வட்டம் வட்டமாய் நம் உலகம்

தனி மரங்கள் இல்லை நாம் தோப்புகள். தீவுகள் இல்லை நாம் தீபகற்பங்கள். வெறும் புள்ளிகள் இல்லை நாம் வட்டங்கள்...

நிற்க தோழி! சென்ற பதிவில் என்னவோ தனிமையே இனிமை என்பது போல் எழுதியிருந்தீர்களே; இன்று முரணாயிருக்கிறதே உங்கள் கருத்து?

நன்றி சகோதரா(ரி)!

நீங்கள் என் பதிவுகளை வாசிக்கிறீர்கள், யோசிக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அது அன்றைய என் மன நிலை. இது என்றுமே நம் அசல் நிலை. மனமும் அசலும் அவ்வப்போது கொஞ்சம் முரண்படுவது சகஜம் தானே?!

நீங்கள் ஆட்சேபிக்காமல் ஆமோதிக்கிறதினால் தொடருகிறேன் என் கருத்தை...

பொதுவாய் தன், தனி, தான் என்று நாம் தனித்தியங்கினாலும், வட்டங்களில் சுழலும் கூட்டு வாசிகள் நாம் என்பதை மறுக்க முடியாது.

சிறு வயது தொடங்கி வயதில் முதிரும் வரை வட்டம் வட்டமாய் நம்மை சுற்றி பல வட்டங்களை வரைந்து கொள்கிறோம் நாம்.

சொந்தங்களின் வட்டம். நட்புகளின் வட்டம்.  பள்ளி பருவத்தில் வரைந்த வட்டம். கல்லூரி நண்பர்களின் வட்டம். வேலை ஸ்தலங்களில் வட்டம். தெருமுனைகளில் வட்டம். விரும்பி நேயர்களின் வட்டம், வலை தல உலகில் வட்டம். தூர தேசத்தில் வட்டம். சமீபத்தில் வட்டம். நெருங்கின வட்டம். சுருங்கின வட்டம்...

நம்மை பெற்றோரின் நண்பர்கள் என்றொரு வட்டம், நாம் பெற்றவர்களின் நண்பர்கள் என்றொரு வட்டம். புதிய வட்டங்கள். பழைய வட்டங்கள். சிறிதாய், பெரிதாய் பல்வேறு வட்டங்கள்.

இந்த வட்டங்கள் அனைத்தும் பொதுவாக நம்மை சுற்றி நாமே வரைந்து கொண்டதாலோ என்னவோ, நம்மை சுற்றியே அவை இயங்குவதாய் நமக்கொரு எண்ணம். ஆனால் நிஜம் என்னவோ, நாம் தான் இந்த வட்டங்களின் விளிம்புகளில் இயங்குகிறோம்.

பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது போலத்தான் நாமும் தன், தனி, தான் என்று நம்மை நாமே சுற்றிக்கொண்டு நம்முடைய வட்டங்களையும் சுற்றி வருகிறோம்.

காலப்போக்கில் நெருங்கின வட்டங்கள் விரிவதும், விரிந்த வட்டங்கள் சுருங்குவதும், தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

விளிம்புகளிலேயே சுற்றிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் நெருங்கி வந்த நட்புகளின் வட்டங்கள் சிறிதாய் இருப்பதால் நம்முடைய சுழற்சியும் அதிகமாய் இருக்கிறது அவர்களை சுற்றி.

விளிம்புகளில் இருந்து அகன்று சென்ற நட்புகள் விரிசலாய் விரிந்து அகலமாய், தூரமாய், வெகு தொலைவில் சென்று விடுவதால், நம்முடைய சுழற்சியும் வெகுவாய் குறைந்து காலப்போக்கில் நின்றே விடுகிறது அவர்களை சுற்றி.

இப்படி நாம் வட்டங்களை வரைந்து கொண்டிருக்க, நம்மை வட்டங்களில் வரைந்து கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள். அவர்கள் வட்டங்களில் நாம் நெருங்கி செல்வதும் அகன்று செல்வதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

ஓட்டமும் நடையுமாய், வட்டங்களின் விரிசல்களை தவிர்க்கத்தான் முயற்சிக்கிறோம். முடியாத போது கை விரித்து நிற்கிறோம்.

அதற்காய் வருந்தி புள்ளியாய் மாறி மறைந்து விடுவதில்லை நாம். நெருங்கின வட்டங்களில் இன்னும் நெருங்கிக்கொள்கிறோம். அது கூடாத பட்சத்தில் புத்தம் புதிதாய் ஒரு வட்டம் வரைகிறோம். நான், நீ, நீங்கள், நாம் என்று...

...

இந்த இடத்தில் நிறுத்தி மேற்கொண்டு எழுதியவற்றை வாசிக்க, "அட! பரவாயில்லயே!" என்றொரு எண்ணம் தோன்ற, ஏதோ என்னை சுற்றி ஒரு ஒளி வட்டம் நானே வரைய தொடங்க, "போதும் இந்த போக்கு!!", என்று நிறுத்தியே ஆகவேண்டிய நிர்பந்தம்...

உங்களில் யாரேனும் இந்த வட்டத்தின் விட்டத்தை விரிவாக்கினால் பெரும் உதவியாயிருக்கும். நான் கொஞ்சம் சிரமம் எடுத்து ஒளி வட்டத்தை கிறுக்க முயற்சிக்கிறேன்...

ஒருவேளை யாரேனும் முன்வராத பட்சத்தில், அடுத்த பதிவில் தெளிந்த சிந்தையுடன் தொடருகிறேன்  மீதமுள்ள என் கருத்தை......

உங்கள் வட்டத்தில் என்றும்,
~ NRIGirl