அது ஒரு கனா காலம்

பண்புள்ள உங்களுக்கு (எங்கே பார்க்கிறீர்கள்? உங்களைத்தான் சொல்லுகிறேன்) பண்புடன் NRIGirl (யாரைத் தேடுகிறீர்கள்? என்னைத்தான் சொல்லுகிறேன்) எழுதிக்கொள்ளும் கடிதம்... 

உங்களி்ல் பலரும் என்னுடைய இந்த கொஞ்சம் உங்களோடு வலை தளத்திற்கு அமோக வரவேற்பை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. உங்கள் உற்சாகம் தனிவதற்குள் இன்னும் கொஞ்சம் உங்களோடு...

அது ஒரு கனா காலம்...

அன்பான கணவர் வேண்டும். மீசை கட்டாயம் வேண்டும். அழகான பிள்ளைகள் வேண்டும். ஆங்கிலம் தான் பேச வேண்டும்.

தோழிகள் அண்ணிகள் ஆக வேண்டும். நானும் அண்ணியாய் இருக்க வேண்டும்..

நல்ல ஒரு வீடு வேண்டும். மலையின் மேல் இருக்க வேண்டும். கடலும் பக்கத்தில் வேண்டும். பச்சைப் புல்வெளிகள் வேண்டும். சுற்றிலும் வேலியும் வேண்டும். அதுவும் வெள்ளையாய் இருக்க வேண்டும்.

இதோ இது நிகழ் காலம்...

அன்பு நிறைந்த நல் வாழ்க்கைக்கு என்றும் நன்றி சொல்ல வேண்டும்.
கணவர், பிள்ளைகள் சுகம் தான் வேண்டும். தமிழ் பேசத் தெரிய வேண்டும்.

அண்ணிகள் தோழிகள் ஆக வேண்டும்.. நானும் தோழியாய் இருக்க வேண்டும்.

வீட்டில் அம்மா உடன் வேண்டும். அக்கா தம்பி அருகில் வேண்டும். புல்லும் வெளியும் வேலியும் எல்லாம்
இறைவன் அமைத்து தந்தது போதும். நிறைந்த மனம் ஒன்றே வேண்டும். அதுவும் வெள்ளையாய் இருக்க வேண்டும்.

என்ன என்னை அப்படி பார்க்கிறீர்கள்? உளரவில்லை உண்மையாய்.

வேண்டும் வேண்டும் இதுவும் வேண்டும். இன்னும் கொஞ்சம் எனக்கு வேண்டும்.

இப்போ நிறுத்தியே ஆக வேண்டும்?

சரி, சரி...

என்றும் அன்புடன் பண்புடன், (அப்படித்தானே ஆரம்பித்தோம்? மறந்து விட்டீர்களா அதற்குள்?)

~ NRIGirl

10 comments: (+add yours?)

NRIGirl சொன்னது…

நன்றி நண்பரே!

KParthasarathi சொன்னது…

இது போதாது உங்கள் வாழ்க்கையில்.இன்னும் நிறைய வேண்டும்
எழுத்தாளியாக நிறைய கதைகளும்,நாவல்களும் கவிதைகளும்
எழுதவேண்டும்.அதற்க்கு அவகாசம் கிடைக்க வேலை அருகாமைலோ அல்லது வீட்டில் இருந்தே சைய்யும் வாய்ப்பு வேண்டும்.குழந்தைகள் தமிழ் நன்றாக பேச உங்கள் முயற்சி வேண்டும். நிறைவேறாத சில உங்கள் கனாக்கள் எல்லாம் நிறைவேற வேண்டும்

NRIGirl சொன்னது…

:)KP!

வே.நடனசபாபதி சொன்னது…

நீங்கள் இதுபோல் இன்னும் எழுதவேண்டும்.பதிவுலகில் ஒரு தனி இடத்தைப் பிடிக்கவேண்டும்.
வாழ்த்துக்கள்!

Paradesi at New York சொன்னது…

நிறைவேறின கனவுகளுக்கு பாராட்டுகள்
இனிமேல் நிறைவேறப்போகும்
கனவுகளுக்கு வாழ்த்துக்கள் .

bkaseem சொன்னது…

“வருக வருக” என, நீங்கள் வரும்போதே, வாசல்வரை வந்து உங்களை வாசலிலேயே எதிர்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும். அந்த நல்வாய்ப்பினை தவறவிட்டேன். ஆயினும், பரவாயில்லை, உங்களுக்கு சிறப்பான வரவேற்பு கண்டிப்பாக கிடைத்திருக்கும் எனும் உறுதியோடு, உங்களின் தமிழ் தளத்திற்கு என் வரவேற்பினையும், வாழ்த்துக்களையும் பதிவு செய்துகொள்கிறேன்.

