சும்மா ஒரு கடிதம்

மணி இப்போது வியாழன் காலை ஏழு மணி நாற்பதொன்று நிமிடம்.

விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை...

வெளியே இன்னும் இருட்டாகத்தான் இருக்கிறது. இருட்டாக என்று சொல்வதைவிட இருட்டிக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.

கொஞ்சம் இருங்கள், ஒரு photo க்ளிக் செய்துவிட்டு வந்து தொடருகிறேன்...

சரி, விஷயத்திற்கு வருகிறேன்...

ம்.. வந்து. அதாவது... விஷயம் ஒன்றும் இல்லை, மன்னிக்கவும்.

சும்மா ஒரு கடிதம் தான் இது. வேலை ஏதும் இல்லாமல் சும்மா அமர்ந்திருப்பதினால் சரி சும்மா ஒரு கடிதமாவது எழுதுவோம் என்று ஆரம்பித்தத்தின் விளைவு...

வார இறுதியில் நடக்க இருக்கும் system upgrade காரணமாக வேலை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. இதுவே வீட்டில் இருந்திருந்தால் எத்தனையோ வேலை செய்திருக்கலாம்.

துவைத்த துணியை காய போட்டிருக்கலாம், காய்ந்த துணியை மடித்திருக்கலாம், மடித்த துணிகளை எடுத்து வைத்திருக்கலாம். ம்ஹூம்.

ஒரு வேளை துணி வேலை செய்ய இஷ்டம் இல்லை என்றால், நல்லதாய் ஒரு சாப்பாடு சமைத்திருக்கலாம். அதையும் விட்டால், கொஞ்சம் தோசை மாவு அரைத்திருக்கலாம், குறைந்த பட்சம் ஊறவாவது போட்டிருக்கலாம் போங்கள்.

ஒன்றும் இல்லாவிட்டால் கொஞ்சம் முறுக்காவது செய்திருக்கலாம். ம்ஹூம்.

சரி அடுப்படி போக இஷ்டம் இல்லை என்றால், ஒதுக்கி வைத்த பொருட்களை எடுத்து ஒரு படம் வரைய ஆரம்பித்திருக்கலாம்.

சரி விடுங்கள். முடியாததை பற்றி யோசித்து என்ன புண்ணியம்.

சென்ற வாரம் church-ல் இருந்து ஒரு women's conference சென்றிருந்தேன். 'What Not To Wear' என்ற தலைப்பில் அருமையாய் நடத்தியிருந்தார்கள். வேண்டா வெறுப்பாய் தான் சென்றிருந்தேன் - ஆனால் நல்ல வேளை miss பண்ணவில்லை என்று எண்ணும்படி இருந்தது.

வேதாகம விளக்கத்தோடு பெண்கள் எப்படி கோபம், பொறாமை, பெருமை, வைராக்கியம், பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற எண்ணங்களை உடுக்கக் கூடாது என்று பேசினார்கள். மிகவும் சிறப்பாக அமைந்தது.

அதில் Group Discussion-க்காக கொடுக்கப்பட்ட ஒரு கேள்வி, "What complicates your life?" (உங்கள் வாழ்க்கையை கடினமாக்குவது எது?) என்பது.

கணவர் என்றும், பிள்ளைகள் என்றும், பணம் என்றும், பதவி என்றும் பல்வேறு கருத்துக்களை பலரும் பரிந்து கொண்டார்கள். பரவாயில்லை அமெரிக்க பெண்களும் நம்மைப் போலவே தான் இருக்கிறார்கள் என்று வியந்து கொண்டேன்.

என் முறை வந்த போது நான் சொன்னேன், "வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது", என்று.

ஐயோ பாவம் என்பது போல் பலரும் பார்த்தார்கள். அது ஒரு சுகவீனம் என்பதாய் ஒருவர் கருத்து கூறினார். அதை நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை. ஒரு வீடு என்றால் அது கட்டாயம் சுத்தமாகத்தானே இருக்க வேண்டும் என்று கேட்டேன். இல்லை என்று மறுக்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆம் என்று சொல்லவும் யாராலும் முடியவில்லை.

ஒரு பாட்டிம்மா சொன்னார்கள், 'ஐயோ நானும் அப்படித்தான் இருந்தேன் ஒரு காலத்தில்", என்று. கடந்த கால வினையில் (past tense-ல்) சொன்னதால், மிகவும் ஆவலுடன், "அப்படியா? பிறகு எப்படி சரியானது?" என்று கேட்டேன். "வேற என்ன, வயதாகி விட்டது, செய்ய முடியவில்லை, அவ்வளவு தான்", என்றார்கள்.

இன்னொரு பாட்டிம்மா, "Life is hard, I tell you" என்று தொடர்ந்தார்கள். "Thank you for your encouraging words", என்று நான் சொல்ல சிரிப்பலை விரிந்து ஓய்ந்தது.

ஆக, என் பிரச்சனைக்கு முடிவில்லை என்பது மட்டும் உறுதி, வயதாவதை தவிர... ம்ஹும்.

வீடும், வீட்டை சுற்றியுமே உலவும் என் சிந்தனைகளை ஒருமைப்படுத்தி, ஓரிடத்தில் அமர வைத்து இன்று வேலை ஒன்றும் இல்லை, சும்மா இரு நாள் முழுதும் என்று சொன்னால் எப்படி இருக்கும், நீங்களே சொல்லுங்கள்.

மணி இப்போது வியாழன் காலை எட்டு மணி இருபத்தாறு நிமிடம்.

வீட்டிற்கு செல்ல மாலை நான்கு மணி ஆகும். வீட்டில் போய் சேர மாலை ஆறு மணி ஆகும். அதுவரை காத்திருக்கும் துணிகளும், தோசை மாவும். பாவம்.

அது வரை சும்மா இருக்கும்,
~NRIGirl

(நண்பர்கள் கவனத்திற்கு: நான் பாவம் என்று சொன்னது என்னைத்தான்; துணிகளை இல்லை...)

P.S: Sorry, மறந்தே போனது... க்ளிக் செய்த photo இதோ... எனக்கொரு சந்தேகம், மழையைத்தான் காட்டுகிறேனா, இல்லை மழையை காட்டுவதாகச் சொல்லி என் குடையை காட்டுகிறேனா என்று. எதுவாயிருந்தாலும் ரசிப்பீர்கள் தானே?



4 comments: (+add yours?)

amma சொன்னது…

if there is no work, can't you leave early? if you had known it earlier, could you stayed at home?
happy to know you had enjoyed the seminar.

NRIGirl சொன்னது…

இல்லை அம்மா; அப்படி முடியாது...

KParthasarathi சொன்னது…

எதை உடுக்க கூடாது என்று படித்தவுடன் ஆடைகளை பற்றி என்று நினைத்தேன்.ஆனால் எந்த குணங்களை அணியக்கூடாது என்று நேர்த்தியாக விவாதித்து இருந்தார்கள்.இது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி பொருந்தும்.

வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள முதல் படி அழுக்காகாமல் வைத்து இருப்பதுதான். கண்டபடி இறைய விடாமல் அது அதற்கு உள்ள இடத்தில் வைத்தால் அதுவே வேலையின் கனத்தை குறைக்கும்.இது குடும்பத்தில் உள்ள அனைவரும் கடை பிடிக்க வேண்டிய சமாசாரம்
படிக்க ரசனையாக இருந்தது

NRIGirl சொன்னது…

"வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள முதல் படி அழுக்காகாமல் வைத்து இருப்பதுதான்."

முக்கியமான கருத்து KP! நன்றி.