பார்க்க என்னவோ ராஜாங்கம் தான்...

பட்டத்து இராணி அவள். அமைதியான நாடு. சீமை அமைந்திருப்பதோ அமெரிக்காவில். எதிரிகள் தொல்லை, உற்பூசல் ஒன்றும் இல்லை. நிதி நிலமை சீர்வரிசை எள்ளளவும் குறைவு இல்லை.

பார்க்க என்னவோ ராஜாங்கம் தான். ஆனால் இராஜாவும், இராணி, இளவரசர் மற்றும் இளவரசிகளையுமே கொண்டது அவள் ராஜியம்.

தந்திரி என்றோ மந்திரி என்றோ சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை. தேரடிக்கவோ, போரடிக்கவோ, பணிவிடைக்கு யாரும் இல்லை.

ஒரு நாளின் இறுதியில் இராஜாவுக்கு ஒரு காப்பி வேண்டுமானால், இராணி தான் கலக்க வேண்டும். இராணிக்கு ஒரு தேவை என்றால் இராஜா தான் உதவ வேண்டும்.

சிங்காசனத்தில் இருந்து இருவரும் இறங்கியே ஆக வேண்டும்.

ஒரு பண்டமோ பணியாரமோ இராணி தான் ஆக்க வேண்டும். 'யார் அங்கே? ஒரு காப்பி!' என்றெல்லாம் கை தட்டி கூப்பிட்டு ஒரு வேலை ஏவ முடியாது. முறுக்கா பணியாரமா இராணி தான் செய்ய வேண்டும்.

பாவம், ஆக்கி எடுத்து வளர்ந்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும். செல்லமாக வளர்ந்து விட்டிருந்தாள் இராணி. அதனால் கொஞ்சம் சிரமம் தான்.

அன்று அப்படித்தான் இராணி முறுக்கு சாப்பிட ஆசைப் பட்டாள். சூடான எண்ணையில் நேராகவே பிழிந்து நின்றாள். என்ன பதம் தவறியதோ, மாவு அச்சிலேயே ஒட்டி நின்றது. 'இராஜா! உதவி தேவை' குரல் எழுப்பினாள் இராணி. ஓடி வந்த இராஜா வேகமாக அடுப்பை அனைத்தார்.

'என்ன காரியம் செய்தாய் மகாராணி? முறுக்கு ஏன் பிழிந்தாய்? தேவையா இந்த
பிரச்சனை நமக்கு', என்று பதறினார்.

'பிள்ளைகள் விரும்புவார்களே என்று...' கொஞ்சம் இழுத்தாள் இராணி.

'அது தான் கடைகளில் கிடைக்கிறதே?', இராஜா அலறினார்.

'இல்லை, சுடச்சுட செய்து அப்படியே சாப்பிட்டால்...'.

'சூடாவது ஒன்றாவது. இருக்கிற மாவை ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கள் போதும்', என்றார் கராராய்.

இராணி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாள், அல்லது ஓய்வெடுப்பதாய் காட்டிக்கொண்டாள். இராஜாவும் பிள்ளைகளும் அக்கம் பக்கம் நகரவே மீண்டும் அடுப்பறைக்கு வந்தாள்.

பிசைந்து வைத்த மாவு பாவம் போல் உட்காந்திருக்கிறதை கண்டாள். 'முறுக்கு வரவில்லயென்றால் சீடை, இரண்டும் ஒரே ருசி தானே' என்று உற்சாகாமாய் ஆரம்பித்தாள் வேலையை. (ஆசை யாரை விட்டது?)

முதல் சுற்றிலேயே எள்ளும் கொள்ளும் வெடித்தன. பட் பட் என்று அங்கும் இங்கும் தெறித்தன சீடை உருண்டைகள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தார்கள்.

'பிரச்சனை ஒன்றும் இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். இராஜாவை தொந்திரவு செய்யவேண்டாம்', உத்தரவிட்டாள் இராணி. கேட்டால் தானே?

ஓடிச் சென்றார்கள் இராஜாவினிடத்தில். 'அம்மா உங்கள் சொல் கேட்கவில்லை. மீண்டும் அடுப்படியில் நிற்கிறார்கள், பண்டம் செய்ய', என்று வத்தி வைத்தார்கள். போன வேகத்தில் இராஜாவும் பிள்ளைகளுமாக திரும்பி வந்தார்கள்.

இம்முறை இராஜாவின் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

'போதும் மகாராணி. நீங்கள் பண்டம் செய்து தரவில்லை என்று யாரும்  குற்றம் சொல்ல மாட்டோம். இருக்கிற உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்து அமருங்கள் உங்கள் ஆசனத்தில்', என்றார் சற்று கோபமாய்.

