சிரிப்புத்தான் வருகிறது எனக்கு

அன்புள்ள நீங்கள் அறிய,

சிரிப்புத்தான் வருகிறது எனக்கு சிரிப்பை நினைத்தால். தனியாக சிரிப்பது ஒரு மாதிரியாகப் படவே, உங்களுடன் பகிர்ந்து சிரிக்க வினைந்தேன்...

'சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே', என்பார். ஆனால், என்னைக் கண்டு நீங்கள் சிரிக்க, உங்களைக் கண்டு நானும் சிரிக்க, பிறகு எல்லோரும் சேர்ந்து சிரிக்க, இது தவிர ஏது சந்தோஷம்?

சரி, விஷயத்திற்கு வருகிறேன்...

அன்று பேருந்தில் கக்க கக்க கக்க வென்று ஒரே சிரிப்பு சத்தம். தொடர்ந்து, ஹே ஹே ஹே என்று மற்றொன்று, ஹா ஹா ஹா வென்று வேறொன்று. பேருந்தில் பொதுவாய் காலையில் மிச்சம் வைத்த உறக்கத்தை நான் பெரும்பாலும் தொடர்வதால், முதலில் 'யாரிவார்கள்? ஏன் இந்தக் கூச்சல் போடுகிறார்கள்' என்று எரிச்சல் தான் வந்தது. சத்தம் தொடரவே, கொஞ்சம் சிரித்துவிட்டுத்தான் போகட்டுமே என்று அமைதலானேன்.

தூக்கத்தை கைவிட்டு, சிந்தையில் ஆனேன்...

சிரிப்பில் தான் எத்தனை வகை...

சிலர் அமுக்கமாய்; சிலர் ஆக்ரோஷமாய். சிலர் ஊமையாய்; சிலர் உற்சாகமாய். கவலைகள் மறந்து, உள்ளம் நிறைந்து...

முகமும் வாயும் கொஞ்சம் தளர, நெற்றியின் சுருக்கம் தானாய் மறைய, மூக்கு மட்டும் நன்றாய் புடைக்க, கண்கள் இரண்டும் ஒத்துழைக்க, பற்களனைத்தின் பாங்கும் தெறிய, அகத்தின் அழகு முகத்தில் விரிய...

கலகல கல-வென. சிலசில சில-வென...

யாரங்கே? என்ன சத்தம்?

புரண்டோடும் வெண்கலமோ, சிந்தி விட்ட சில்லறையோ, தண்ணீர் ஓடும் ஓட்டமோ, கொக்கரக்கோ கோழியோ, எச்சரிக்கும் பல்லியோ, இல்லை அது விக்கலோ, அல்ல வெறும் இருமல் தானோ?

ஒருவேளை உங்கள் உடம்புக்கு ஏதும்?

வயிற்றை கையால் அணைத்தபடி, குனிந்து நிமிர்ந்து நெளிந்தபடி, கைகள் கால்கள் உதறியபடி, வாயில் கோழை ஒழுகியபடி, கொஞ்சம் புரண்டு உருண்டபடி...

போதும் போதும் என்ற போதும், மீண்டும் மீண்டும் நினைவில் வர, குடித்த தண்ணீர் நாசியில் ஏற, புதிதாய் இருமல் துரத்தி வர, ஐயோ அம்மா ஆளை விடுங்கள், கொஞ்சமும் இனி தாங்காது...

ஒருவேளை இது சிரிப்பு தானோ!

குபீர், குபீர் என மீண்டும் குமுற, கொஞ்சம் நிறுத்தி யோசிக்க, எதற்கு என்பதும் மறந்து விட, அதனால் சிரிப்பு மீண்டும் தொடர...

"6th & 34th! Have a pleasant day!", நல்லவேளையாய் ஓட்டுனர் வாழ்த்த, சிரித்த சிரிப்பு சிந்தையில் உறைய, புன்னகை ஒன்று தானாய் மலர, துள்ளளாய் விரைந்தேன் அலுவல் நோக்கி.

அன்புடன் நான்,

~ NRIGirl

2 comments: (+add yours?)

YL சொன்னது…

நாங்கள், கணித ஆசிரியர்கள் எங்கள் அறையில் சிரிக்கும்போது கண்ணீர் வந்து அழுது சிரித்து முடிப்பவர்கள் ஹெப்சி ஆண்டி! திரும்ப கிடைக்காத அருமையான நாட்கள் அவை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கலகல-வென ரசிக்க வைத்தது...