நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை

ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது படகு. எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம்.

தனிமையாய் நிற்கிறது படகு. நல்லவேளையாய் படகினுள் நாங்கள் குடும்பமாய் இருப்பதினால் சந்தோஷத்திற்கு குறைவில்லை. ஆனாலும் ஒரு உறுத்தல், எங்கே போனார்கள் நம் நண்பர்கள் என்று.

என்னவாயிருக்கும்? நாம் என்ன தான் சொல்லிவிட்டோம் அல்லது செய்துவிட்டோம், அவர்கள் கோபித்துக்கொள்ள? என்று சின்னதாய் ஒரு எண்ணம் இல்லாமல் இல்லை.

ஆற அமர யோசித்துப்பார்த்ததில் மாற்றம் என்னிடம் தான், நண்பர்களிடம் இல்லை, என்பதை புரிந்து கொண்டேன்.

அவர்கள் எப்பொழுதும் போல் தான் இருக்கிறார்கள். அதிகம் கண்டுகொள்ளாமல். பட்டும் படாமல். தொட்டும் தொடாமல்.

நான் தான் மாறியிருக்கிறேன் சமீப காலங்களில். எதிர்பார்ப்பற்று நட்பு கொண்டாடிய நான், இன்று கொஞ்சம் எதிர்பார்க்கத்தொடங்கி விட்டேன், அது தான் மாற்றம்.

சேர்ந்து விளையாட சென்றார்கள் எங்களை கூப்பிடவில்லை, எல்லோரும் கடலுக்கு போனார்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை, என்பதாய் எனக்குத்தான் மனவருத்தங்கள் அவர்களிடம்.

என்னிடம் அவர்கள் கோபித்துக்கொள்ளவில்லை, இல்லவே இல்லை; நான் தான் அவர்களிடம் கோபித்துக்கொண்டிருக்கிறேன், ஒரு துளி அன்பில்லை என்று.

என்னை அவர்கள் ஒதுக்கவில்லை, இல்லவே இல்லை; நானாகவே கொஞ்சம் ஒதுங்கி நிற்கிறேன், போதும் இவர்கள் நட்பு என்று.

இந்த வருத்தங்கள் தீர வேண்டுமானால், என் எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறைய வேண்டும்.

'கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்' என்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன் நான்.

'கொடுங்கள்' என்பது மட்டுமே எனக்கான கட்டளை. 'உங்களுக்கு கொடுக்கப்படும்' என்பது இறைவனின் பொருத்தனை. அதை மக்களிடம், குறிப்பாக நம் நண்பர்களிடம் எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு.

இப்படி தேவையற்ற எதிபார்ப்புகளை கொண்டிருப்பவர்களை பற்றித்தான் வேதத்தில் வாசிக்கிறோம்: "இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து: உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.", என்று. (மத்தேயு 11:16-17)

இப்படியாகத்தானே இருக்கிறது நண்பர்களிடம் நான் கொண்டுள்ள குறைகளும்?

எங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று என்ன கட்டாயம்? கூப்பிட்டால் சந்தோஷம், கூப்பிடாவிட்டால் அதைவிட சந்தோஷம் என்று தானே இருக்க வேண்டும்? தந்தால் நன்றி, தராவிட்டால் மிக்க நன்றி என்ற மன பக்குவம் தானே வேண்டும்?

தேவையில்லா எதிர்பார்ப்புகள் ஏன்? வீண் வருத்தங்கள் ஏன்? வெறும் குறைகள் தான் ஏன்?

நம்மை சுற்றியா அவர்கள் உலகம்? நண்பர்களை சுற்றியா நம் உலகம்? அவ்வளவு சின்னதா நம் உள்ளம்?

பரந்து விரிந்த உலகில் நம் எல்லைகள் ஏன் குறுக வேண்டும்?

ஓரமாய் ஒதுங்கி வேடிக்கை ஏன்? துள்ளலாய் நீந்தி மகிழத்தானே வேண்டும்?

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க...

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும்...

(இதைத்தான் சொல்ல வந்தேன் சில இடுகைகளுக்கு முன், "ஓரம் கட்டின அனுபவங்கள்" என்ற தலைப்பில்.

சொல்லவந்ததை சொல்லாமல் மழுப்பி விட்டதாய் ஒரு நெருடல், அதனால் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்திருக்கிறேன் இந்த பதிவில்...

சொல்லவந்ததை சொல்லிவிட்ட பட்சத்தில், சொல்லாமல் மழுப்பிய என் பழைய பதிவிற்கு இங்கே சொடுக்கவும்: ஓரம் கட்டின அனுபவங்கள்)...

கொஞ்சம் உங்களோடு,

~ NRIGirl