மாவையும் காலி செய்தார் குப்பையில்.

'சரி போகட்டும்' என்று விட்டு விட்டாள் முறுக்கு ஆசையை, இராணி மகாராணி.

மற்றொரு நாள் இப்படித்தான் புட்டு செய்ய மாவு விரசினாள் இராணி. அண்டை நாட்டு இராஜாவும் இராணியும் விருந்துக்கு வந்திருந்த நேரம் அது. ஒரு குழல் அவிக்கவும் செய்தாள். எப்போதும் நன்றாக வரும் புட்டு அன்று ஏனோ அக்கிரமம் செய்தது.

விருந்தினர் முன்பு அதை எதிர்பார்க்காத இராணி, புட்டு இல்லையென்றால் இடியாப்பம் என்று மாவை மாற்றி பிசைந்தாள், ஏதோ இடியாப்பம் தனக்கு கை வந்த கலை மாதிரி.

காத்திருந்தனர் விருந்தினர்.

பொறுக்க மாட்டாத இராஜா, எதற்கும் ஒரு begal சாப்பிட்டு வையுங்கள், இனி இடியாப்பம் வர விடிந்து விடும் என்று நண்பர்களையும், இராணியையும் கவணித்து வைத்தார்.

நல்லதாய் போயிற்று. ஏனென்றால், இடியாப்பமும் பிரச்சனை செய்தது அன்று. (என்றுமே இடியாப்பம் பிரச்சனை தானே!)

சொன்னால் நம்ப மாட்டீர்கள்; கடைசியில் கொழுக்கட்டையாக மாறி நின்றது புட்டு மாவு!!

நண்பர் சிரித்தே விட்டார் - அவரும் தான் எவ்வளவு பொறுப்பார்? இராணிக்கு அதில் ஒரு சங்கடமுமில்லை என்பது போல் காட்டிக்கொண்டாள். சேர்ந்து சிரிக்கவும் செய்தாள் (பாவம் விட்டால் கொஞ்சம் அழுதிருப்பாள்).

விருந்துக்கு வந்திருந்த இராணியும் தான் அப்படித்தான் ஒரு நாள் இட்டிலி என்று ஆரம்பித்து அது உப்புமாவில் போய் நின்ற கதையை சொன்னார்.

அது தான் சாக்கு என்று வடை போண்டா ஆன கதையையும், தொவையல் சட்டினி ஆன கதையையும் பெருமையாய் பறிமாறிக்கொண்டார்கள் நம் இராஜாவும் இராணியும்.  மீண்டும் சிரித்து வைத்தார்கள் அனைவரும்.

ஆக வந்த விருந்தினருக்கு வயிற்றுக்கு உணவிட்டார்களோ இல்லையோ சிரிப்பிற்கு இட்டார்கள் உணவு. மாறி மாறி பரிமாறினார்கள். பாவம் நண்பர்கள். அன்று போனது போனது தான், இது வரை மீண்டும் வரவேயில்லை என்பது கூடுதல் செய்தி.

இப்படியாக நடக்கிறது ராஜாங்கம். ஒரு வாய்க்கு ருசியாக முறுக்கோ, காப்பியோ, தண்ணியோ சாப்பிட்டு வருஷம் எத்தனை ஆகிறது?!

இதற்காகத்தான் இராணிக்கு இந்தியா மீது ஆசை. கையை சொடுக்கினால் முறுக்கு, பண்டம், பணியாரம், சுடச்சுட காலை பலகாரம், அற்புதமாய் ஏற்ற சூட்டில் தேவையான இனிப்பில் அருமையாய் கையில் காப்பி, வேறு என்ன வேண்டும் என்று வினவி நிற்கும் சுற்றம், ...

ஆக்க முடியாத பட்சத்தில், அதை விட சுலபமாய் கடையில் கிடைக்கிறதே, நமக்கேற்ற ருசியில்?!


ம்ஹூம்... கொடுத்துவைத்திருக்க வேண்டும் அதற்கெல்லாம்... என்ன சொல்கிறீர்கள்?!

6 comments: (+add yours?)

KParthasarathi சொன்னது…

இக்கரைக்கு அக்கரைபச்சை.
அவ்வளவுதான்.
நாமெல்லோரும் ராஜா ராணி இருக்கிற இடத்தை பார்த்து பெருமூச்சு விடுகிறோம்.ஆனால் வேண்டிய பலகாரங்கள் கூப்பிடு தூரத்திலேயே இங்கு கிடைக்கும்.

