ஓரம் கட்டின அனுபவங்கள்

வெறுமையாய் இருக்கிறது மனது, வெளியில் தெரியும் வானம் போலே. 

எப்பொழுதும் நண்பர்கள் சூழ சிரிப்பும் களிப்பும், கும்மாளமுமாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கை படகு, திடீரென்று தனியாய் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது போல ஒரு எண்ணம். 

தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க... 

இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும். 

அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருள் பிள்ளைகள் கைபட்டு உடைந்து விட்ட போதும், பிள்ளைகள் மனம் உடைந்து விடக்கூடாதே என்பதில் கவனம் திரும்பும். "பரவாயில்லை, போகட்டும்", என்று மனது ஆறுதல் கொள்ளும். 

அழுக்காய் கிடக்கிறது வீடு. "அதற்கென்ன இப்பொழுது. சுத்தம் செய்தால் ஆயிற்று. நம் வீடு. நாம் தானே செய்ய வேண்டும்", என்று மேலும் சமாதனம் செய்யும். 

மடிக்க வேண்டிய துணிகள் பெருகிக் கிடக்க, மனம் ஏனோ இன்று படம் வரைவதில் மும்முரம் காட்டும். 

விடாப்பிடியாய் ஒலிக்கும் தொலை பேசியின் கைபேசியை வீட்டின் மூலைகளில் நிதானமாய் தேடும். 

காலையில் அலாரம் வைக்க மறந்த கணவரை மலர்ந்த முகத்துடன் வாழ்த்தும். அலுவலகத்தில் தாமதத்தை அருமையாய் விளக்கும் - "கொஞ்சம் தூங்கி விட்டேன்", என்று. 

நீண்டு கொண்டே போகும் பிள்ளைகளின் கதைகளில் உண்மை ஆர்வம் காட்டும். 

மலர்ந்து நிற்கும் மல்லிகைப் பூக்களை ஆசையாய் மணக்கும். உதிர்ந்து கிடக்கும் பூக்களை விரல்கள் கேசத்தில் சொருகும்.  

அமைதி நிலவும் புல்லின் வெளியில் கொஞ்சம் தலை சாய்க்கும். 

வெறுமையாய் விரிந்த வானத்தின் அழகை கண்கள் ருசிக்கும். ஒரு திட்டில்லாமல் ஒரே சீராய் அமைந்த ஊதா நிறத்தை நெஞ்சம் ரசிக்கும்.  

எனக்காகவே, என் ஒருத்திக்காகவே தினமும் மாற்றப்படும் இந்த ஆகாய ஓவியத்திற்காய் மனம் நன்றி சொல்லும். இறைவனின் கலைநயத்தை எண்ணி எண்ணி வியக்கும். 

சிரிப்பும், களிப்பும், கும்மாளமும், உல்லாசமும் வெகு விரைவில் மீண்டும் தொடரும். 

அது வரை நெஞ்சம் இளைப்பாறும், கொஞ்சம் உங்களோடு...

2 comments: (+add yours?)

bkaseem சொன்னது…

“அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருள் பிள்ளைகள் கைபட்டு உடைந்து விட்ட போதும், பிள்ளைகள் மனம் உடைந்து விடக்கூடாதே…..” என்பதில் துவங்கி இறுதிவரை ஒரு கவிதைக்கு உண்டான குணாதிசயங்களுடன் மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்தோடுகிறது இந்தப் பதிவு. கடைசியில் “அது வரை நெஞ்சம் இளைப்பாறும், கொஞ்சம் உங்களோடு...” என்று, உங்கள் தளத்தின் பெயரையும் சேர்த்திணைத்து எழுதியது சிறப்பாகிற்று.

கவிதைக்குண்டான குணாதிசயங்கள் என்றேன். அது உண்மை. இந்தப் பதிவினை ஏன் நீங்கள் இன்னும் கொஞ்சம் செதுக்கக்கூடாது? அங்காங்கு ஒருசில ஒழுங்குபடுத்தல் செய்தால் இதற்கு ஒரு கவிதை வடிவம் கிட்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன் முயற்சி செய்யக்கூடாது.

