கண்ணாடியின் பதில்...

முதன் முறையாக என் கடிதத்திற்கு பதில் வந்திருக்கிறது! முந்தைய post-ல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கண்ணாடியின் பதில் இதோ...

கண்ணாடி உன் முன்னாடி ஒரு கேள்வி...

பின்னாடி கேலி பேசாமல், முன்னாடி கேள்வி கேட்கின்றீர். நன்று! துவங்கட்டும் கேள்விக் கணை!

பலருக்கும் உன் மீது சிநேகம் ஏன்?

தன்னை சிநேகிப்பவரே… என்னை சிநேகிப்பவர்! தன்னையே நிந்திப்பவர் என்னையும் நிந்திக்கத்தான் செய்கிறார்! தன் மீது தான் எப்படியோ அப்படியே என் மீதும் அவர் ஆகிறார்!

உன்னை காண தினம் தவறாதது ஏன்?

காண்பவர் கண்கவர இரகசிய ஆசை உள்ளதாலும்… தன் முகத்தை தான் பார்த்திட தான் கொண்ட கண் உதவாததாலும், கண்ணாடி எனை நாடி தவறாமல் வருகிறார் போலும்! மொத்தத்தில் தன் மீது தனக்குள்ள காதலால், அல்லாது, அவர்க்கு என் மீதுள்ள காதலால் என்று எண்ணிடவேண்டாம்!

நாள்தோறும் உன்னைத்தான்
பார்த்தாலும் தான்
வேகத்தில் உன் சாயல் மறைவது ஏன்?


நேற்று என்பதில் பற்று கூடி, இன்றென்பதன் எதார்த்தம் மறந்து, நாளையென்பதில் கவலை கொள்ளும் மாக்களுக்கே என் சாயல் மறைவதாய் தோன்றுமோ?

நெற்றியின் சுருக்கம் நரைகளின் பெருக்கம்
கண்களில் துழாவும் வயோதிப துவக்கம்
எதுவும் உன்னில் பொலிவது ஏன்?


இன்று… இது… இப்படி இருப்பதுதான் இதற்குப் பெருமை என்பதை சூளுரைக்கத்தானோ என்னமோ?

கேசத்தின் கலைவு நேசத்தின் நிறைவு
பாசத்தின் பதிவு சோகத்தின் சுவடு
எதிலும் நீ மிளிர்வது ஏன்?


பாசத்தை பதிவு செய்கையில், நேசம் நிறைவுறும். காற்று கேசத்தை கலைப்பதுபோல, காலம் வாழ்வின் இன்பத்தை கலைக்கும்போது அங்கே சோகத்தின் சுவடுகள் தோன்றும். நிறைவும், குறைவும் வாழ்வின் பாகம் என்று உணர்த்தத்தான் இவைகளுக்கு மிளிர்கிறேன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டீர்களோ?

அன்பான நீ அறிவுள்ள நீ
கைகோர்த்து குலாவ மறுப்பது ஏன்?
பண்பான நீ பரிவுள்ள நீ
பாசமாய் பொழிய மறப்பது ஏன்?


அதீத நெருக்கம் சிலப்போது அன்பைக் குறைக்கும் என்றறிந்ததாலோ ஏனோ எட்ட நின்று சுட்டிக்காட்டுவதே என் இயல்பென்று ஆகிப்போனது!

நான் பார்க்க நீ பார்க்க
சாய்ந்தாட அசைந்தாட
கை ஓங்க மாறு கை ஓங்க
எப்போதும் எனை நீ
விமர்சனம் ஏன்?


இவை, என் விமர்சனமன்று! ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் சுய விமர்சகர் என் வழி எதிரொளிப்பதாய் இருக்கலாமன்றோ?

கண் மூட நீ மறைய
கண் திறக்க நீ விழிக்க
சிறு பிள்ளை விளையாட்டும்
வேடிக்கையும் இன்னும் ஏன்?


நிலைக்கண்ணாடி என் முழுப்பெயர். ஒரே நிலையில் இருப்பதே என் விதி. இந்நிலையில் என்னால் ஆன விளையாட்டும் வேடிக்கையும் இது மட்டுமே. இருந்திட்டுப் போகட்டுமே!


அகத்தின் அழகை முகங்கள் காட்ட
முகத்தின் அழகை நீயும் பார்க்க
உன் முகம் மட்டும் நீ
மறைப்பது ஏன்?


பன்முகம் காட்டும் பணி எனக்கு. இதில் என் முகம் காட்டி பிணி எதற்கு?

ஒரு கேள்வி நான் கேட்க
மறுமொழி நீ மறுக்க
தொடரும் இந்த அம்புகளை
தவிர்க்காமல் வெறும் சிரிப்பு ஏன்?


ஒன்றா கேட்டீர்கள்? ஒவ்வொன்றாகவன்றோ கேட்டீர்கள்? உங்கள் கேள்வி அம்புகளைத் தவிர்க்கவில்லை. ஏனெனில், அவை வம்பைச் சுமந்து வரவில்லை அன்பையே சுமந்து வந்தது. என்னை “பார்த்து” செல்லும் பல கோடிப்பேரில் என்னைக் “கேட்டுச்” செல்ல ஒருவரேனும் உண்டென்றரிந்து பொங்கிவரும் பெருமைச் சிரிப்பு. உங்கள் கேள்விகள் என் வாழ்வின் சிறப்பு!

இப்படிக்கு,
கண்ணாடி!
நன்றி: நண்பர் Bawa!