உயிரே...

2 comments

என் உயிர் தோழி அவள்

நேற்றோ இன்றோ இல்லை
இருபத்திரண்டு வருடங்கள் ஆகிறது
உயிர் உறவில் கலந்து

பார்த்தோம் மகிழ்ந்தோம்
பேசினோம் சிரித்தோம்
என்பதை விட

பார்க்காமலும் மகிழ்ந்தோம்
பேசாமலும் சிரித்தோம்
என்பதே சரி

நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
சில சமயம் மாதங்களும் வருடங்களான
போதிலும்

விட்ட கதை தொடர்ந்தது
நாங்கள் விட்டு வைத்த இடத்தில் இருந்து

உறவில் உரசல்கள் வந்து தான் போனது
ஆனால் உரசலால் விரிசல் ஏதும்
வராமல் உயிர் தடுத்தது.

உயிரும் உறவும் ஒன்றாகி போனபின்
வார்த்தை என்ன சாட்டை என்ன
உரைக்கவில்ல எதுவுமே…

இன்று இதோ,

கொடிய நோய் தாக்கி செயலிழந்து சோர்வுற்று
உறவின் இறுதியில் வந்து நிற்கும்
உயிரே - என் உயிரே
விடை கொடுக்க மறுக்கிறேன்
முற்றிலுமாய் மறுக்கிறேன்.

இந்த நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
மாதங்களும் வருடங்களான
பின்னும்

நாம் விட்ட கதை விட்ட இடம்
நிச்சயமாய் மீண்டும் தொடரும்

விரிசல் இல்லா உரசல்கள்
அவ்வப்போது வந்து போகும்.

நம் உறவும் உயிரும் தொடர்ந்து இன்னும் உறவாடும்...

அது வரையில்,
விடை கொடுக்க மறுக்கிறேன்
முற்றிலுமாய் மறுக்கிறேன்.