NRIGirl சொன்னது…

KP: இனி எப்போ அமெரிக்கா வர்றீங்க? வரும்போது கட்டாயம் எங்க வீட்டுக்கு வர்றீங்க! சரியா?

ச ச புட்டெல்லாம் செய்து சிரமப்படுத்தமாட்டோம். நேரா கொழுக்கட்டை தான். :))

amma சொன்னது…

நுறு முறுக்கு அனுபியிருக்கிறேன் . நல்ல முறையில் வந்து சேர விரும்புகிறேன் . அன்புடன் அம்மா .

NRIGirl சொன்னது…

மிக்க நன்றி அம்மா. :)

சில்வண்டு! சொன்னது…

வேறு என்ன சொல்வது? நீங்கள் சொன்னதைத்தான் சொல்லவேண்டும், “அதெற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!”

சுவராஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் இந்தப் பதிவைதினைப் படித்தபோது சில ஞாபக அலைகள் என்னைத் தழுவி பழைய நினைவுகளில் மூழ்கச் செய்தது.

இந்த இராஜனும், இராணியும் ஒன்றினைந்து ராஜாங்கம் நடத்த தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி எடுக்க பாடுபட்டுக்க்கொண்டிருந்த காலம் அது. மூத்த இளவரசியோ இராணியின் வயிற்றில். காலம் இவர்களை அதீத சோதனைக்குள்ளாக்கிய காலகட்டம். இவர்கள் அண்டை தேசத்திற்கு விஜயம் செய்துள்ளதை அறிந்து இவர்களை சந்திக்கச் சென்றேன். என்னோடு என் நண்பர் ஒருவரும் உடனிருந்தார்.

அந்த சோதனையான காலத்திலும் இவர்கள் என்னையும் என் நண்பரையும் உபசரித்தவிதம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. நண்பரையும், என்னையும் சாப்பிட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தி இருவருக்கும் “ஆப்பம்” சுட்டுத்தந்தார் ராணி! ஆப்பம் எனும் பலகாரத்தைப் பார்த்தே பல வருடங்கள் ஆகியிருக்க, ஆப்பத்தின் வடிவம் கூட நினைவிலிருந்து கிட்டத்தட்ட மறையத்துவங்கியிருக்க, அன்று ஆப்பத்தை பார்த்ததும் ஏதோ அமுதமே கிடைத்தார்போல நானும் என் நண்பரும் மகிழ்ச்சி கண்டோம். வயிறாற உண்டோம்.

தாங்கள் கஷ்ட்டப்படும் காலத்திலும் எங்களை உபசரித்த அவர்களின் மேன்மையை திரும்பி வருகையில், வழி நெடுக என் நண்பர் சிலாகித்துக்கொண்டே வந்தார். இவர்களோடு நட்பு கொண்டிருப்பதை எண்ணி நான் புளங்காகிதம் அடைந்துகொண்டே வந்தேன். என்னை பெருமைக்குள்ளாக்கிய ஆப்பம் அது!

சில நாட்கள் கழித்து, இந்த இராஜனையும், இராணியையும், நான் விருந்துக்கு அழைத்தேன். நான் அப்போது திருமணமாகாத இளங்குமரன். என்னோடு என்னைப்போல திருமணமாகாத குமரர்களோடு தனி இராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்தேன். எங்களில் ஒரு குமரன், சமையற்கலையில் வித்தகன். இவன் சமைக்கும் கோழியிறைச்சிக் குழம்புக்கு எங்கள் இராஜ்ஜியமே அடிமை.

இவனை நம்பித்தான் நான் இராஜனையும், இராணியையும் விருந்துக்கு அழைத்திருந்தேன். ஆனால், சரியாக விருந்து தினத்தன்று, எங்கள் நளனுக்கு அதி முக்கியமான வேலை ஒன்று வந்திட, அவன் அதிகாலையிலேயே புரவி ஏறி பறந்துவிட்டான். சரி, அவனுக்கு அடுத்ததாக ஓரளவு சுமாராக சமைக்கவல்லவர்களை வைத்து ஒப்பேற்றலாம் என்று பார்த்தால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை என்று கூறி சொல்லிவைத்தார்போல ஆளுக்கொரு திக்கில் மாயமாகிவிட்டார்கள்.

