், உறவினருக்கு கடிதம், பேனா நண்பர்களுக்கு கடிதம், என அடிக்கடி கடிதம் எழுதுவதுண்டு. சமீபகாலத்தில் தான் எப்போதோ எங்கேயோ அந்த பழக்கத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். அதை மீண்டும் தேடி கண்டெடுத்ததில் சந்தோஷம்.

அதெல்லாம் சரி, யார் நீ NRIGirl? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

உங்களை மாதிரி அல்லது உங்கள் மனைவி, மகள், மருமகள், தோழி, அம்மா மாதிரி NRIGirl ஒரு சராசரி பெண். தான் உண்டு தன் வேலை உண்டு, தன் குடும்பம் உண்டு என்று முழு மூச்சாக உங்களையும் உங்களை சுற்றியும் இயங்கும் ஒரு சராசரி குடும்ப பெண் போல் தான் NRIGirl.

பிறந்து வளர்ந்தது திருநெல்வேலியில்; பெற்று வளர்ப்பது அமெரிக்காவில். NRI-யாகவும் பெண்ணாகவும் இருப்பதால் எனக்கு நானாகவே வைத்துக்கொண்ட பெயர் தான் NRIGirl.

இங்கேயும் அங்கேயுமாக மனம் தத்தளிக்கத்‌தான் செய்கிறது. ஆனாலும், யோசித்துப்பார்த்தால் அமெரிக்காவுக்கே வராமல் இந்தியாவிலேயே வாழ்க்கை அமைந்திருந்தால் அதை தோல்வியாகவே எண்ணியிருப்பேன், ஏனென்றால் அமெரிக்கா எனது சிறுவயது கணவு. அதனால் மனம் நிறைந்த நன்றியோடு, இறைவன் தந்த இந்த அழகான வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறேன்.

குளிர் தான். வேலை அதிகம் தான். வீட்டையும் அலுவலையும் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும், "தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது", என்கிற வேத வசனம் என்னை உற்சாகப்படுத்துகிறது.

சரி சரி உனக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா? என்று நீங்கள் கேட்டால், தலைக்கு மேலே வேலை இருக்கத்‌தான் செய்கிறது. இருந்தாலும் ஆசை ஆசையாய் ஆரம்பித்திருக்கிறேன் இந்த கடித தளத்தை.

அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம். உங்களுக்கும் சந்தோஷம் தான் என நம்புகிறேன்.

உங்களை அறிமுகம் செய்து ஓரிரு வார்த்தைகள் முடிந்தால் காமெண்ட் (comment) எழுதுங்கள், .கடிதம் விரும்பும் உங்கள் நண்பர்களுடன் இந்த வலை தளத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த கடிதத்தை இப்போதைக்கு முடிக்கிறேன். வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,

~ NRIGirl