சரி, இனி நம் கல்லூரி நாட்கள் போல நாமிருவரும் கொஞ்சம் சண்டை போடலாமா? சும்மா ஒரு சுவராஸ்யத்திற்காக…,

பதிவு, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், தலைப்புதான் ஒட்டாமல் தனித்து நிற்கின்றார்போல எனக்குத் தோன்றுகிறது. “ஓரம் கட்டின அனுபவங்கள்” என்பது தலைப்பு. ஆனால், பதிவு பேசுவது இந்த அனுபவங்களை அல்லவே?

“தேவை தான் இப்படி ஓரம் கட்டின அனுபவங்கள் நம் வாழ்க்கையில், நிறுத்தி, நிதானமாய் சிந்திக்க... இது போன்ற சமயத்தில் தான் நாம் வளர்ந்துவிட்டிருப்பது தெரியும். நம் எண்ணங்களில் தெளிவு தோன்றும். வார்த்தைகளில் அமைதி நிலவும். “
- என்று இந்த அனுபவத்தால் உண்டாகும் எண்ணங்களின் மாற்றங்களைத்தானே பட்டியல் இடுகிறீர்கள்? ஆகையால் எனக்கு ஏனோ இந்தப் பதிவுக்கு இந்தத் தலைப்பு பொருத்தமாக அமையவில்லை என்றே தோன்றுகிறது.

இன்னொரு இடத்தில்,
“நீண்டு கொண்டே போகும் பிள்ளைகளின் கதைகளில் உண்மை ஆர்வம் காட்டும். “
என்கிறீர்கள்.
- இது கொஞ்சம் குழப்பமாக உள்ளது. நீண்டுகொண்டு போகும் பிள்ளைகளின் கதைகளுக்கு இயந்திரத்தனமாக ‘உம்’ கொட்டாமல், மனம் உண்மையான ஆர்வத்தை காட்டும் என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
ஆக, கண்ணில் விளக்கெண்ணை விட்டுப்பார்த்ததில் இந்த இரண்டு குற்றங்களைத்தான் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த குற்றத்தை கூறியதற்காக நீங்கள் உங்கள் நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!

என் தோழியின் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நான் குறைகூறி இட்டிருக்கும் கருத்தைக்கண்டு சினம் கொண்டு குருதி கொப்பளிக்க ஆளாளுக்கு பொருட்களை எடுத்து வண்டியில் போட்டுக்கொண்டு “உடுறா வண்டிய கனெக்ட்டிக்கெட்டுக்கு…” என்று கர்ஜித்துக்கொண்டு என்னைத்தேடி வந்து தேமே என்று வீதியில் உலவும் என்னை மாறுகால், மாறுகை வாங்கி எனக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்….!

NRIGirl சொன்னது…

நண்பர் Bawa அறிய: மிகச் சரியாக சொன்னீர்கள், தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் தெரியவில்லை என்று. நானும் அதையே தான் நினைத்தேன். ஆனால் எப்படி இணைப்பது என்று தான் தெரியவில்லை. சரி இருக்கட்டும் என்று விட்டு வைத்தேன்.

அதாவது, நான் சொல்ல வந்தது என்னவென்றால், அரக்கப்பரக்க என்றில்லாமல் ஒரு ஆசுவாசமான நாட்கள் தேவை நம் அனைவருக்கும், என்பது தான். ஆனால் தலைப்பும் முன்னுரையும் என்னமோ சொந்த கதை சோக கதை சொல்ல வந்தது போல் அமைந்து விட்டிருக்கிறது. வேறு என்ன தான் தலைப்பு கொடுத்திருக்கலாம் என்று நினைத்து நினைத்து ஓய்ந்து விட்டிருக்கிறேன் இப்பொழுது தான். மீண்டும் கிளறி விட்டிருக்கிறீர்கள், நன்றி. :)

'பிள்ளைகளின் கதைகளில் உண்மையான ஆர்வம் காட்டும்' என்பது தான் என் கருத்து.

அம்மாவும், மற்ற நண்பர்களும் super, duper என்று சொல்வதோடு நிறுத்தி விடும்போது நீங்கள் நேரம் எடுத்து ஊக்குவிப்பதற்காய் நன்றி.

நீங்களும் எழுதுங்களேன்; எத்தனை நாட்களாயிற்று உங்கள் பதிவுகள் பார்த்து. ஒருவேளை கதைகளுக்கு பதிலாய் சொந்த அனுபவங்களை எழுதி பாருங்களேன், ஒன்றென்ன பல காவியம் படைப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.