மிஞ்சியது, நானும், என்னைப்போல் சமையலில் அரிச்சுவடி கூட அறியாத இன்னொரு நண்பன் மட்டும். அவனால் முடிந்ததெல்லாம். “இப்போ என்ன செய்யப்போறே?” என்று பரிதாபமாக என்னை பார்ப்பது மட்டும்தான். வாங்கி வைத்த கோழியோ என்னைப் பார்த்து வாயாற சிரிக்கிறது. ஒரு பக்கம் நண்பர்கள் மீது கோவம், மறுபக்கம் இயலாமை என்று ஆகிப்போக அம்மாவுக்கு அவசரமாக ஓலை அனுப்பி, செய்முறை பயின்று, துணிந்து இறங்கி நானே சமைக்கத் துவங்கினேன், முதல் முறையாக சமையல்கட்டோடு மல்லுக்கட்ட துணிந்தேன். அதுவும் எடுத்த எடுப்பிலேயே கோழிக் குழம்பு…!

ஒரு வேகத்தில் ஆரம்பித்துவிட்டாலும், வேகுமோ, வேகாதோ, வெந்தாலும் ருசிக்குமோ ருசிக்காதோ? வாயும் வயிறுமாக இருக்கும் இராணிக்கு தாறுமாறாக சமைத்துப்போட்டு இராஜனின் கோபத்திற்காளாகிவிட்டால், இராஜன், சிரச்சேதம் செய்யப்போவதில்லை, ஆனாலும் சிரமம் கொடுப்பது தகுமோ என்றெல்லாம் நான் குழம்பிக்கொண்டிருக்க, குழம்பு அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்க, இராஜனும், இராணியும் விருந்து வந்துசேர்ந்துவிட்டார்கள்.

திக்கித் திணறி, சங்கோஜத்தோடும் வருத்தத்தோடும் “வாழ்க்கையிலேயே முதல்முறையா சமையல் செய்கிறேன் எப்படி வருமோ தெரியல சாப்பிடறதுக்கு வேறு ஏதாவது கடையிலயிருந்து வாங்கிட்டு வரேன்” என்று சொல்ல, இராணியும் இராஜனும் கொஞ்சமும் பதட்டப்படாமல், தர்மசங்கடத்துக்கு ஆளாகாமல், புன்னகையோடு, “உப்பு போட்டிருக்கீங்கல்ல? கோழியிலே உப்பு பிடிச்சிருந்தா போதும் குழம்பு நல்லாத்தான் இருக்கும்” என்று கூறி நான் சமைத்ததையே சாப்பிட்டார்கள். நன்றாகத்தான் இருக்கிறது என் சமையல் என்று சத்தியமே செய்தார்கள். கண்டிப்பாக அந்த சமையல் ருசித்திருக்காது ஆனால் ரசித்துதான் சாப்பிடுகிறோம் என்றே இருவரும் காட்டிக்கொண்டார்கள். பிற்பாடு, என் சமையலுக்கு பல பாராட்டுகள் கிடைத்தாலும் இந்த இராஜன், இராணியிடமிருந்து பெற்ற முதல் பாராட்டுதான் அனைத்திலும் சிறந்தது என்பேன்.

பின்னர் ஒருமுறை மேலும் சில நண்பர்களோடு இவர்களை சந்திக்கச்சென்றபோது, இராணி பரிமாறிய மீன் குழம்பு…. அடடா அந்தச் சுவையை அதன் பிறகு பலநாளும் நண்பர்கள் சிலாகித்துக்கொண்டிருந்தார்கள்.

தனது பதிவில் ஏதோ, தான் சமைப்பதெல்லாம் கொழுக்கட்டை ஆகிவிடுகிறது எனும் தொணியில் குளறுபடிகளை மட்டுமே பதிந்துள்ளார். இவர் சமைப்பதிலும், உபசரிப்பதிலும் வல்லவர் என்பதை என் போன்ற நண்பர்கள் நன்கு அறிவார்கள். அதைப் பதிவது நண்பனாகிய என் கடமையும் கூட என்றே நான் கருதுகிறேன். என்ன சொல்கிறீர்கள்?

NRIGirl சொன்னது…

மலரும் நினைவுகள் மிகவும் அருமை Bawa! கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள், பரவாயில்லை. நான் மிகவும் ரசித்த விருந்து நீங்கள் அளித்த விருந்து, ஏனென்றால் அமெரிக்காவிலேயே அது தான் எங்களை விரும்பி அழைத்து உபசரித்த முதன் முதல் விருந்து. மிகவும் பெருமையாக இருந்தது எனக்கு உங்கள் உபசரிப்பு. என்றும் நன்றி.

சரி அது இருக்கட்டும், எப்பொழுது அடுத்த விருந்துக்கு வருகிறீர்கள்? நானும் என்ன தான் செய்ய வேண்டும்? விரும்பி மீண்டும் அழைக்கிறோம். ஒரு வார இறுதியில் வந்து போங்களேன்?!