வட்டத்தின் மையம்

வட்டம் வட்டமாய் நம் உலகம்... என்ற பதிவின் தொடர்ச்சி...

வட்டங்களின் விளிம்புகளில்
சுழல்கிறோம் சரி, வட்டத்தின் மையம் தான் என்ன? நானா? நீங்களா?

நல்ல கேள்வி. இரண்டும் இல்லை என்பது தான் சரியான பதில்.

நானும் இல்லை, நீங்களும் இல்லை, வட்டத்தின் மையத்தில்.

ஒவ்வொரு வட்டத்தின் மையமும் வட்ட உறுப்பினர்களின் பொதுவான
கருத்துக்களே. எந்த காரியத்தை அடிப்படையாக கொண்டு அந்த வட்டம் வரையப்பட்டதோ அந்த பொதுவான காரியமே, வட்டத்தின் மையம்.

கல்லூரி வட்டங்களின் மையம் கல்லூரி. சபை வட்டங்களின் மையம் இறைவன்.

கல்லூரி மேல் உள்ள பற்று தானே கல்லூரி நண்பர்களை கூடி வர செய்தது? கல்லூரி தானே அவர்கள் வட்டத்திற்கு காரணமாயிருந்தது? கல்லூரி காலங்கள் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த வட்டத்தின் உறுப்பினர்கள் கூடி வரும்போது அதிகம் பேசப்படுவது அந்த கல்லூரி நாட்களே. அவர்கள் உரையாடல்கள் பெரும்பாலும் கல்லூரியும் அதை சுற்றியுமே. கூட படித்தவர்களின் கதைகள், சேர்ந்து திரிந்த நாட்கள், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பற்றியே.

இப்படியாக தெரு முனைகளில் கூடும் நம் அண்டை வீட்டாரின் வட்டம் - அதின் மையம் அந்த தெரு தானே. குப்பை லாரி வந்ததா? நல்ல தண்ணீர் வருகிறதா? அடுத்த வீட்டில் புதிதாக குடிவந்திருப்பவர் எந்த ஊர் காரர்? என்று தெருவை சுற்றியே அவர்கள் பேச்சு.

ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒவ்வொரு மையம்.

ஒவ்வொரு வட்டத்திற்கும் வெவ்வேறு உறுப்பினர்கள்.

அனைத்து வட்டங்களிலும் ஒற்றை பொது அம்சம் நாம் ஒவ்வொருவரும் தான்.

அதனால் தான் நாம் வட்டங்களின் விளிம்புகளில் சுழல்கிறோம்.

நம்முடைய இந்த வட்டங்களே நம் முகவரி. நம் வட்டங்களே நம் அடையாளம். இந்த வட்டங்கள் தானே நம் சந்தோஷம்.

வட்டத்தில் இருந்து மீண்டு புள்ளியாய் நிற்பது கூடாத காரியம். அப்படியே கூடினாலும் நம் முகவரியை தொலைத்திருப்போம். அடையாளத்தை களைந்திருப்போம். சந்தோஷத்தில் குறைந்திருப்போம்.

அதனால் சுழல்வோம் சந்தோஷமாய். நம் வட்டங்களில் உற்சாகமாய். ஓட்டமும் நடையுமாய்.

அப்படியே நானும்,
~ NRIGirl

2 comments: (+add yours?)

KParthasarathi சொன்னது…

வேறு பட்ட பல மைய்யங்களின் பல வட்டங்களில் நாம் சுழன்று கொண்டிருப்பததை அழகாக காண்பித்து உள்ளீர்கள்.கால ஓட்டத்தில் சில வட்டங்களை விட்டு சென்று வேறு வட்டங்களில் உழலுகிறோம்..நம்மை தவிர வேறு எதுவும் நிச்சயம் இல்லை.ஓரளவு நம் குடும்ப வட்டம் தான் தூக்கி நிற்கிறது..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
மனித வாழ்க்கையும் அந்த சுற்று வட்டத்தில்தான் செல்லுகிறது... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தங்களின் பக்கம் என்வருகை தொடரும்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-