உங்கள் பதிவுகளை படித்தேன். வியப்புற்றேன். முகஸ்துதி அல்ல. நான் வியப்புற்றது உண்மை. இது முகஸ்துதி அல்ல என்பதை நிரூபிக்க நான் வியப்புற்றதற்கான காரணத்தையும் சொல்கிறேன்.

உங்களது ஆங்கில எழுத்து நடையும், வார்த்தை பிரயோகங்களும், லாவகமும் எனக்கு பரிச்சியமானதே. நீங்கள், தமிழில் ஏதும் எழுதி நான் இதுவரை படித்ததில்லை. இன்று படித்தபோது, உங்கள் ஆங்கில எழுத்தின் சிறப்புகள் தமிழ் பதிவுகளிலும் அப்படியே அமையப்பெற்றிருப்பதைக் கண்டுதான் நான் வியப்புற்றேன். இன்னும் சொல்லப்போனால் “அது ஒரு கனா காலத்தில்”, “அறிமுகத்தில்” எல்லாம் நகைச்சுவை உணர்வு ஒரு பிடி தூக்கலாகவே இருக்கிறது.

“கண்டிப்பாக மீசை வேண்டும்” எனும் வரியைப் படித்தபோது கொஞ்சம் உரக்கவே சிரித்துவிட்டேன். கூடவே, உங்களவரின் அடர்த்தியான மீசையும் நினைவுக்கு வந்தது. அவரை, மீசை இல்லாமல் எப்போதேனும் பார்த்திருக்கிறேனா என்று கூட ஒரு ஐந்து நிமிடம் என் நினைவை கிளறிப்பார்த்தேன்.

உணர்வுகளை சேதாரம் ஆகாமல் வாசகருக்கு சரியாக கடத்துவதில்தானே எழுத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது? இதற்கு உங்களுக்கு இரு மொழிகளுமே வசப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுதான் வியப்புற்றேன்.

பயண அனுபவமும் அருமை. அதில் உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள் நீங்கள் கொடுத்த $12 க்காக மட்டும் அல்ல… அந்த நேரத்தில் உதவ முடிவெடுத்து அதை அப்போதே செயல்படுத்தவும் செய்தீர்கள் அல்லவா அதற்காகத்தான்.

நானாக இருந்தால்… “நாம கொடுக்கலாமா? நாம கொடுக்கப்போக அந்த பெண்மணி வேணாம்னு சொல்லிட்டா அவமானமா போயிடுமே…” என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் பஸ் நியூயார்க்குக்கே போய் சேர்ந்திருக்கும். பிறகு நாளெல்லாம் “சே! பாவம் உதவாமல் போயிட்டோமே” என்று யோசித்து என்னையே நான் நொந்துகொண்டிருந்திருப்பேன்.

ஆக, சட்டென முடிவெடுத்து பட்டென செயல்படுத்திய உங்களுக்கு என் பாராட்டுகள்.

“கண்டிப்பாக மீசை வேண்டும்” எனும் வாக்கியம் எனக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. அனேகமாக, என் அடுத்த கதையின் நாயகி மீசை விரும்பியாக இருப்பாள் என்று நினைக்கிறேன்!

மொத்தத்தில் உங்களின் புதிய வலைதளத்தை மகிழ்ச்சியோடு மீண்டும் வரவேற்கிறேன். அடுத்த பதிவுக்காக இப்போதே காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!

NRIGirl சொன்னது…

நண்பர் Bawa அறிய! தங்கள் கருத்துப் பதிவை மிக்க ஆவலுடன் எதிர் பார்த்தேன். கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றி.

சில் வண்டு பூத்தளத்த்தின் ரீங்காரம் கொஞ்சம் குறைந்திருக்கிறதே என்ன விஷயம்? நிறைய எழுதுங்கள். ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

மனைவி, மகள் சுகமா? நாம் மீண்டும் குடும்பமாய் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா? கொஞ்சம் முயற்சி செய்வோமா?

என்றும் அன்புடன்,

~ Queen

NRIGirl சொன்னது…

@வே.நடனசபாபதி, நன்றி!
@Paradesi Alfy, நன்றி!நன்றி!

yl சொன்னது…

ஒரு ஆசிரியை ஆக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. மிக உயர்ந்த நிலை ஆசிரியையாக 37 வருடங்கள் பணி புரிய எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்தார். எல்லாப் புகழும் தேவனுக்கே உரியது.
கனவுகளுக்கு முடிவில்லை. வயது 67 ஆகிறது. ஆனாலும் கனவுகளோடு தான் இருக்கிறேன். இது வரை விருப்பங்களை நிறைவேற்றின கர்த்தராகிய தேவன் தாமே இன்னமும் உதவி செய்வார் என நம்புகிறேன்.

NRIGirl சொன்னது…

நன்றி அம்மா!