அவசர அவசரமாய்...

அவசர அவசரமாய் எழுதுகிறேன், அதனால் விசாரிப்பதற்க்கு நேரமில்லை; மன்னிக்கவும். சரி பரவாயில்லை சொல்லுங்கள், எப்படி இருக்கிறீர்கள்? நானும் தான்.

போன வாரம் நாங்கள் கடிகார முள்ளை ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது போன சனிக்கிழமை இரவு பண்னிரெண்டு மணியான போது, எங்கள் புது நேரப்படி அது காலை ஒரு மணி ஆகிவிட்டது. ஆக எங்களுக்கு ஒரு மணி நேரம் குறைந்து விட்டது அன்று. இதைத்தான் Spring Forward என்று கூறுகிறோம். அதேனென்றால் சூரியன் வசந்த காலத்தில் சீக்கிரமாக எழும்பி விடுவது தான். அது எழும்புவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் எழுப்பிவிடுகிறது. சூரியன் அடையவும் நேரம் ஆகிறது. வசந்த காலம் இந்த மாதம் 20ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

இனி இலையுதிர் காலத்தில் கடிகார முள்ளை ஒரு மணி நேரம் பின்னாடி மாற்றி வைத்துக்கொள்வோம். இதை Fall Backward என்று கூறுகிறோம். இருக்கட்டும்.

அங்கு உங்கள் உலகில் என்ன விசேஷங்கள்? சரி உலகை விடுங்கள், உங்கள் வீட்டில் என்ன விசேஷம்? சூரியன் எப்படி இருக்கிறது? சந்திரன்? நட்சத்திரம்? நிறைய தெரிகிறதா?

பிள்ளைகள் சிறிதாக இருக்கும்போது நானும் பிள்ளைகளும் மாலை மயங்கும் சமையத்தில், வானத்தை பார்த்தபடி படுத்துக்கொள்வோம் - வீட்டின் பின் புறம் உள்ள சிறிய அமைப்பில். அன்று இரவு யார் முதல் நட்சத்திரத்தை பார்க்கிறார்கள் என்பது தான் எங்களுக்குள் போட்டி. முதல் நட்சத்திரம் தெரிந்த சில நொடிகளில் வானம் முழுவதும் நட்சத்திரங்கள் நிறைந்து விடும். அப்படியே நம் மனசெல்லாம் நிறைந்து விடும் - சந்தோஷத்தினால். இப்போது நட்சத்திரங்களை எதிர் பார்க்கவோ, வந்தவற்றை வரவேற்கவோ சமயம் ஒதுக்கி பல நாட்களாகிறது. முடிந்தால் சந்திரனை ரசித்துக்கொள்வோம். சிறிது மேகங்களையும். அவ்வளவு தான்.

இந்த வருடம், இந்த மாதிரி விஷயங்களுக்கு சமயம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பார்ப்போம். உலகம் தான் எவ்வளவு அழகு! அதை அனுபவிக்காமல் இருப்பது தான் எத்தனை அக்கிரமம். நாம் உலகை ரசிக்க நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் கட்டாயமாய். கஷ்டம் தான், வீடியோ கேம் (video game) பிடிகளில் இருந்து அவர்களை விலக்கி, விண்ணைப்பார், உலகைப்பார், என்று காட்டுவது ஒரு போராட்டம் தான். அப்படியே பார்த்தாலும், வேண்டா வெறுப்பாய், "ஆமா அதற்கென்ன இப்போ?" என்று சொல்பவர்களிடம் என்ன தான் பதில் சொல்ல முடியும்? ஆனாலும், நம் பிள்ளைகளல்லவா, அதனால் மீண்டும் முயற்சித்தான் செய்ய வேண்டும். 

நீங்கள் வானத்தை சமீப காலத்தில் பார்த்தீர்களா? அதில் ஒரு மூன்று நட்சத்திரம் ஒரு வரிசையில் இருக்கும் - பார்த்திருக்கிறீர்களா? பல வருடங்களுக்கு முன், நானும் என் இரண்டு தோழிகளும், ஒரு சபதம் செய்தோம் - எப்பவெல்லாம் அந்த நட்சத்திரங்களை பார்ப்போமோ, அப்பவெல்லாம் நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக்கொள்வோம் என்று. இந்த சபதத்தை வேறு இரண்டு நண்பர்களுடன் கூற, அவர்கள், 'நல்லது. நாமும் அப்படியே செய்வோம்' என்றார்கள். அந்த நட்சத்திரங்களைப் பார்த்து தான் எவ்வளவு காலம் ஆகிறது. அந்த தோழிகளின் நினைவும் அவ்வளவு தான்.

நிலாவைத்தான் எடுத்துக்கொள்ளுங்கள் - எத்தனை நினைவுகளை தூண்டிவிடுகிறது. பப்பா, அம்மா, அக்கா, தம்பி-யுடன் மொட்டை மாடியில் இருந்து வறுத்த கடலையை உரித்து சாப்பிட்டது கட்டாயம் நினைவில் வருகிறது. மெரினா பீச்சில், திகட்ட திகட்ட சிரித்து விட்டு, தோழி நிம்மி வாங்கித்தந்த மல்லிகைப் பூவையும் வைத்துக் கொண்டு, பார்த்த நிலா நினைவில் உண்டு. "கீறி எறிந்த நகத்தைப் போன்ற நிலா" என்று தமிழ் ஆசிரியை விளக்கின கவி நினைவில் உண்டு. Jim Carrey ஒரு படத்தில், நிலாவை பக்கத்தில் இழுத்து வைத்துக்கொள்ளும் காட்சி வந்து போகிறது. இன்னும் எத்தனையோ.

நம் பிள்ளைகளுக்கும் இந்த அனுபவங்கள் வேண்டும் என்கிறது என் மனது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

"ஏதோ அவசரம் என்று சொன்னாயே", என்று யாரோ கேட்பது என் காதில் விழுகிறது. நினைவூட்டினதற்கு மிக்க நன்றி. அவசரம் தான். ஏனென்று கேட்போருக்காய் சொல்லுகிறேன், "வார இறுதி முடிவதற்குள் கொஞ்சம் ஒய்வெடுத்திட வேண்டும்", என்று ஒரு ஆதங்கம். அதனால் தான் அவசரம்.

அதனால், மன்னிக்கவும்,

அவசரமாய் முடிக்...

~ NRIGirl


6 comments: (+add yours?)

KParthasarathi சொன்னது…

மாறி வருகிற இந்த உலகத்தில் ஆர்வமும் ரசனையும் மாறிக்கொண்டே வருகிறது.புதிய கண்டு பிடிப்புகள்,,மாறிய கண்ணோட்டம்,வசதிகள் எல்லாமே மனிதர்களையும் அவர்களின் குணங்களையும் மாற்றி விடுகிறது.சின்ன வயதில் சந்திரனை காட்டி குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிடும் பழக்கம் இப்போது உண்டா? பதிலாக டி வியை காண்பிக்கிறோம்.இருந்தும் குழந்தை உள்ளங்கள் மாறவில்லை.வெகுளித்தனம்,புதியதை பார்ப்பதில் ஆர்வம்,எதையும் அறிந்து கொள்ள ஆவல் அப்படியே இருக்கிறது.ஆனால் பழைய கிளு கிலுப்பை,மண் செப்புகள் போன்ற விளையாட்டு சாமான்கள் எடு படாது.அதை நல்ல வழிகளில் புதிய பார்வையில் வளர்ப்பது பெற்றோர்களை சாறும்..
அவசரமாக எழுதினாலும் சிந்திக்க வைத்து விட்டீங்க..நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நாம் எதுவோ அதுவே குழந்தைகளும்... முக்கியமாக அவர்கள் 5 வயது வரை - பார்ப்பது, கேட்பது, ரசிப்பது, ருசிப்பது என பலவும் தான் அவர்களின் வாழக்கை முழுவதும் இருக்கும் குணங்கள்...

NRIGirl சொன்னது…

மிக்க நன்றி நண்பர்களே! உங்கள் கருத்துக்கள் கண்டு சந்தோஷம்.

Paradesi at New York சொன்னது…

நானும் என் நண்பர்களும் இந்த மூன்று நட்சத்திரங்களை ஜோசப் , மேரி ஜீசஸ் என்று அழைப்போம்

bkaseem சொன்னது…

இதைப் படித்த பிறகுதான் நானும் யோசித்தேன், எத்தனை காலம் ஆனது வானம் பார்த்து? நட்சத்திரம் எண்ணி? நிலவை இரசித்து? அட, சுத்தமான இயற்கை காற்றை சுவாசித்து?

பல மாதங்களாக அடைக்கப்பட்டே இருக்கிறது வீட்டின் ஜன்னல் கதவுகள். இயற்கை காற்று வீட்டில் புகுந்து வெளியேற வழி இல்லை. இயந்திரம் இயற்கை காற்றினை சூடேற்றியோ குளிரூட்டியோ தரும் காற்றே தேங்கிய வெள்ளம் போல தேங்கிக் கிடக்கிறது. வறண்ட காற்று உடலையும் மனதையும் வரட்சியாகவே வைத்திருக்கிறது. மூக்கு எரிகிறது, குருதி வழிகிறது.

வீட்டை விட்டு வெளியேறி நேராக காரிலோ, பஸ்ஸிலோ மீண்டும் இயந்திரக் காற்று. பிறகு அலுவலகத்தில் அதே இயந்திரக் காற்று. ஒரு நாளில் இயற்கை காற்றினை எத்தனை நேரம் சுவாசிக்கிறோம்? அதிக பட்சமாக சிலபல நிமிடங்கள் மட்டுமே.

இயற்கையான சீதோஷ்ண நிலையில் காற்றும் தண்ணீரும் பயண்படுத்தப் படுவதே இல்லை.

பரந்து விரிந்த வானின் அழகையும், பசுமையில் செழிக்கும் இயற்கையின் எழிலையும் தொலைகாட்சியில்… அட போங்கள், அலைபேசியில் இத்தணூண்டாக பார்த்து ஒரு ‘லைக்’ அடிப்பதென்று மட்டும் இரசனை சுருங்கிவிட்டது.

எல்லாமே சுருங்கிவிட்டது. அழைக்கும் பெயர், எழுதும் செய்தி, வெளிக்காட்டும் உணர்வு, சமுதாயத்தில் உண்மை, எல்லாமும் எல்லாமும் சுருங்கிவிட்டது. ஒரிடத்தில் ஒன்றாக அமர்ந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் ஒன்றும் உரையாடாமல் அவரவர் அலைபேசியில் அவரவர் உலகில் தனியே உலவும் நிலைதான் இன்று. அதிலும் எதையேனும் இரசித்தால் அதையும் கூட்டத்தோடு சொல் வழி பகிர்ந்து மகிழாமல், செல் வழி பகிர்ந்து (share), உணர்வினை குறியீட்டால் குறிப்பிட்டு :-) :-( ;-) :-0.......! என்னெவென்பது?

எல்லாமும் எல்லாமும் சுருங்கிவிட இந்தப் புலம்பலை மட்டும் நீட்டி முழக்கிக்கொண்டு போவானேன்? சரி, சுருக்கிக்கொள்கிறேன்.

NRIGirl சொன்னது…

எவ்ளோ அழகா எழுதுறீங்க Bawa! நிறைய எழுதுங்க, அடிக்கடி எழுதுங்க. ஆவலுடன் காத்திருக்கிறோம் சில் வண்டின் ரீங்காரத்திற்கு...